பொது செய்தி

தமிழ்நாடு

குந்தா மலைத்தொடர் முதல் அவலாஞ்சி வரை... :195 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பெருமழை

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 18, 2019
Share
Advertisement
குந்தா மலைத்தொடர், அவலாஞ்சி,பெருமழை

ஊட்டி: 'ஊட்டி அவலாஞ்சி சுற்றுப்புற பகுதிகளில், 195 ஆண்டுகளுக்கு முன், இதே போன்று, எட்டு நாட்கள் தொடர் மழை பெய்து, பெரியளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன' என, வரலாற்று பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அவலாஞ்சியில், கடந்த, 5 முதல், 10ம் தேதி வரை, 2,978 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மழை குறித்த, மத்திய மண் மற்றும் நீர் வள ஆய்வு மைய விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதில், கடந்த, 1901ல், ஜூலை, 7ல், கூடலுாரில் மட்டும், 370 மி.மீ., மழை பதிவானது, மாவட்டத்தில் அதிகபட்சமாக கருதப்பட்டது.அதன்பின், கடந்த, 9ம் தேதி, 910 மி.மீ., மழை அதிகபட்சமாக பெய்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, ஒவ்வொரு நுாற்றாண்டுக்கும் ஒரு முறை, நீலகிரியில், கூடலுார் தேவாலா, அவலாஞ்சி போன்று மழை காடுகள் அதிகமுள்ள பகுதிகளில், இதுபோன்ற மழை பெய்துள்ளது நிரூபணமாகியுள்ளது.


latest tamil news
கடந்த, 1824ல், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தற்போதைய அவலாஞ்சி பகுதி, 'குந்தா மலைத்தொடர்' என, அழைக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ச்சியாக, 8 நாட்கள் கன மழை பெய்துள்ளது. குந்தா, குடிக்காடு, சிஸ்பாரா சுற்றுப்புற பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பார்வையிட்ட ஆங்கிலேயர்கள், 'இதுபோன்ற பெரும் நிலச்சரிவுகள், பனி படர்ந்த இமயமலை தொடர்களில் அடிக்கடி ஏற்படும். அத்தகைய பேரிடர் தான், 'அவலாஞ்சி' என, அழைக்கப்படும். இங்கு நடந்த நிலச்சரிவு, பனி மலையை போன்று உள்ளது. இதனால், இப்பகுதிக்கு அவலாஞ்சி என பெயர் வைக்கலாம்' என, முடிவு செய்துள்ளனர். அன்று முதல் இப்பகுதி, 'அவலாஞ்சி' என்று அழைக்கப்படுகிறது.


latest tamil news

திரும்பிய வரலாறு

தற்போது, இப்பகுதியில் பெய்துள்ள மழை, வரலாற்றை அறிந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அப்பகுதியில், 7,200 ஏக்கர் மழை காடுகள் உள்ள நிலையில், அதிக மழை பெய்திருக்க நிச்சயம் வாய்ப்புள்ளது என்பதும், அவர்களின் கருத்தாக உள்ளது.


latest tamil news
மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் கூறுகையில், ''அவலாஞ்சியில், மழை குறைவாக பெய்திருந்தால், பவானியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, சமீபத்தில் அணை திறக்க வாய்ப்பு இருக்காது. நீலகிரியின் வரலாற்றை எடுத்து பார்த்தால், இதே பகுதியில், 1824ல் பல நாட்கள், பலத்த மழை பெய்துள்ளது. அதற்கு பின்தான், இப்பகுதிக்கு அவலாஞ்சி என்ற பெயரும் வந்தது. வருங்காலங்களில், இதேபோன்ற அதிகளவு மழை நீலகிரியில் பெய்ய வாய்ப்பு உள்ளது,'' என்றார்.


நீலமலையின் பேரிடர் பதிவுகள்latest tamil news


நீலகிரியில், 'குந்தா மலை தொடரில், 1,824, ஊட்டி, குன்னுாரில், 1,865, கோத்தகிரியில், 1,891 குன்னுார், கோத்தகிரியில், 1,902 டிச மாதம், குன்னுாரில், 1, 905 அக்., மாதம், கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது. 1978க்கு பின் தான், உயிர் பலி குறித்த பதிவு உள்ளது. ஊட்டியில், 1978 நவ., மாதம், குன்னுார், கோடநாடில், 1979 நவ., மாதம், கெத்தையில், 1990 அக்., மாதம், குன்னுார், மரப்பாலத்தில், 1,993 நவ., மாதம், குன்னுார், பர்லியாரில், 1998 டிச., மாதம், கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், குன்னுார், புதுக்காடில், 2001 டிச., மாதம், குன்னுார் ரயில் பாதையில், 2006 நவ., மாதம், ஊட்டி, குன்னுார், கேத்தி, கோத்தகிரி, கூடலுாரில், 2009 நவ., மாதத்தில், என, பெருமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது. சம்பவங்களில், 150 பேர் பலியாகினர். 2,000 வீடுகள் சேதமடைந்தன. 1978, 2009 ஆண்டுகளில் மட்டும், மாவட்டத்தில் அதிகபட்சமாக, 800 மி.மீ., மழை, பதிவானது. இந்நிலையில், ஊட்டி அவலாஞ்சியில், கடந்த, 9ம் தேதி, 910 மி.மீ., மழை பெய்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


விரைவில் ஆய்வு


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், ''விரைவில் அவலாஞ்சிக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளோம். ஆய்வுக்கு பின், உண்மையான காரணத்தை கூற முடியும். தற்போது எதுவும் கூற இயலாது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X