பொது செய்தி

இந்தியா

ரூ.3.5 லட்சம் கோடி! அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீர் வழங்க புதிய திட்டம்

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி: தனது ஆறாவது சுதந்திர தின விழா உரையில் பிரதமர் நரேந்திர மோடி 'முப்படைகளை ஒருங்கிணைக்கும் தலைமை தளபதி' பதவி உருவாக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார். நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் 3.5 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தையும் அறிவித்தார். 'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நீர் சேமிப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.


நாட்டின் 73வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பல்வேறு பிரச்னைகள் குறித்து தனது உரையில் குறிப்பிட்டார். "கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றி வந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்" என அவர் குறிப்பிட்டார்.


முப்படைகளுக்கு தலைமை தளபதி:


கடந்த 1999ல் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரைத் தொடர்ந்து ராணுவத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து நரேஷ் சந்திரா தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 'முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் தலைமை தளபதி இருக்க வேண்டும்' என பரிந்துரை செய்திருந்து. பல முன்னாள் ராணுவத் தளபதிகள், நிபுணர்களும் இதே கருத்தை முன் வைத்தனர்.
Advertisement


தற்போதைய நிலையில் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை என முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் வகையில் முப்படை தளபதிகள் குழுவுக்கு தலைவர் என்ற பதவி உள்ளது. முப்படை தளபதிகளில் 'சீனியராக' இருப்பவர் தலைவராக இருப்பார். அதன்படி தற்போது விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா தலைவராக உள்ளார்.

கடந்த 19 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் 'முப்படைகளை ஒருங்கிணைக்கும் தலைமை தளபதி பதவி உருவாக்கப்படும்' என தற்போது பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது பாதுகாப்பு துறையில் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான சீர்திருத்தமாக பார்க்கப்படுகிறது.


திருக்குறள்:


அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் வகையில் 'ஜல் ஜீவன்' இயக்கம் துவக்கப்பட உள்ளது. இதற்காக 3.5 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. "நாடு முழுவதும் உள்ள வீடுகளில் 50 சதவீதத்துக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இந்த வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும்" என மோடி குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வறட்சி நிலவியது; தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் பருவமழை தீவிரமடைந்ததால் கேரளா கர்நாடகா மஹாராஷ்டிரா என பல மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நீர் வளத்துக்காக தனியாக 'ஜல சக்தி' என்ற அமைச்சரவை உருவாக்கப்பட்டு நீர் சேகரிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தனது உரையில் 'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி கடந்த 70 ஆண்டுகளில் மேற்கொண்டதைவிட அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீர் சேகரிப்புக்கான முயற்சிகள் மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


காஷ்மீர் விவகாரத்தில் பதிலடி:


ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங். உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தப் பிரச்னை குறித்து சுதந்திர தின உரையில் மோடி கூறியதாவது: மீண்டும் பதவியேற்ற 10 வாரங்களுக்குள் மக்களின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. கடந்த 70 ஆண்டுகளாக 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகள் ஜம்மு - காஷ்மீரில் இருந்தன. இவற்றால் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என முந்தைய அரசுகள் நினைத்திருந்தால் அதை ஏன் நிரந்தர சட்டமாக்கவில்லை. ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு புதிய இறகுகளை நாங்கள் அளித்துள்ளோம். இனி அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தற்போது ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் உருவாகியுள்ளது. இவ்வாறு கூறினார்.


பொருளாதார சீர்திருத்தம்:


அடுத்த ஐந்து ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2016 மற்றும் 2017ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை தாண்டியது. ஆனால் தற்போது 5.8 சதவீதமாக உள்ளது. "இந்த இலக்கு சாத்தியமா என்று கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறு கேள்வி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால் சாத்தியமில்லை. கடினமான விஷயத்தை முயற்சி செய்தால் அது சாத்தியம். கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 140 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது ஆனால் கடந்த ஓராண்டில் மட்டுமே மேலும் 70 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளோம். அதனால் 350 லட்சம் கோடி ரூபாய் இலக்கு சாத்தியமே. இதை எட்டும் வகையில் 100 லட்சம் கோடி ரூபாயில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்" என மோடி கூறினார்.


ஜாலியா சுத்துங்க!


ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் புள்ளி விபரங்களின்படி கடந்த 2017ல் 2.3 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இது 2019ல் 5 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2017ல் வெளிநாடுகளில் இருந்து ஒரு கோடி பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்க முடியும். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு மோடி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 2022க்குள் நம் நாட்டில் உள்ள குறைந்தபட்சம் 15 சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள். "தற்போது நீங்கள் செல்லும் இடத்தில் நல்ல ஓட்டல் போன்ற வசதிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதிகமான மக்கள் பயணம் செய்வதன் மூலம் இந்த வசதிகள் அதிகரிக்கும்" என மோடி கூறியுள்ளார்.


சிறப்பம்சங்கள்!


டில்லி செங்கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 95 நிமிடங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அதன் முக்கிய அம்சங்கள்:

* ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதால் ஒரே நாடு ஒரே அரசியல் சாசனம் சாத்தியமாகியுள்ளது

* மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருவது எதிர்கால சந்ததியினருக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்

* சுற்றுலா வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வரும் 2022க்குள் உள்நாட்டில் உள்ள குறைந்தபட்சம் 15 சுற்றுலா மையங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும்

* முப்படைகளுக்குள் சிறந்த ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் வகையில் 19 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட முப்படைகளை ஒருங்கிணைக்கும் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட உள்ளது

* லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்

* அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவது சாத்தியம்

* அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் 100 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும்

* தொழில் செய்வதற்கு மிகவும் உகந்த நாடுகள் பட்டியில் 50 இடங்களுக்குள் இந்தியாவை கொண்டு வருவோம்

* அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் 'ஜல் ஜீவன்' இயக்கம் 3.5 லட்சம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்

* ஜி.எஸ்.டி. வரி மூலம் ஒரே நாடு ஒரே வரி சாத்தியமானது. அதுபோல் மின்சார துறையில் ஒரே நாடு ஒரே தொகுப்பு உருவாக்கப்படும்

* முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலேயே முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

* பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை தொடரும்

* கடந்த 2014 - 2019ல் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் விருப்பங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்

* கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை சீரழித்து வந்த ஊழல் கறுப்புப் பண பிரச்னைகள் ஒடுக்கப்படும்

* மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கு குறைவாக இருக்கும். தங்களுடைய வாழ்க்கையை மக்களே தீர்மானித்து கொள்வர்

* திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியா உருவாக்கப்படும்

* ரசாயன உரங்களை பயன்பாட்டை விவசாயிகள் குறைத்து இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்.


சுதந்திர தின துளிகள்:


* தொடர்ந்து ஆறாவது முறையாக சுதந்திர தினத்தையொட்டி டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

* சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களின்போது தலைப்பாகை அணிவது மோடியின் வழக்கம் நேற்றும் அவர் 'லஹேரியா' வகை தலைப்பாகையை அணிந்திருந்தார்

* சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக ராஜ்காட் பகுதியில் மஹாத்மா காந்தியின் நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார்

* நிகழ்ச்சிகள் முடிந்து புறப்படும்போது தன் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த குழந்தைகளை நோக்கி மோடி சென்றார். தேசியக் கொடியின் நிறத்தில் ஆடைகள் அணிந்திருந்த பள்ளிக் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொண்டு கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்

* நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் டில்லியைச் சேர்ந்த சில பள்ளி மாணவர்கள் அங்கு வீசப்பட்டிருந்த குப்பைகளை சேகரித்து மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்கினர்

*அதேபோல் நீர் சேகரிப்பு குறித்து மோடி கூறியதும் சிறுவர் சிறுமியரை வெகுவாக ஈர்த்துள்ளது. 'அதிக அளவுக்கு தண்ணீர் கிடைப்பவர்களுக்கு அதன் அருமை தெரியாது. எங்களால் முயன்ற அளவுக்கு நீரை சேமிப்போம்' என அவர்கள் கூறினர்

* டில்லியில் பல அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. டில்லி போலீஸைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருடன் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். செங்கோட்டை பகுதியில் மட்டும் 500 சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
16-ஆக-201923:26:18 IST Report Abuse
spr "தமிழ்நாடு, நீர்வளம் மிக்க மாநிலமாக, விரைவில் உருவாகும்" இப்படிச் சொல்லித்தான் மத்திய அரசின் பல கோடிகளை "ஆட்டை " போட நம் மாநில ஆளும் கட்சி பல திட்டங்களை, முன்பே செய்யாமல், மழை வரும் காலத்தில் செய்ய நிதி ஒதுக்கியுள்ளது இது போல கலைஞர் காலத்திலும் பல்லாயிரம் கோடிகள் ஆட்டை போடப்பட்டன இதர மாநிலப் பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு நாமும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இந்த திட்டங்களின் செயலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும் இப்பொழுது அண்டை மாநிலங்களின் வெள்ளம் காரணமாக திறந்து விடப்படும் உபரி நீர் வரத்து காரணமாக அனைவரும் இப்பிரச்சினையை அடியோடு மறந்து போவோம் அந்த கோடிகளும் காணாமற் போகும் ஒப்புதல் அளிக்கப்பட நீராதார திட்டங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடு கால அட்டவணை இவற்றை செய்தி தாள்கள் வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் இது காலத்தின் கட்டாயம்
Rate this:
Share this comment
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
16-ஆக-201918:20:45 IST Report Abuse
pazhaniappan மோடி அவர்கள் எடுத்த பல்வேறு , அது வெற்றியை தோல்வியா என்பதை விட துணிச்சலான முடிவு என்பதே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது , கருப்பு பணமும் , கள்ள பணமுமே தீவிர வாதிகளுக்கும் தீவிர வேதத்துக்கும் காரணமாக இருப்பதாக கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்றளவும் அது சரியான நடவடிக்கை என்பதை அவர்களால் கூட கூற இயலவில்லை, இன்று காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு அதெ கரணம் , இதிலாவது தீர்வு கிடைக்குமா என்பதை காலம் தன தெரியப்படுத்தவேண்டும் ,இன்று கூட சிறப்பு அந்தஸ்து சில காரணங்களுக்காக எப்போதோ கொடுக்கப்பட்டது அது தொடர வேண்டும் என்பது சரியில்லை என்ற நிலை பாடென்றால் பாராட்டியிருக்கலாம் ஆனால் மீண்டும் அதே காரணம் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்க ? அப்போ பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியை தோல்வியா ? அதை மறைப்பதற்கு அதைவிட துணிச்சலான முடிவு என்பது உணர்ச்சிவேகத்தில் சரியாக இருக்கலாம் உண்மையான பலன் கிடைக்குமா . சென்ற தேர்தலில் நதிகள் இணைப்பு என்று கூறினார்கள் இப்போது அதன் நிலை என்ன? அதை செய்யாது எவ்வாறு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க போகிறீர்கள் . அனைவருக்கும் கழிப்பறை வசதி மானிய திட்டத்தால் கட்ட நடவடிக்கை எடுத்தார்கள் தண்ணீர் இல்லாததால் அந்த கழிவறைகள் கால்நடை தீவனங்கள் சேர்த்து வைக்கும் அறையாகவும் விறகுகள் சேர்த்துவைக்கும் அறைகளாகவும் மாறிவிட்டது, GST கொண்டுவரப்பட்டது துணிச்சலான முடிவு அதன் பயன் அரசுக்கு வருமானம் சந்தேகமில்லை ஆனால் மீண்டும் இந்த மானியம் , அந்த மானியம் என்று தேர்தல் நோக்கத்திற்கான இலவசங்களை போன்றதே தவிர்த்து உங்களால் , நாங்கள் பள்ளி கல்வியை அனைவருக்கும் இலவசமாக கொடுக்கிறோம் , மறுத்து வசதியை மேன்படுத்தியிருக்கிறோம் ,வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம் ,அடிப்படை வசதிகளை மேன்படுத்தியிருக்கிறோம் ,தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறோம் என்று உங்களால் கூற முடியுமா ? எதுவும் கூற முடியாது
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
16-ஆக-201917:38:53 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை ஆகச்சிறந்த மேதைகள் கர்ம வீரர் காமராஜரும், ரோஜாவின் ராஜா நேரு அவர்களும் சிந்தித்து எடுத்த முடிவு ஒருக்காலும் தவறாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X