புதுடில்லி: ''எந்த நிபந்தனையுமின்றி, காஷ்மீருக்கு வரத் தயார்; எப்போது வர வேண்டும் என்பதை, கவர்னர் கூற வேண்டும்,'' என, காங்கிரஸ், எம்.பி., ராகுல், கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டத்தை, மத்திய அரசு ரத்து செய்தது. இதனால், காஷ்மீரில் வன்முறை நடப்பதாக, காங்கிரஸ், எம்.பி., ராகுல் கூறினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, ஜம்மு - காஷ்மீர் கவர்னர், சத்யபால் மாலிக், 'ராகுல், தேவையில்லாமல் பதற்றம் கிளப்புகிறார். காஷ்மீருக்கு வந்து, நிலைமையை அறிந்து கொள்ள, அவருக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயார்' என்றார்.
இதற்கு பதில் அளித்த ராகுல், 'மக்களை சுதந்திரமாக சந்திக்க, எனக்கு அனுமதி அளித்தால், காஷ்மீருக்கு வரத் தயார்; ஹெலிகாப்டர் தேவையில்லை; நானே வருகிறேன்' என்றார். இதையடுத்து, 'ராகுல், காஷ்மீர் வருவதற்கு, நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆனால், அவர் நிபந்தனை விதிக்கிறார்' என்றார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில், ராகுல் கூறியதாவது: கவர்னர் அழைப்பை ஏற்கிறேன். ஜம்மு - காஷ்மீருக்கு வந்து, மக்களை சந்திக்க தயார். எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எப்போது வர வேண்டும் என்பதை மட்டும், கவர்னர் கூற வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE