மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பிற்கு ஒத்துழைப்பு அவசியம்: நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க இதுவே நேரம்| Dinamalar

தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பிற்கு ஒத்துழைப்பு அவசியம்: நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க இதுவே நேரம்

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Share
சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் முயற்சியில், பொதுமக்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. எனவே, மழைக்கு முன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை, அனைத்து வீடுகளிலும் அமைத்தால், வரும் கோடைக் காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.சென்னையின் தொழில் வளர்ச்சி, விரிவாக்கம், மக்கள்தொகை பெருக்கம் போன்றவை காரணமாக, நீர் தேவை அதிகரித்து, தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும்,
அவசியம், மழைநீர் சேகரிப்பு, கட்டமைப்பு, ஒத்துழைப்பு, நிலத்தடி நீர்மட்டம், மழை, கோடை, பலன்

சென்னையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தும் முயற்சியில், பொதுமக்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. எனவே, மழைக்கு முன், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை, அனைத்து வீடுகளிலும் அமைத்தால், வரும் கோடைக் காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
சென்னையின் தொழில் வளர்ச்சி, விரிவாக்கம், மக்கள்தொகை பெருக்கம் போன்றவை காரணமாக, நீர் தேவை அதிகரித்து, தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், சென்னையின் பரப்பளவான, 426 சதுர கி.மீ.,யில், மழைநீரை தேக்கி வைக்கும் வசதிகள் குறைவாகவே உள்ளன.ஆர்வம் குறைவுசென்னையை பொறுத்தவரை, குடிநீர் தேவைக்காக, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார் ஆகிய மாவட்டங்களையே நம்பி உள்ளது. இந்த மாவட்டங்களின், 1,116 நீர்நிலைகள் தான், சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்திசெய்கின்றன.இதை தவிர, வீராணம் கூட்டு குடிநீர், கிருஷ்ணா நீர் உள்ளிட்டவற்றால், சென்னையின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், சென்னை மாநகரின் தினசரி குடிநீர் அளவான, 100 கோடி லிட்டர் நீர் தேவையை, முழுமையாக பூர்த்தி செய்ய முடிவதில்லை.இதன் காரணமாக, நடப்பாண்டில், கோடை துவங்கும் முன், சென்னை மற்றும் புறநகர்வாசிகள், காலி குடங்களுடன் தண்ணீருக்காக வீதி வீதியாக அலைந்தனர்.
தற்போது வரை, மாநிலம் முழுவதும் பரவலாக தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.இதற்கு, நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றதும் முக்கிய காரணம் என, தமிழக அரசு கூறுகிறது.அடுத்த கோடைக் காலத்திலும், இப்பிரச்னை ஏற்படாமல் தடுக்க, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, வீடுகள் தோறும் செயல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, சென்னையில், புதிதாக, இரண்டு லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதற்காக, வார்டுக்கு, ஒரு குழு என, 200 குழுக்களை நியமித்துள்ளது. இந்த குழுவினர், வீடுகள் தோறும் ஆய்வு செய்துவருகின்றனர்.எந்தெந்த கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை என்பதையும், இருக்கும் கட்டடங்களில், செயல்பாட்டில் உள்ளதா என்பதையும் ஆராய்கின்றனர்.

இதுவரை, 2 லட்சத்து, 468 கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து, ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.இதில், ஒரு லட்சத்து, 15 ஆயிரத்து, 779 கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டடமைப்புகள் உள்ளன. 34 ஆயிரத்து, 538 கட்டடங்களில், சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. 62 ஆயிரத்து, 151 கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை.மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைப்பது மற்றும் புதிதாக மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த, பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது.குறிப்பாக, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பிற்கான பணத்தை, தாங்களே செலவிட வேண்டும் என்பதால், பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதாக, ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, அரசு கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல், உறை கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை, மாநகராட்சி மேற்கொள்கிறது.அதே வகையில், பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்தல் மற்றும் புதிதாக அமைப்பதற்கு, வீட்டின் உரிமையாளர்களுக்கு, ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் உள்ள, 45 ஆயிரம் தெருக்களில், மழைநீரை சேகரிக்கும் வகையில், உறை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.சமாளிக்க முடியும்இதை தவிர, 183 பொது கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த கிணற்றை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து, நேரடியாக குழாய் வாயிலாக, மழைநீர் கிணற்றில் விழும் வகையில் பணிகள் நடைபெற உள்ளன.இந்த பணிகள் அனைத்தையும், இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களும் தங்கள் வீடுகளில், மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால், வரும் கோடையில், தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தண்ணீர் பஞ்சத்திலும் வற்றாத வீடுசென்னையில், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையிலும், தி.நகர் காவேரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அவர்கள் வீட்டில், எப்போதும் போல், தண்ணீர் கிடைத்தது. இதற்கு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முக்கிய காரணம் என்கின்றனர்.

இது குறித்து, வீட்டில் வசிக்கும் கவுதமன் கூறியதாவது:எங்கள் வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். இந்த வீட்டில், நான்கு குடும்பங்கள் வசித்து வருகிறோம். வீட்டில் அனைத்து தேவைகளுக்கும் நிலத்தடி நீர் மட்டுமே, எங்களுக்கு ஆதாயமாக உள்ளது.நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்து, குடிநீராக பயன்படுத்துகிறோம். வீட்டின் வளாகத்தில் விழும் அனைத்து மழைநீரையும், நிலத்திற்குள் அனுப்புகிறோம். இதன் பலனாக, நிலத்தடி நீர் எப்போதும் போல் எங்களுக்கு கிடைத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X