பாவேந்தனுக்கு உதவுவோம்| chennai | Dinamalar

பாவேந்தனுக்கு உதவுவோம்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 19, 2019 | கருத்துகள் (2)
Share
latest tamil news
சில மாதங்களுக்கு முன்பு

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் முன்பாக இருந்தவர்கள் அனைவரது முகத்திலும் அப்படி ஒரு சோகம் சின்ன விசும்பல் கூட பெரிதாக கேட்குமளவு அமைதி.


latest tamil news
அந்த அமைதியை உடைக்கும் வகையில் சிலர் அழுகின்றனர் பலர் கண் கலங்குகின்றனர், அப்படி கண் கலங்கியவர்களில் நீதிபதி கிருபாகரனும் ஒருவர்.

இப்படி அனைவரையும் அழவைத்த அந்த வழக்கு விவரம் இதுதான்.

கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுாகா திம்மசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமேனி, இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு இரண்டு பெண் ஒரு பையன்.

ஆண்பிள்ளை வேண்டும் என்று வேண்டிக்கொண்டர்களுக்கு மூன்றாவதாக பிறந்தவன் பாவேந்தன். ஆசை ஆசையாக பெற்றெடுத்த இந்த பிள்ளையை தயவு செய்து கருணைக்கொலை செய்ய அனுமதி கொடுங்கள் என்று கேட்டு நீதிமன்றத்தை நாடியதுதான் வழக்கு.

காரணம் மிக சோகமானது

பத்து வருடங்களுக்கு முன் பிறந்த மகனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் மீதான பாசம் காரணமாக பாவேந்தன் எனப் பெயரிட்டு சந்தோஷித்தார் அப்பா திருமேனிநாதன்.

அந்த சந்தோஷம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை பாவேந்தன் பிறந்தது முதல் படுத்த படுக்கையாகவே கிடந்தான் எந்தவித வளர்ச்சியும் இல்லை மேலும் ஒரு நாளைக்கு பல முறை வலிப்பு வந்தது என்ன பிரச்னை என்று கண்டுபிடிப்பதற்கு கடலுார் முதல் சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிவரைஅலைந்துவிட்டனர்.

குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லை உடம்பு மட்டுமே வளரும், பிறந்த குழந்தையாகத்தான் கடைசி வரை இருப்பான் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

தலை நிற்கவில்லை உட்கார முடியவில்லை பேச்சு வரவில்லை எந்நேரமும் படுத்துக் கொண்டேதான் இருப்பான் மொத்தத்தில் ஒரு உயிருள்ள நோய்வாய்ப்பட்ட பொம்மையாகவே வளர்ந்தான்.

ஆனால் வளர வளர பெற்றோர்களுக்கு சிரமம் அதிகமானது, வலிப்பு வந்தால் தோளில் துாக்கிக்கொண்டு டாக்டரிடம் ஒடுவார்கள் வளர்ந்த பிறகு அப்படி துாக்கிக்கொண்டு ஒடமுடியவில்லை, ஆட்டோ கார் என்று செலவாயிற்று மருந்து மாத்திரைகளின் விலையும் கூடுதலாயிற்று.

பாவேந்தனுக்கு தான் யார் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் யார் என்பது எல்லாம் தெரியாது, பசித்தால் அழுவான் அழுத உடனேயே சாப்பாடு கொடுத்துவிட வேண்டும் இல்லையேல் அழும் சத்தம் அதிகரிக்கும், கொடுக்கும் சாப்பாட்டையும் மசித்து ஆறு மாத குழந்தைக்கு கொடுப்பது போல கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் ஊட்டிவிடவேண்டும் இல்லையேல் ஜீரணக்கோளாறு வந்து அதற்கு தனியாக மருந்து மாத்திரை எடு்க்கவேண்டும்.

எப்போது அழுவான் என்பது தெரியாது ஆகவே அவன் பக்கத்தில் அம்மாவோ அல்லது அப்பாவோ ஒருவர் கட்டாயம் இருக்கவேண்டும்.இது போக ஒரு நாளைக்கு பலமுறை வலிப்பு வந்துவிடும், பக்கத்திலேயே இருந்து பார்த்து சரி செய்யவேண்டும் இல்லையேல் ஊர்ந்து ஊர்ந்து போய் சுவற்றில் முட்டி தலையெல்லாம் ரத்த காயமாகிவிடும் அந்த காயத்தை ஆற்றுவதற்கு பெரும்பாடு படவேண்டும்.

