கொடைரோடு : உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள வசதியாக, அடிப்படை பிரச்னைகளுக்காக போராடுவோரை ஒருங்கிணைப்பதில் முன்னாள் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுழற்சி முறைப்படி வார்டு ஒதுக்கீடு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சூழலில் மழையின்மையால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை தனி அதிகாரிகளுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, முன்னாள் பிரதிநிதிகள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதிருப்தியில் உள்ள மக்களை சந்திக்கும் முன்னாள் பிரதிநிதிகள் பலர், ஆதரவாளர்களை கொண்டு சம்பந்தப்பட்ட மக்களை மூளைச்சலவை செய்யும் பணியை துவக்கியுள்ளனர். மக்களை திரட்டிச்சென்று, மாவட்ட கலெக்டர், ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுத்தல், குடங்களுடன் முற்றுகையிடல் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்கின்றனர். வாகன, சாப்பாடு செலவு என, உள்ளாட்சி தேர்தலுக்கான செலவினத்தை தற்போதே துவக்கி விட்டனர்.