திண்டுக்கல் : மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான நலத்திட்ட உதவிகளை 'எமிஸ்'சில் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பற்றிய விவரங்களை அறிய 'எமிஸ்' கொண்டு வரப்பட்டது. இதில் மாணவர் பெயர், தந்தை பெயர், முகவரி, பள்ளியில் சேர்ந்த ஆண்டு, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதே போல் ஆசிரியர்களின் படிப்பு, பணியில் சேர்ந்த ஆண்டு, முகவரி மற்றும் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணிகளை வரும் ஆக.31 க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகம், காலணி, லேப்டாப், சைக்கிள், பஸ் பாஸ் உட்பட 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
சில பள்ளிகளில் இந்த திட்டங்கள் மாணவர்களுக்கு போய் சேருவதில் மர்மம் நீடிக்கிறது. இத்திட்டங்கள் முழுமையாக மாணவர்களை சென்று சேர, முறைகேடுகள் நடப்பதை தடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளை 'எமிஸ்'சில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வினியோகித்த நாள் உள்ளிட்டவை தேதியுடன் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதனை தலைமையாசிரியர்கள் கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.