இதன் காரணமாக கடைவீதியில் இருந்த எனது டெய்லர் கடையை வீட்டுக்கு மாற்றிக்கொண்டார் திருமேனி ஒரு கண்ணை தையல் மெஷினிலும் இன்னோரு கண்ணை மகன் மீதும் வைத்திருப்பார்.

மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் மருந்து மாத்திரைக்கு செலவானது, ‛டயாபர்'(குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் உள்ளாடை) மட்டுமே மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கவேண்டி உள்ளது, கிராமத்து டெய்லரிங் தொழிலில் அவ்வளவு வருமானமும் இல்லை.பத்து வருடங்களில் சேமிப்பு பணம் எல்லாம் கரைந்தது, நிலம் மனைவியின் நகையெல்லாம் விற்றாயிற்று, வயதானதன் காரணமாக எளிதாக துணி தைக்கலாம் என்று இருபதாயிரத்திற்கு வாங்கியிருந்த மோட்டார் வைத்த தையல் மிஷினைக்கூட விற்றாயிற்று.

குடியிருக்கும் வீட்டையும் அடமானம் வைத்தாயிற்று. இதற்கு மேல் பாவேந்தனுக்காக செலவழிக்க எங்களால் முடியவில்லை என்பதால் மருந்து மாத்திரை உணவு கொடுப்பதை நிறுத்த அனுமதியுங்கள். அவனை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டு ஐகோர்ட்டை திருமேனி அணுகினார்.

பாவேந்தன் படும் துயரத்தையும் பெற்ற மகனை காப்பாற்ற முடியாமல் துடிக்கும் தந்தையின் சோகத்தையும் கேட்ட நீதிபதி கண்கலங்கினார்.

பாவேந்தனுக்கு ஏதாவது செய்ய முடியுமா? என்று மருத்துவர்களை கேட்டார் அவர்கள் முன்பு திருமேனியிடம் சொன்ன பதிலையே கோர்ட்டிலும் சொன்னார்கள்.

பாவேந்தனின் நிலமையை பார்த்த பலரும் உணர்ச்சி வேகத்தில் உதவுவதாக சொன்னார்கள் ஆனால் உதவுவதாக சொன்னவர்கள் யாரும் அதற்கு பிறகு திருமேனியை தொடர்பு கொள்ளவில்லை சென்னை அனிருதா மெடிக்கல் ஆர்கனைசேஷன் மட்டும் பாவேந்தனுக்கு தொடர் சிகிச்சை தந்துவருகின்றனர்.

கடந்த எட்டு மாதமாக தந்துவரும் சிகிச்சை காரணமாக படுத்தே இருந்த பாவேந்தன் லேசாக எழுந்து உட்காருகிறான் ஆனால் மகனுக்கு துணையாக எட்டு மாதமாக இருந்ததால் திருமேனி கடுமையான கடன் சுமையாலும் நிதி நெருக்கடியாலும் தவிக்கிறார்.

வழக்கறிஞர் கவிதா ரமேஷ்வர் முதல் நீதிபதி கிருபாகரன் வரை எல்லோரும் என் மீது இரக்கம் காட்டுகின்றனர் ஆனால் அந்த இரக்கத்தால் என் குடும்பத்து பசியை தீர்க்கமுடியவில்லை கடனை அடைக்கமுடியவில்லை.

என் மகனை வளர்க்க இயலவில்லை ஆகவே கருணை கொலை செய்ய அனுமதி கேட்டேன் இன்றைய நிலையில் இப்போது என் மொத்த குடும்பமே வாழ முடியாத நிலையில் உள்ளது என்ன செய்யப்போகிறேன் என்றே தெரியவில்லை என்று கண்கலங்கி நிற்கும் திருமேனியிடம் பேசுவதற்கான எண்:9843501683.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.inAdvertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X