குற்றங்கள் குறையவில்லையே ஏன்?| Dinamalar

குற்றங்கள் குறையவில்லையே ஏன்?

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (6) | |
குற்றங்கள் குறையவில்லையே ஏன்?சுதந்திரமடைந்து, 72 ஆண்டுகள் கடந்து விட்டன. வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட்டு, அறிவியல் வளர்ச்சியில் நம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையிலும், 'குற்றங்கள் ஏன் குறையவில்லை' என்ற கேள்வி பலரிடம் எழுகிறது.'குற்றங்களில் ஈடுபடுவோர், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகின்றனர்; எளியவர் மீது விரைந்து பாயும் சட்டம்,
குற்றங்கள் குறையவில்லையே ஏன்?

குற்றங்கள் குறையவில்லையே ஏன்?

சுதந்திரமடைந்து, 72 ஆண்டுகள் கடந்து விட்டன. வளர்ந்த நாடுகளுடன் போட்டி போட்டு, அறிவியல் வளர்ச்சியில் நம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையிலும், 'குற்றங்கள் ஏன் குறையவில்லை' என்ற கேள்வி பலரிடம் எழுகிறது.'குற்றங்களில் ஈடுபடுவோர், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகின்றனர்; எளியவர் மீது விரைந்து பாயும் சட்டம், செல்வாக்குள்ளோர் குற்றங்களைக் கண்டும் காணாமல் இருக்கிறது' என்ற விமர்சனமும் இருக்கிறது. சட்டம் - ஒழுங்கைப் பராமரித்து, குற்றத் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டிய போலீசாரே, சில நேரங்களில், குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.அன்றாட வாழ்க்கையை, இனிதே நகர்த்திச் செல்லத் தேவையான பணத்தை, நேர்மையான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்ற மன நிலை குறைந்து விட்டது. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உணர்வு, இன்றைய சமுதாயத்தில் மேலோங்கி இருக்கிறது. இது தான், அதிகரித்து வரும் குற்றங்களுக்கான காரணம். இதை உணர்ந்தும், உணராத நிலையில், இன்றைய சமுதாயம் பயணிக்கிறது.
தமிழகமும், கேரளாவும் அண்டை மாநிலங்கள். இந்தியாவிலேயே படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலம், கேரளா. கடந்த, 2016-ம் ஆண்டின், தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிபரப்படி, தமிழகத்தின், கிரைம் ரேட் 672. கேரளாவின் கிரைம் ரேட், 1,980.தமிழகத்தை காட்டிலும், கேரளாவில், மூன்று மடங்கு குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தான், இதைப் பார்த்ததும் எண்ணத் தோன்றும். உண்மை அது அல்ல. கேரளாவில், அந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையை, அந்த குற்ற வீதம் வெளிப்படுத்துகிறது.ஆனால், தமிழகத்தின் கிரைம் ரேட், அந்த ஆண்டில், தமிழகத்தில் நிகழ்ந்த, அனைத்து குற்றங்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை.போலீஸ் ஸ்டேஷன்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது, வழக்கு பதிவு செய்ய, தமிழக போலீசார் தயக்கம் காட்டுகின்றனர் என்பது தான், இதன் உள்அர்த்தம்.தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்ற விமர்சனத்தைத் தவிர்ப்பதற்காக, முடிந்தவரை, வழக்குகள் பதிவு செய்வது தவிர்க்கப்படுவதை இங்கு காண முடிகிறது.குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால், குற்றம் செய்வோர் யாராக இருந்தாலும், போலீசாரால் அவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை, உடனடியாக எடுக்கப்படும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கை, பொதுமக்களுக்கு வர வேண்டும்.எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள தமிழகத்தில், ஒரு லட்சம் போலீசாரால், ஒவ்வொரு குடிமகனையும் கண்காணித்து, அவர்களில் குற்றம் செய்தவர் யார் எனக் கண்டறிய முடியுமா; அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தர முடியுமா... என்ற கேள்வியும் எழுகிறது.கல்வி கற்றோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தமிழகத்தில், சட்ட விதிகளைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்ற உணர்வு, பொதுமக்கள் பலரிடம் குறைந்துள்ளதைக் காண முடிகிறது. சாலை விதிகளைப் பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுவதும், அக்குற்றம் செய்தோர், போலீசாரிடமே அத்துமீறி செயல்படுவதும், தினமும் காண முடிகிறது.சாலையில் பயணிக்கும் பெண்களின் தாலி உள்ளிட்ட, தங்க நகைகளைப் பறித்துச் செல்லும் வழிப்பறி குற்றவாளிகள், பெரும்பாலும் படித்த இளைஞர்கள் தான். உழைப்பின்றி எளிதில் பணம் கிடைப்பதால், வழிப்பறியையே தொழிலாக்கிக் கொண்டுள்ளனர்.பணத்திற்காக கொலை உள்ளிட்ட குற்றங்களை நிகழ்த்துவோர் பலரும் படித்தவர்கள் தான். பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோரும் படித்தவர்களே. பெருகி வரும், 'சைபர்' குற்றங்களைத் திறமையுடன் செய்பவர்களும் படித்தவர்கள் தான்!தன் கடமையைச் செய்ய, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும், படித்தவர்கள் தான். வறுமையின் காரணமாக, அவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை. அவர்கள் கற்ற கல்வியும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி பயிற்சியும், நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்ற உணர்வை, அவர்களிடம் ஏற்படுத்தவில்லை.அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய படிப்பைப் படிப்பது தான், சிறந்த கல்வி என்ற ஒற்றை லட்சியத்தோடு, இன்றைய சமுதாயம் பயணிக்கிறது. வேலை வாய்ப்புக்காக கல்வி கற்பது மட்டுமின்றி, அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்ப்பதும், கல்வியின் நோக்கமே. இதை, குழந்தைகள் உணரும் வகையில் கல்வி கற்பித்தால், அதுவே, குற்றமற்ற சமுதாயத்தை நோக்கிப் பயணிக்க, வழி வகுக்கும்.
சில வாரங்களுக்கு முன், சென்னை மாநகரின் முக்கிய நெடுஞ்சாலையில், 'ரூட் தல' என்ற பெயரில், பேருந்தில் கல்லுாரிகளுக்குப் பயணம் செய்யும் மாணவர்களுக்கு இடையே நிகழ்ந்த வன்முறைகள், மக்களைப் பெரிதும் அச்சம் அடையச் செய்தன.சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான அந்த வன்முறை, 'வீடியோ' காட்சிகள், காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியது. ரவுடிகள் போல செயல்பட்ட, கல்லுாரி மாணவர்களின் வன்முறை செயல்களுக்கு முடிவு இல்லையா... சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறை, இந்த வன்முறை நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என, கண்டனக் குரல்கள் எழுந்தன.இதை உணர்ந்த போலீசார், வன்முறைகளில் மாணவர்கள் ஈடுபடாமல் இருக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கினர். மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்த மாணவர்களை அடையாளம் கண்டறிந்து, அவர்கள் செய்த தவறான செயல்களுக்கு, வித்தியாசமான தண்டனையை, போலீசார் வழங்கினர்.'போலீசாருடன் இணைந்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், அந்த மாணவர்கள், சில வாரங்கள் ஈடுபட வேண்டும்' என்பது தான், அந்த தண்டனை.
