கூட்டங்களில் பங்கேற்காத நிர்வாகிகள் யார்: கணக்கெடுப்புக்கு அ.தி.மு.க., மேலிடம் உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டங்களில் பங்கேற்காத நிர்வாகிகள் யார்: கணக்கெடுப்புக்கு அ.தி.மு.க., மேலிடம் உத்தரவு

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019

கரூர்: அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுக்கும் நிர்வாகிகள் குறித்து கணக்கெடுக்க கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பதவி காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தும் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 'உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும்' என முதல்வர் பழனிசாமி கடந்த 10ல் தெரிவித்தார். இதனால் அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

கட்சியில் உள்ள பல்வேறு சார்பு அமைப்புகளின் சார்பிலும் ஆலோசனை கூட்டங்கள் நடக்கின்றன. கோஷ்டி பூசல் பதவி இல்லாதது போன்ற காரணங்களால் பல நிர்வாகிகள் இக்கூட்டங்களில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக நடந்த பெரும்பாலான ஆலோசனை கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்காமல் ஒதுங்கி உள்ளதாகவும் தொண்டர்கள் பங்கேற்பு குறைவாக உள்ளதாகவும் உளவுத்துறை மூலம் கட்சி தலைமைக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து 'ஆலோசனை கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் தவறினால் அதற்குரிய காரணத்தை எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும்' என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது: தாய் அமைப்பு மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும். அவர்களிடம் நோட்டில் கையெழுத்து பெற வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகளுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டுறவு சங்க தேர்தலில் வாய்ப்பு வழங்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.மேலும் சார்பு அமைப்பு கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்காத காரணம் குறித்து பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்களிடம் உரிய விளக்கம் அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண் நிர்வாகிகளுக்கும்...வரும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலோசனை கூட்டங்களில் பெண் நிர்வாகிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக கணவர் சகோதரர் போன்றோர் பங்கேற்றால் சம்பந்தப்பட்டவரின் பதவியை கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்கும் பெண்களுக்கு வழங்க வேண்டும் என அ.தி.மு.க. மேலிடம் மாவட்ட செயலாளர்களுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X