கையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க உத்தரவு

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (141)
Share
பள்ளித்துறை, வில்லங்க உத்தரவு,மாணவர்கள்,  வண்ணக் கயிறு

சென்னை: ஜாதி அடையாளமாக, மாணவர்கள், கையில் வண்ண கயிறு கட்டி வருவதையும் நெற்றியில் திலகம் இட்டு வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் எங்கேயோ ஏதோ ஒன்று நடந்தால் உடனே ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சேர்த்து ஒரேயடியாக உத்தரவு போடுவது நமது அதிகாரிகளின் வழக்கம். அந்த உத்தரவின் பின் விளைவுகளை அவர்கள் யோசிப்பதில்லை. அது பள்ளிக் கல்வித் துறையிலும் தொடர்கிறது. ஏதோ ஒரு பள்ளியில் ஜாதிகளை குறிக்கும் வகையில் மாணவர்கள் கையில் வண்ண கயிறுகளை கட்டி உள்ளதாக செய்தி வெளியானது. உடனே அத்துறையின் இயக்குனர் கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சில பள்ளிகளில், மாணவர்கள் வண்ண கயிறுகளை கைகளில் கட்டியுள்ளனர். அவை, சிகப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிறத்தில் உள்ளன. அதேபோல, மோதிரம் அணிந்துள்ளனர்; நெற்றியில் திலகமிட்டுள்ளனர். தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டுவதற்காக, இவ்வாறு அணிந்துள்ளனர். இதனால், மாணவர்கள் இடையே, மோதல் ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களை அனுமதிக்கக் கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு சம்பவம் நடந்தால், அது மாநிலம் முழுவதும் நடப்பதாக அர்த்தமா? அப்படியே தவறு நடந்தால், எங்கு நடந்ததோ அங்கு மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே முறை. அதை விடுத்து, அனைத்து பள்ளிகளிலும் நடவடிக்கை எடுக்க சொல்வது சரியா.கையில் கயிறு கட்டுவது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. இதில் ஜாதி எங்கு இருந்து வந்தது.இதைவிட பெரிய காமெடி, நெற்றியில் திலகம் இடுவதை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு தான். நெற்றியில் திலகம் இடுவது மத நம்பிக்கையோ ஜாதி நம்பிக்கையோ அல்ல. அது, இந்திய கலசாரம், பண்பாடு சார்ந்தது. நீறு இல்லா நெற்றி பாழ் என்ற பழமொழியே இருக்கிறது. கிறிஸ்வர்களிலேயே சில பிரிவினர் திலகம் இடும் வழக்கத்தை வைத்துள்ளனர். அப்படி இருக்க திலகத்தையும் தடுக்கச் சொல்வது என்ன நியாயம்.

சில பண்டிகைகளின்போது இந்துக்கள் கையில் கயிறு கட்டுவது வழக்கம். ராக்கி கயிறு கட்டுவது, குல தெய்வங்களுக்கு விரதம் இருக்கும்போது மஞ்சள் துணியோ கயிறோ கட்டுவது, திருப்பதி, பழனி கோயில்களுக்கு சென்று வந்தால் கறுப்பு கயிறு கட்டுவது வழக்கம். இவை எல்லாமே மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். ஜாதி தொடர்பானவை அல்ல. இதில் தலையிடுவது அவர்களது உணர்வுகளை புண்படுத்துவது போல் அமையாதா.இப்படி ஒரு காமெடியான உத்தரவைப் போட்டு, கல்வித் துறையே மாணவர்களை சண்டை போட துாண்டுகிறதா. ஜாதி ரீதியாக வண்ணக் கயிறு கட்டலாம் என்ற ஒரு புது வழியை இந்த உத்தரவு மூலம் பள்ளித் துறையே மாணவர்களுக்கு சொல்லித் தருகிறது.


latest tamil news
இதுவே, கிறிஸ்துவ மாணவரோ, ஆசிரியரோ சிலுவை அணிந்து வந்தாலோ, முஸ்லீம் மாணவர்கள் தொப்பி அணிந்து வந்தாலோ இவர்கள் என்ன செய்வார்கள். அதை தவறு என்று சொல்ல முடியுமா.ஆக, பள்ளிக் கல்வித்துறையின் இந்த உத்தரவு ஜாதி பிரச்னையை மட்டுமல்ல, மதப் பிரச்னையையும் கிளப்பி விடும் போல் உள்ளது. அவரவர் நம்பிக்கைகளை அவர்கள் பின்பற்றிக்கொள்ளட்டும். மற்றவர்களின் மத உணர்வுகளில் தலையிடக் கூடாது. எனவே இந்த உத்தரவை வாபஸ் பெற இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X