சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நிருபர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீ., கடலூரில் 13 செ.மீ., அரியலூரில் 12 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11 செ.மீ., விழுப்புரத்தில் 10 செ.மீ., சென்னையில் 2 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்தடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பரவலாக மழை
இதனிடையே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று(ஆக.,16) மாலையும், இரவு பல இடங்களில் மழை பெய்த நிலையில், இன்று அதிகாலையிலும் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம், கொளத்தூர், சாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது செஞ்சி, மேல்மலையனூர், வளத்தி, நீலாம்பூண்டி, ஆலம்பூண்டி, நாட்டார்மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று மாலை முதலே மிதமானது முதல் கனமழை பெய்தது.

நேற்று இரவு பெய்த கன மழையால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தேங்கிய மழைநீரில், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
நன்னாடு, சாலாமேடு, கோலியனூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. அத்திவரதர், குளத்திற்குள் வைக்க உள்ள நிலையில், மழை பெய்வதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில், நேற்று இரவு 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது பெண்ணாடம், திட்டக்குடி, இறையூர், முருகன்குடி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
திருவண்ணாமலையில், வந்தவாசி, போளூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. அதிகாலை முதல் கனமழை பெய்தது. போளூரை அடுத்த சேத்துப்பட்டு, பழம்பேட்டை,நெடுஞ்குணம், தச்சாம்பாடி, இந்திரவனம் உள்ளிட்ட இடங்களில் 2 மணி நேரம் கனமழை பெய்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று மாலை முதல் மிதமான மழை பெய்தது. இரவு வரை மழை நீடித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE