புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா, காங்., கட்சியின் இடைக்கால தலைவர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டுள்ள பேனரில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் படம் இடம்பெற்றுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தலில் காங்., பெற்ற படுதோல்விக்கு பொறுப்பேற்று ராகுல், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சமாதானப்படுத்தியும் ராகுல் தனது ராஜினாமாவை திரும்பப் பெற மறுத்துவிட்டார். இதனால் நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய தலைவரை தேர்வு செய்யும் முடிவுக்கு காங்., காரியகமிட்டி வந்தது.
கட்சி தலைவர் பதவிக்கு பலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டது. ராகுல் கூறியதால் சோனியா குடும்பத்தை சேராத ஒருவர் தான் கட்சி தலைவர் ஆக நியமிக்கப்பட உள்ளார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சோனியா இடைக்கால தலைவராக நியமிக்கப்படுவதாக காரிய கமிட்டி முடிவு செய்தது.

சோனியா, இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அவரை வாழ்த்தி டில்லியில் உள்ள காங்., கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனர் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சோனியாவை வாழ்த்து வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில் சோனியாவின் படத்திற்கு மேல் ராகுல், பிரியங்கா மற்றும் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் படங்கள் இடம்பெற்றுள்ளது.
கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி., என்ற முறையில் ராகுலின் படமும், பொதுச் செயலாளர் என்ற முறையில் பிரியங்காவின் படமும் இடம்பெற்றுள்ளது என்றால், கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாமல், பல மோசடி வழக்குகளில் சிக்கி உள்ள ராபர்ட் வாத்ராவின் படம் சேர்க்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் காங்., வாரிசு பட்டியலில் ராபர்ட் வாத்ராவும் இணைந்துள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE