மரணத்தின் பிடியில் வாழும் மனிதர்கள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மரணத்தின் பிடியில் வாழும் மனிதர்கள்!

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019 | கருத்துகள் (1)
Share
 மரணத்தின் பிடியில் வாழும் மனிதர்கள்!

நம் நாட்டில் முன்பு, தொற்று நோய்களான, டி.பி., தொழுநோய், காலரா போன்றவை அதிகமாக இருந்தன. அந்த காலம் போய், அந்த தொற்று நோய்கள் இப்போது குறைந்து, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்களால் ஏற்படும், இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் அதிகமாகி வருகின்றன.

இந்த நோய்கள், தொற்று நோய்களை விட, அதிவேகத்தில் மக்களிடம் பரவி வருவதையும் காண முடிகிறது. முன்பு, குடும்பத்தில் முதியோருக்கு தான், ரத்தக் கொதிப்பு, இதய நோய் இருந்தது. ஆனால், பாரம்பரிய சொத்து, வாரிசுகளுக்கு தானமாக கொடுப்பது போல, மகனுக்கும், மகளுக்கும் கூட, தந்தையின் நோய் வந்துள்ளது.இதய நோய்கள் பல உள்ளன. அவை அனைத்தும், இறுதியில், இதயத்தை செயலிழக்கச் செய்கின்றன. அதைத்தான், 'ஹார்ட் பெய்லியர்' என்பர். இது, இதய நோயின் இறுதி கட்டமாகி விடுகிறது. இதய தசைகளின் செயல்பாடுகளை, அதாவது, இதயத்தின், 'பம்ப்பிங்' செயல் திறனை, 'எஜக் ஷன் பிராக் ஷன்' என்பர். இதன் செயல் குறைந்து, ஹார்ட் பெய்லியர் வருகிறது.சிறுநீரக நோய்களில், இளம் வயதினருக்கு வருவது, 'குல்மரோ நெப்ரைட்டிஸ்' என்ற சிறுநீரக நோய். 40, 50 மற்றும் 60 வயதினருக்கு வரும் சிறுநீரக நோய், சர்க்கரை நோயால் வரும், 'டயபெட்டிஸ் நெப்ரோபதி' என்ற ஆபத்தான நோய்.நீண்ட காலமாக, ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கா விட்டால், சிறுநீரக ரத்தக் குழாய்கள் சுருக்கத்தால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. சிறுநீரக செயலிழப்பு வர முக்கிய காரணம், சரி வர வைத்தியம் பார்க்காமல் இருப்பதும், சர்க்கரை அளவை குறைக்காமல் இருப்பதுமே! இதய செயலிழப்புக்கும், சிறுநீரக செயலிழப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை, ஆங்கிலத்தில், 'கார்டியோ ரீனல் பெய்லியர்' என்கின்றனர். இந்த இரண்டு வியாதிகளும் கொடுமையானவை. இந்த இரண்டோடு, பங்காளியாக வந்து சேருவது தான், 'அனீமியா' என்ற ரத்த சோகை நோயும்!


மூன்று நோய்கள் கூட்டணி


இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை ஆகிய, மூன்று நோய்களின் கூட்டணி, அரசியலில் மூன்றாவது அணி போல, 'வெத்து வேட்டு' கூட்டணி அல்ல. இந்த நோய்களின் கூட்டணி, மிகவும் கொடூரமானது. இதய செயலிழப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு, 40 - 70 சதவீதம் வரை, சிறுநீரக செயலிழப்பு வர வாய்ப்புள்ளது. இதய நோய் உள்ள, 10 பேரில், இரண்டு பேர், சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகையால் பாதிக்கப் படுகின்றனர்.'மூன்று கூட்டணி' நோய் உள்ளவர்களுக்கு, ஒவ்வொரு வியாதியும் கடுமையாகும் போது, அத்தகையோருக்கு, 50 - 100 சதவீதம் மரணத்தை வரவழைக்கிறது. மூன்று வியாதியும் கடுமையாகும் போது, 300 சதவீதம் மரணத்தை வரவழைக்கிறது. அத்தகைய நோயாளிகள் தான், மரணத்தின் பிடியில் சிக்கிய படி, நாட்களை கழிப்போர்.

நீண்ட நாள் இதய செயலிழப்பு பிரச்னை, எப்படி, சிறுநீரக செயலிப்பு, ரத்த சோகையை ஏற்படுத்துகிறது?

இதய பம்பிங் - இ.எப்., குறைவதால் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் சிறுநீரகத்தின் வேலைத்திறன் குறைந்து, சிறுநீரக செயலிழப்பு ஆரம்பமாகிறது. சிறுநீரகத்திற்கு குறை வாக ரத்தம் செல்வதால், பிராண வாயு குறைகிறது. இதனால், 'எரித்ரோபாய்ட்டின்' என்ற ரசாயன பொருள் உற்பத்தி, உடலில் குறைந்து, ரத்த சிவப்பு அணுக்களும் குறைந்து, ரத்த சோகையும் வருகிறது.இத்தகைய முறையில், அதாவது, நீண்ட நாள் இதய செயலிழப்பு உள்ளோருக்கு, சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை என, கூடுதலாக இரண்டு பிரச்னைகளும் தொற்றிக் கொள்கின்றன.

சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதயம் செயலிழப்பு ஆகியவை, ரத்த சோகையை எப்படி அதிகமாக்குகிறது?

சிறுநீரகம் செயலிழப்பால், 'எரித்ரோபாய்ட்டின்' குறைந்து, ரத்த சோகையை அதிகப்படுத்துகிறது. மேலும், உடலில் உள்ளே, நீர் சேர்வதோடு, உயர் ரத்த அழுத்தமும் அதிகமாகிறது. அத்துடன், உடலில், பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, ரத்தக் குழாய்களை பாதிக்கச் செய்கிறது.

'கார்டியோ ரீனல் அனீமியா சிண்ட்ரோம்' என்ற மூன்று நோய்களின் கூட்டணியை, வர விடாமல் தடுப்பது எப்படி?

* இதய செயலிழப்பிற்கு, ஜாக்கிரதையாக, கடுமையாக வைத்தியம் செய்து, ரத்த சோகை, சிறுநீரக பாதிப்பு வராமல் தடுக்க வேண்டும். இதற்கு, சிறப்பாக படித்த மருத்துவ நிபுணர் உதவி தேவைப்படும்

*இதய நோய் நிபுணர், சிறுநீரக நோய் நிபுணர், ரத்த சோகைக்கு சிகிச்சை அளிப்பவர் என, மூன்று சிகிச்சைக்கும் படித்த மருத்துவர்களிடம், தனித்தனியாக சிகிச்சை பெற்று, மூவரின் கூட்டு ஆலோசனையில், பொதுவான சிகிச்சை அவசியம்

*'எனக்கு எல்லாம் தெரியும்' என, எல்லா நோய்க்கும் சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவர், இந்த பிரச்னைக்கு சரிப்பட்டு வர மாட்டார். அப்படி யாராவது சிகிச்சை செய்தால், நோயாளிக்கு போதாத காலம் என அர்த்தம்!

இ.எஸ்.ஏ., என்றால் என்ன?

கடந்த, 1980ம் ஆண்டுகளுக்கு முன், அனீமியா நோய்க்கு சிகிச்சை என்றால், ரத்தம் கொடுப்பது தான் வைத்திய முறையாக இருந்தது. ஆனால், அதற்கு பின், இ.எஸ்.ஏ., என்ற, எரித்ரோபாய்ட்டின் வியாபார ரீதியாக வந்த பின், மரணங்கள் குறைந்துள்ளன. இ.எஸ்.ஏ.,வால் வாழ்க்கை தரம் எளிமையாக ஆயிற்று; வாழ்க்கை இனிமையாகி விட்டது.ரத்தத்திலுள்ள குறைந்த, 'ஹீமோகுளோபினை' சரியான அளவு கொண்டு வருவது தான், இ.எஸ்.ஏ., மருத்துவத்தின் குறிக்கோள். அத்தகைய சூழலில், இரும்பு சத்து குறைந்தால், இரும்பு சத்துள்ள மருந்துகளால், பிரச்னையை சரி செய்யலாம்.

கார்டியோ ரீனல் அனீமியா சிண்ட்ரோமில், மிகவும் கடுமையானது எது?

இதில் கடுமையானது, 'ரீனல் பெய்லியர்' என்ற சிறுநீரக செயலிழப்பு தான். சிக்கலான, மிகவும் ஆபத்தான, சிறுநீரக கோளாறு தான் காரணம். சிறுநீரக கோளாறை, தக்க நேரத்தில் கண்காணிக்கா விட்டால், டயாலிசிஸ் சிறுநீரக மாற்று சிகிச்சை என, சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும்.எனவே, இதை, கண் இமை போல காக்க வேண்டும். என்னிடம் சிகிச்சை பெற வந்த, ௬௫, வயது பெண்ணுக்கு, ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கோளாறு, ஆரம்ப நிலையில் இருந்தது.அவருக்கு முறையாக சிகிச்சை அளித்து, 10 ஆண்டுகள் பாதுகாத்து, 75 வயது வரை கொண்டு வந்து விட்டோம். அந்த வயதில், சிறுநீரக கோளாறு அதிகமாகி, 78 வயது வரை இருந்தார். ரத்த கொதிப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, அனீமியா ஆகியவை, அவரை மரணத்திற்கு அழைத்துச் சென்று விட்டன.தீவிர நோயிலும், மூன்று ஆண்டுகள் அவர் வாழ்ந்ததற்கு காரணம், அவரின் அணுகுமுறை; மருத்துவரிடம் வைத்திருந்த நம்பிக்கை; கடுமையான கட்டுப்பாடுடன் உணவு மற்றும் மருந்து எடுத்துக் கொள்ளும் விதம் ஆகியவற்றை சொல்லலாம்.நீண்ட நாள் சர்க்கரை நோயாளிகளை தனி கவனத்துடன் பரிசோதனை செய்ய வேண்டும். மாதந்தோறும், 10 சதவீதம் மூத்த குடிமக்கள் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, 'இஸ்கிமிப் ஷார்ட்' வியாதி (கரோனரி ரத்த குழாய் அடைப்பு, மார்பு வலி, மாரடைப்பு) போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இதய தசைகள் செயலிழந்து விடுகின்றன. இதனால் இதயத்தின், 'பம்பிங்' குறைந்து விடுகிறது.அதாவது, இ.எப்., 60 சதவீதத்தில் இருந்து, 40, 35, 30 என்று குறைந்து விடுகிறது. இதனால், ரத்த அழுத்தம் குறைந்து, சிறுநீரக ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு, ரீனல் பெய்லியர் வருகிறது.

இந்த சிறுநீரக செயலிழப்பால், மீண்டும் ரத்த அழுத்தம் அதிகமாகி, பழுதடைந்த இதயத்தை மேலும் பழுதடையச் செய்கிறது. இது, இதயத்தை செயலிழக்கச் செய்து விடும்.எனவே, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது, சிறுநீரக பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, யூரியா, கிரியாட்டினின் என்ற ரத்தப் பரிசோதனை. அதன் அளவுகளின் அடிப்படையில், நாம் சிறுநீரகத்தின் திறனை அறிந்து கொள்ளலாம். மேலும், ஜி.எப்.ஆர்., என்ற, 'குளோமெருலர் பில்ட்ரேஷன் ரேட்' எனப்படும், சிறுநீரகம் பழுதடைந்ததைக் காட்டும் பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். அதாவது, ரத்தத்திலுள்ள கழிவுகளை சிறுநீரகம், ஒரு நிமிடத்தில் எவ்வாறு வடிகட்டி வெளியேற்றுகிறது என்பதை குறிக்கும் பரிசோதனை. இது முக்கியமான பரிசோதனை. மற்ற பரிசோதனைகளான, கார்டியோ டிரோபோனின், பி.என்.பி.டி., ஸிஸ்டேடின் மற்றும் என்.ஜி.ஏ.எல்., போன்ற பரிசோதனைகளும் அவசியம்.ஒரு மருத்துவரிடம் செல்வது; பிறகு அவரை மாற்றி விட்டு, வேறு மருத்துவரை மாற்றுவது போன்றவற்றை செய்யக் கூடாது. வியாதியைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும்; மருத்துவரின் ஆலோசனையை முறையாக பின்பற்ற வேண்டும்; வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம். இவற்றை பின்பற்றி, வியாதியை நண்பனாக கருதினால், அதன் கடுமையைக் குறைத்து, நிம்மதியான வாழ்க்கை வாழலாம். மேலும், மரணத்தின் பிடியிலிருந்தும் மீளலாம்.

தொடர்புக்கு:
பேராசிரியர் டாக்டர் சு.அர்த்தநாரி, எம்.டி., டி.எம்.,
இதய நோய் ஊடுருவல் நிபுணர்,
டாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக்,
சென்னை - 14
இ - மெயில்: prabhuraj.artganaree@gmail.com
மொபைல் போன்: 98401 60433

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X