வாஷிங்டன்: பாகிஸ்தானிற்கு வழங்க இருந்த 440 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.
கடந்த 2009ம் ஆண்டில் அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட கெர்ரி லூகர் பெர்மன் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, 2010ல் அமெரிக்கா பாகிஸ்தான் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தான் வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பிஇபிஏ) என பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, 5 ஆண்டுகளில், பாகிஸ்தானுக்கு 7.5 பில்லியன் டாலர் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர், இந்த தொகை 4.5 பில்லியன் டாலர் என குறைக்கப்பட்டது. இந்நிலையில், 440 மில்லியன் டாலர் நிதி வழங்குவதை அமெரிக்கா ரத்து செய்துவிட்டது. இதன் மூலம், பிஇபிஏ ஒப்பந்தப்படி, பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய தொகை 4.1 பில்லியன் டாலர் ஆக குறைந்துள்ளது. இந்த நிதியை நிறுத்துவது குறித்து, வாஷிங்டன்னிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருவதற்கு முன்னரே, அமெரிக்கா தகவல் தெரிவித்துவிட்டது.
கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 330மில்லியன் டாலர் நிதியை, அமெரிக்கா நிறுத்தி வைத்தது. கடந்த ஜனவரி மாதம், ஹக்கானி பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 1 பில்லியன் டாலர் நிதியை, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ், பெண்டகன் அதிகாரிகள் இணைந்து நிறுத்தி வைத்தனர்

கடந்த மாதம், இம்ரான் கானை சந்தித்த போது, அதிபர் டிரம்ப், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் காரணமாக தான், அந்நாட்டிற்கு வழங்க வேண்டிய 1.3 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார். மேலும், 1.3 பில்லியன் டாலர் நிதி பாகிஸ்தானுக்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா வழங்கி வருகிறது. ஆனால், எங்களுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை. சூழ்ச்சி செய்கின்றனர். எங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இதனால், 1.3 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்தேன் எனக்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE