பொது செய்தி

தமிழ்நாடு

குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்ட தடை மலை கிராம மக்கள் மகிழ்ச்சி

Updated : ஆக 15, 2019 | Added : ஆக 15, 2019
Share
Advertisement

பேரூர்:கோவை அருகே, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், வீடுகள் கட்டும் திட்டத்துக்கு, சென்னை ஐகோர்ட் நேற்று தடைவிதித்ததால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள காளிமங்கலத்தில், 600 வீடுகள், தென்கரையில், 1,500, பச்சனம்வயல், 70 என, மொத்தம், 4,710 வீடுகள் கட்டும் பணியை தமிழக குடிசை மாற்று வாரியம் துவங்கியுள்ளது.வனவிலங்குகளின் வலசைப்பாதைகளை மறித்து வீடுகள் கட்டப்படுவதால், கிராமங்களுக்குள் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நுழையும் அபாயம் உள்ளதாக கூறி, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, காளிமங்கலம் கிராம மக்கள் ஜூன், 12ல் கட்டுமான இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து, நமது நாளிதழில், 'ஹாக்கா' கமிட்டி விதிகளை சுட்டிக்காட்டி படங்களுடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, ஒரு அமைப்பு சார்பில், சென்னை ஐகோர்ட்டில் கட்டுமானங்களுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு துறைகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு,விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
சில நாட்களுக்கு முன், வனத்துறை சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது., சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. கட்டுமான பணிக்கு தடைவழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், 'திட்டத்துக்கு நகர அமைப்புத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் பரிந்துரை மட்டுமே பெறப்பட்டுள்ளது. ஒப்புதல் வழங்கப்படவில்லை' என, ஆவணங்களை சமர்ப்பித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'கட்டுமானம் நடக்கும் மலைப்பகுதியில் செயல்பட்ட, தனியார் கல்லுாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில், 100 மீட்டருக்கு அருகில் தான், குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்படுகிறது' என வாதாடினார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மலை பாதுகாப்பு அமைப்பின் ஒப்புதல் பெறாதவரை வீடு கட்டும் திட்டப்பணிக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

மலை கிராம மக்கள் மகிழ்ச்சி

கவிதா, 21: வனப்பகுதி அருகே, கட்டுமான பணி துவங்கியதில் இருந்து, அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் முறையிட்டு தோற்றுப் போனோம். இறுதியில் சட்ட ரீதியாக வெற்றி கிடைத்துள்ளது.

வசந்தாமணி, 45: மலையடிவாரத்தில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. அனைத்தும் மானாவாரி நிலங்கள். வனவிலங்குகள் வழித்தடம் மறிக்கப்படுவதால், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமும் பறிபோகும். எங்கள் கோரிக்கைக்கு நீதி கிடைத்துள்ளது.

ரவி, 43: வீடு கட்டத்துவங்கியதில் இருந்து, யானைகளின் நடமாட்டம் உள்ளது. கடந்த, இரண்டு வாரங்களாக, மூன்று யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. இப்போதே இப்படியென்றால், வருங்காலத்தை நினைக்கவே பயமாக உள்ளது. நீதிபதிகள் தீர்ப்பு நிம்மதியளிக்கிறது.

மோகன், 19: வீடுகள் கட்டும் திட்டத்துக்கு எதிராக முற்றுகை, ரோடு மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இறுதியில், நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. புதியதாக வருவோர், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், வருங்கால சந்ததியர் உள்ளிட்ட அனைத்து தரப்புக்காகவே போராடினோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X