'கொடுங்குற்றவாளிகளையும், கடும் சினம் கொண்டவர்களையும், அன்பால் வெற்றி கொள்ள முடியும்' என்ற, உளவியல் ரீதியான அணுகுமுறையை, போலீசார் மேற்கொண்டனர்.தவறு செய்த குழந்தையைக் கண்டிப்பதற்காக, அக்குழந்தையின் பெற்றோர் அடிப்பது, தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற நிலையை நோக்கி, இன்றைய சமூகம் சென்று கொண்டிருக்கிறது. குறும்பு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்காக, ஆசிரியர்கள் கொடுத்த பிரம்படியும் நிறுத்தப்பட்டு விட்டது.சக மாணவ மாணவியர் முன்னிலையில், ஆசிரியர் தன்னைக் கண்டித்தார் என்ற காரணத்திற்காக, ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் நடத்திய குற்றமும் நிகழ்ந்துள்ளது.இன்றைய இளம் குற்றவாளிகள் தான், நாளைய சமுதாயத்தின் கொடுங்குற்றவாளிகள். ஒவ்வொரு குழந்தைக்கும், அதன் தாய், தந்தை தான் முதல் ஆசான். நல்லதையும் கெட்டதையும் பெற்றோரிடமிருந்து தான், குழந்தை, முதலில் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறது. நல்லதையும், கெட்டதையும், குழந்தைக்குப் பெற்றோர் கற்றுக் கொடுத்தால், அக்குழந்தை நல்ல குடிமகனாக வளர்கிறது.ஆனால், இன்றைய சூழலில், பெரும்பாலான பெற்றோர், குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய, அதிக அளவில் பொருள் ஈட்ட வேண்டும் என்ற, ஒற்றைக் குறிக்கோளை மையமாக வைத்து செயல்படுகின்றனர்; குழந்தையின் வளர்ச்சியில் அவர்கள், போதிய கவனம் செலுத்துவதில்லை.பெற்றோர் கண்காணிப்பு இன்றி, தடம் புரண்டு, வளரும் குழந்தை, பெற்றோருக்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் சுமையாக மாறி விடும் நிலையைக் காண முடிகிறது. குடும்பம் உடைந்து,
கணவன் - மனைவிதனித்தனியாக வாழும் குடும்பத்தின் குழந்தைகளில் பலர், திசை மாறிய பறவைகளாக, மாறி விடுவதையும் காண முடிகிறது.பண்டைய, குரு குல கல்வி முறையிலிருந்து, கடந்த நுாற்றாண்டின் நடுப்பகுதி வரை, ஒவ்வொரு மாணவனுக்கும், அவனது ஆசிரியர் தான், வாழ்க்கைக்கு வழிகாட்டும் கதாநாயகனாக இருந்தார். ஆசிரியர்களும், மாணவர்களின் வளர்ச்சியில் அதிக அக்கறையும், ஈடுபாடும் கொண்டிருந்தனர்.காலப்போக்கில், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்களாக மாற்றப்பட்டன. அதிக மதிப்பெண்கள் கிடைக்க வழி வகை செய்யும் தொழிற்கூடங்கள் போல, அவை செயல்படத் தொடங்கி விட்டன. கற்றலில் பின்தங்கியிருக்கும் மாணவர்களை, பள்ளிகளும், கல்லுாரிகளும், புறக்கணிக்கத் தொடங்கின.வகுப்பறையில் பாடம் நடத்துவதோடு கடமை முடிந்து விட்ட மனநிலையோடு, ஆசிரியர் சமுதாயம் பயணிக்கத் தொடங்கி விட்டது. கற்றலில் பின் தங்கிய மாணவர்களின் பிரச்னையைக் கேட்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது.வன்முறைகளும், குற்றங்களும் பெருகி விட்டன என்ற கண்டனக் குரல், பொது வெளியில் ஒலிக்கத் தொடங்கும் போது, போலீசார் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்வதும், அவர்களை சிறையில் அடைப்பதும் உண்டு. சில சமயங்களில், 'என்கவுன்டர்' முறையில், சில குற்றவாளிகளைப், 'போட்டுத்தள்ளி' பொதுமக்களின் பாராட்டுகளைப் பெறுவதும் உண்டு.அதே சமயம், போலீசாரின் செயல்பாடுகள், பல எதிர்வினைகளையும் சந்திக்கிறது. சட்டத்தைப் பரிபாலனம் செய்யும், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து, சமூகம் உன்னிப்பாகக் கவனிக்கிறது. இதை உணர்ந்து, நேர்மையான, நியாயமான முறையில், காவல் துறை செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தண்டனையால் மட்டும், சமுதாயத்தில் இருந்து குற்றங்களை அகற்றி விட முடியாது. குற்றமற்ற சமுதாயத்தை நோக்கிய பயணத்திற்கு, துணை புரிவது, நேர்த்தியான குடும்பம்; ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வி முறை; நேர்மையான போலீசாரின் செயல்பாடு!தொடர்புக்கு:இ - மெயில்: pkannappan29755@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X