6வது முறை! செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார் மோடி| Dinamalar

6வது முறை! செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார் மோடி

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019 | கருத்துகள் (3) | |
புதுடில்லி: நாட்டின், 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து ஆறாவது முறையாக, டில்லி செங்கோட்டையில் கொடியேற்றி, சுதந்திர தின உரையாற்ற உள்ளார். இதில், 'ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் உட்பட பல பிரச்னைகள் பற்றி பேசுவதுடன், முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்' என,
மோடி, செங்கோட்டை, தேசிய கொடி

புதுடில்லி: நாட்டின், 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து ஆறாவது முறையாக, டில்லி செங்கோட்டையில் கொடியேற்றி, சுதந்திர தின உரையாற்ற உள்ளார். இதில், 'ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் உட்பட பல பிரச்னைகள் பற்றி பேசுவதுடன், முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்' என, எதிர்பார்க்கப்படுகிறது.


வழக்கம்:

ஆங்கிலேயர்களிடமிருந்து, 1947, ஆகஸ்ட், 15ல், நாடு சுதந்திரம் பெற்றது. 73வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமராக பொறுப்பேற்ற பின், 2014ல், டில்லி செங்கோட்டையில், நரேந்திர மோடி, முதல் முறையாக தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து ஆறாவது முறையாக, செங்கோட்டையில், இன்று காலை, தேசிய கொடியை ஏற்றி, பிரதமர் மோடி பேசுகிறார். மேலும், இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், நடக்கும் முதல் சுதந்திர தின விழா இது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, சுதந்திர தின உரையில், சில முக்கியமான திட்டங்களை அறிவிப்பது, பிரதமர் மோடியின் வழக்கமாக உள்ளது. விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம், 'ஸ்வச் பாரத், ஆயுஷ்மான் பாரத்' உள்ளிட்டவற்றை, சுதந்திர தின விழா உரையில் தான், பிரதமர் மோடி அறிவித்தார். அதனால், இம்முறையும், சுதந்திர தின உரையில், முக்கிய திட்டங்களை, மோடி அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த, 370வது சட்டப்பிரிவு, சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு, பார்லி மென்ட் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.


வரவேற்பு:

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, நாடு தழுவிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், பிரதமரின் உரையில், இந்த விவகாரம் நிச்சயம் இடம் பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது. அத்துடன், பொருளா தார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு பற்றியும், பிரதமர் பேசுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு முன், பல மாநிலங்களில், கடும் வறட்சி நிலவியது. இப்போது, பல மாநிலங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், நீர்நிலைகள் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு தொடர்பான திட்டங்களையும் மோடி அறிவிப்பார் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.


அபிநந்தனுக்கு, 'வீர்சக்ரா' விருது:டில்லியில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில், 'விங் கமாண்டர்' அபிநந்தனுக்கு, 'வீர்சக்ரா' விருது வழங்கப்பட உள்ளது. பாலகோட் தாக்குதலை தொடர்ந்து, பிப்., 27ல், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின், 'எப் - 16' ரக போர் விமானங்கள் புகுந்தன. அவற்றை, நம் விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர். பாக்., போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய, நம் விமானப்படை, விங் கமாண்டர், அபிநந்தன், 'பாராசூட்' மூலம் தப்பிக்கும் போது, எதிர்பாராதவிதமாக, பாகிஸ்தான் பகுதியில் விழுந்து, அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கினார். பின், இந்தியா கொடுத்த நெருக்கடிக்கு பயந்து, அபிநந்தனை இரண்டே நாட்களில், பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தனின் வீரத்தை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில், வீர்சக்ரா விருது வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


பாலகோட் தாக்குதல்; வீரர்களுக்கு விருது:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பிப்., 14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்., 26ல், நம் விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, குண்டுகளை வீசி தகர்த்தன. இதில், 200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படை வீரர்கள், 'விங் கமாண்டர்' அமித் ரஞ்சன், 'ஸ்குவாட்ரன் லீடர்கள்' ராகுல் பசோயா, பங்கஜ் புஜேட், பி.கே.என்.ரெட்டி, ஷஷாங் சிங் ஆகியோருக்கு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'வாயு சேனா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


வீரதீர செயல்களுக்கான விருது:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில போலீசாருக்கு, ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 180 விருதுகள், வீரதீர செயல்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள, மாநில போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 114 பேர், வீர தீர செயல் விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நக்சல் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசாரில், 62 பேரும், வடகிழக்கு மாநிலங்களில், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், நான்கு பேரும், வீரதீர செயல் விருதுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் உயிர் தியாகம் செய்த ஒன்பது போலீசாரும், இதில் அடங்குவர். வீரதீர செயல் விருதுகளுக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 72 வீரர்கள், ஜம்மு - காஷ்மீர் போலீசார், 61 பேர், ஒடிசா போலீசார், 23 பேர், சத்தீஸ்கர் போலீசார், ஒன்பது பேர், எல்லை பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றில், தலா ஐந்து பேர், தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


மூன்றடுக்கு பாதுகாப்பு:

சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில், தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டில்லியில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். டில்லியில் உள்ள உயரமான கட்டடங்களில், துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி, தேசிய கொடி ஏற்ற உள்ள, செங்கோட்டை பகுதி முழுவதும், பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலமும், கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லியில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார், துணை ராணுவ படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யார் சுற்றி திரிந்தாலும், அவர்களை பற்றி உடன் தகவல் கொடுக்க, பொது மக்களை, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஓட்டல்களில் தங்கியுள்ளோரையும், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X