புதுடில்லி : காஷ்மீரில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காங்., தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு காங்., எம்.பி.,ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசையும் அவர் கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

காஷ்மீரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காங்., மாநில தலைவர் குலாம் அகமது மிர் மற்றும் செய்தி தொடர்பாளர் ரவீந்தர் சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்திக் கொள்ளப்படும் என மாநில நிர்வாகம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல், "காஷ்மீர் மாநில காங்., தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தேசிய கட்சிக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த கடுமையான நடவடிக்கை, மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது தொடுத்துள்ள மற்றொரு தாக்குதல். இந்த பைத்தியகாரத்தனம் எப்போதும் முடியும்?" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக காங்., கட்சி சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், காஷ்மீர் முழுவதும் மோடி அரசு நடத்தி வரும் இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையால், மக்களின் தனிஉரிமை மற்றும் ஜனநாயக நடைமுறைகள் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை என்பதை காட்டுகிறது. காஷ்மீரில் இந்த சட்டவிரோத கைதை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE