கை கொடுக்குது, இயற்கை; அனல் மின் உற்பத்தி குறைப்பு| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கை கொடுக்குது, 'இயற்கை'; அனல் மின் உற்பத்தி குறைப்பு

Added : ஆக 16, 2019 | கருத்துகள் (3)
Share
கை கொடுக்குது, 'இயற்கை'; அனல் மின் உற்பத்தி குறைப்பு

நீர், காற்றாலை, சூரிய சக்தி ஆகியவற்றில் இருந்து, இயற்கை மின்சாரம், தற்போது அதிகம் கிடைப்பதால், அனல் மின் உற்பத்தி, 1,000 மெகா வாட்டாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் தேவை, தினமும், 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. இது, கோடை காலத்தில், 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டுகிறது. எப்போதும் இல்லாத வகையில், நடப்பாண்டு, ஏப்., 3ல், மின் தேவை, 16 ஆயிரத்து, 151 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது. மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து, அனல் மின் உற்பத்தி நிலையங்கள்; 2,307 மெகா வாட் திறனில், 47 நீர்; 516 மெகா வாட் திறனில், ஐந்து எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன. அதில், நிலக்கரி எரிபொருளாக பயன்படும், அனல் மின் நிலையங்களில் மட்டும், தினமும், 90 சதவீதத்திற்கு மேல், மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மழை பெய்யாதது, இயற்கை எரிவாயு கிடைக்காதது போன்ற காரணங்களால், நீர் மின் நிலையங்களில், 300 மெகா வாட்; எரிவாயு மின் நிலையங்களில், 200 மெகா வாட்டிற்கு குறைவாக, உற்பத்தி செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், 8,322 மெகா வாட் திறனில், காற்றாலை; 2,724 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. தற்போது, காற்றாலையில் இருந்து, தினமும், 2,500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில், மழை இல்லை. இதனால், அம்மாவட்டங்களில் உள்ள, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும், பகலில், 2,000 மெகா வாட் கிடைக்கிறது.

நீலகிரி, கோவை, ஈரோடு மலை பகுதிகளில், கன மழை பெய்ததால், அணைகளில் நீர்வரத்து அதிகம் உள்ளது. இதையடுத்து, அங்குள்ள, நீர் மின் நிலையங்களிலும், 1,000 மெகா வாட்டுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. மழை மற்றும் விடுமுறையால், தமிழகத்தின் மின் தேவையும், 11 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. தற்போது, இயற்கை மின்சாரம் அதிகம் கிடைப்பதால், அனல் மின் நிலையங்களில், 1,000 மெகா வாட் மட்டும், மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X