புதுடில்லி : காஷ்மீருக்கு வரும்படி கவர்னர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுத்திருப்பது உண்மையானது அல்ல என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் சூழல் குறித்து ராகுல் தவறான தகவல்களை பரப்புவதாகவும், வேண்டுமானால் அவர் இங்கு நேரில் வந்து சூழலை பார்க்கட்டும் என அழைப்பு விடுத்தார். காஷ்மீர் கவர்னர் அழைப்பு விடுத்த சிறிது நேரத்திலேயே அதை ஏற்பதாக ராகுல் பதிலளித்திருந்தார். மேலும், உங்களின் அழைப்பை ஏற்று காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு வருகிறேன். நாங்கள் விமானம் எல்லாம் கேட்கவில்லை. அதற்கு பதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக பயணித்து மக்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும், ராணுவ வீரர்களையும் சந்திக்க வழிவகை செய்யுங்கள் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த காஷ்மீர் கவர்னர், காஷ்மீர் சூழலை வைத்து ராகுல் அரசியல் செய்ய பார்க்கிறார். எதிர்க்கட்சி தலைவர்களிடமும் மக்களிடமும் பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார். அவர் காஷ்மீர் வருவதற்கு நிபந்தனைகளை விதிக்கிறார் என்றார்.
இந்நிலையில் இது பற்றி டுவிட்டரில் ராகுலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ராகுல் நிபந்தனை விதிக்கிறார் என கூறுவது அபத்தமானது. சுதந்திரமாக அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று தான் ராகுல் கேட்டுள்ளார். இது எப்படி நிபந்தனையாகும்? காஷ்மீர் கவர்னர் ராகுலுக்கு விடுத்த அழைப்பு உண்மையானது அல்ல. பிரசார கருவியாக இதனை பயன்படுத்த அவர் பார்த்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளதாலேயே 370 சட்டப்பிரிவை பா.ஜ., ரத்து செய்துள்ளது. இந்துக்கள் அதிகமாக இருந்தால் 370 பிரிவை ரத்து செய்திருக்காது என சர்ச்சைக்குரிய வகையில் சிதம்பரம் டுவீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE