வாழ்வின் அழகு

Added : ஆக 20, 2019
Advertisement

விடையறியாத புரியாத புதிர்களால் ஆனது வாழ்வு. என்னதான் வயதும் அனுபவமும் கூடிக்கொண்டே இருந்தாலும் நம் சிற்றறிவுக்கு எட்டாத ஆயிரம் விஷயங்கள் இந்த உலகத்தில் உண்டு.
ஒருமூச்சுக்கும் மறுமூச்சுக்கும் இடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது வாழ்வெனும் விந்தைப் பெண்டுலம். அன்பைப் பொழிந்து வளர்த்த குழந்தை தன்னைவிட்டு தன் வழிதேடி அப்பால்சென்ற துரோகம் தாங்க முடியாமல் அவள் படம்போட்டுக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர்முழுக்க ஒட்டிய பெற்றோர் முதல், சமீபத்தில் மனஅழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட கோடீஸ்வர தொழிலதிபரின் இறப்பு வரை ஏன்? ஏன்? என்கிற புரியாத கேள்விகள் ஆயிரமாயிரம் நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. எல்லாவற்றையும் படித்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் நாம் இன்னும் வாழப்படிக்கவில்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது.
எதுவுமே வேடிக்கை தான்
எதுவுமே வேடிக்கைதான் அது நமக்கு நடக்கும் வரை! எதுவும் நிலையில்லை என்பதைத்தான் உலகமயமாக்கல் நமக்குத் தெளிவாக உணர்த்திக் கொண்டே இருக்கிறது. விடிந்தால் என்ன ஆகுமோ எனும் பயத்தோடும் பதற்றத்தோடும் ஒவ்வொருநாளும் உறங்கப் போகிறோம். எதிர்பாராத ஒன்று நடக்கும்போது நாம் நிலைகுலைந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். குடும்ப உறவுகளாலும் வெளியில் நடைபெறும் நிகழ்வுகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு மனஅழுத்தத்தில் ஆழ்கிறோம்.யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று மரணிக்கும் வரை மனதிற்குத் தெரிவதேயில்லை. அகமும் புறமும் புரிந்தால் வாழ்க்கை தேன், இல்லையென்றால் வாழ்க்கை வீண். ஓட்டைவாளியை வைத்து நாம் நம் சமுத்திர சாகரத்தை அள்ளி நிரப்ப நினைப்பதன் விளைவு குழப்பம், சோகம், கண்ணீர். பெருஞ்சுமை என்பதும் வெறும் சுமை என்பதும் மனத்தின் கற்பிதம்தான். மகிழ்ச்சியாக இருந்த நிமிடங்களில்தான் நாம் உண்மையில் வாழ்ந்திருக்கிறோம். ஆயிரம் தோல்விகளைக் கண்டவனுக்குப் பத்து வெற்றிகள் குறித்து பரிதாபம் வரப்போவதில்லை.'ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே,' என்று எதெல்லாம் கேடுதரும் என்று நம் முன்னோர் அழகாக எழுதிவைத்துப் போனது நாம் நம்மைப் புரிந்துகொள்ளத்தான்.
பார்வையில்தான் எல்லாம்
உறுத்திய கண்களால் உலகைப் பார்க்கும்போது எல்லாம் கலங்கலாகத்தான் இருக்கும். எல்லாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. பார்க்கிறவருக்கும் பார்க்கப்படுகிறவருக்கும் இடையில் இருக்கிறது பார்வைக் கோளாறு. பல நேரங்களில் நம் துன்பங்களுக்குக் காரணமே நம் பார்வைக் கோளாறுதான்! நம் பார்வையில் குறைபாடு வருகிறபோது எப்படி அதன் அளவைக் கணித்து மூக்குக்கண்ணாடி அணிந்து சரிசெய்கிறோமோ அதேபோல் அவ்வப்போது நாம் செய்வது சரிதானா என்று ஆராய்ந்து பார்த்து சரிசெய்துகொள்ளவில்லை என்றால் அது நம்மை எங்காவது கொண்டு கவிழ்த்துவிடும்.நம்மை வருத்தப்படுத்த நினைப்பவர்களுக்கு நாம் தரும் தண்டனை அவர்களுக்கு முன் புன்னகையோடு வாழ்வது ஒன்றுதான். அழுவதற்கா அனுப்பப்பட்டிருக்கிறோம்? புன்னகை பூக்கவல்லவா நாம் புவிக்கு வந்திருக்கிறோம். முட்சொற்களை முன்னிறுத்துவதற்கா நாம் பிறந்திருக்கிறோம். பூத்துக்குலுங்கும் மலர்கள் மாதிரி காத்துக்குலுங்குகிறது வாழ்வெனும் பெருவனம். சுமக்கத் தெரிந்தால் சுமைகூடச் சுகம்தான். தவலைகள் நிரம்பிய பழையவீடுகள் மாதிரி கவலைகள் நிரம்பியது இன்றைய வீடுகள். நாம் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வைப் பாழாக்கும். வெற்றியும் தோல்வியும் மனதின் தந்திரங்கள். எதையும் தேடாதிருங்கள் தொலைந்த எல்லாம் தானாகக் கிடைக்கும். நாம் நடந்த கால்களுக்குக் கீழே நாம் கடந்தபாதைகள் இருப்பதை மறந்துவிட்டீர்களே!
முதல் வெற்றி
வாழ்வின் அழகு வசதியோடு இருப்பதன்று, வாழ்வை அசதியில்லாமல் நகர்த்துதல். வறுமையிலும் செம்மை பெருமை, வெறுமையிலும் பொறுமையோடிருத்தல் அருமை. நம்மை ரசிப்பதும் அந்தந்த நிமிடத்திலும் வசிப்பதும் வாழ்வின் முதல் வெற்றி. சொற்களால் சொல்லமுடியாத கனமான ரணத்தை நாம் சிந்தும் ஒற்றை மவுனம் தந்துவிடும். நாம் அமைதியாக இருக்க மற்றவர் துணை ஏன்? எனக்கான என் வாழ்வை நான் மட்டுமே வாழமுடியும். கத்தியால் மட்டுமல்ல நம் சொல்லாலும் கிழிக்கமுடியும் என்பதைச் சற்றும் புரியாமல் இறுதிவரை நம்மோடு வருவது நம் உறுதிதான். வாழ்வையும் தாழ்வையும் கற்றுத்தரும் விந்தைப்பள்ளிதான் நம்வாழ்க்கை. நடந்துபோக மட்டுமல்ல, பிடிக்காதவற்றைக் கடந்துபோகவும்தான் கால்கள். வளராத மரமுமில்லை தளராத மனமுமில்லை.அருகருகே இருந்தாலும் தண்டவாளங்கள் எந்தப்புள்ளியிலும் ஒன்று சேரமுடியாது. உறவுகளும் அப்படித்தான். வந்துமோதும் கோடி உறவுகளைவிட வென்று நிற்கும் உண்மை உறவு ஒன்றுபோதும். நெருக்கம் நெருப்பைப் போன்றது; அருகில் சென்றால் சுட்டுவிடுகிறது. ஊர்ந்து செல்லும் எறும்புகள் நமக்கு விளக்குகின்றன சேர்ந்து வாழ்வதன் மகத்துவத்தை! இதைப் புரியாதவர்களைக் கண்டு நாம் ஏன் புலம்பி நிற்கவேண்டும்? பக்கத்தில் இருந்து பகையை வளர்ப்பதைவிடத் துாரத்திலிருந்து அன்போடு இருப்பது எவ்வளவோ மேல்!
அலட்சியப்படுத்துங்கள்
நாளை மாறும் என்ற நம்பிக்கை நம் நாளை மாற்றும் இன்பக் கை! எல்லோருக்கும் பிடித்தமாக வாழவேண்டும் என்றால் எப்போதும் நாம் குழந்தையாகத்தான் இருக்கவேண்டும். பூச்சிகளைத்தான் சிலந்திவலை சிறைப் பிடிக்கிறது, வண்டுகளை அதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நீங்கள் அனுமதிக்காதவரை யாரும் உங்களை எதுவும் செய்துவிடமுடியாது. அற்பவிஷயங்களை அலட்சியப்படுத்துங்கள். உங்களை விலக்கி வைத்தவர்களிடம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
சாத்தியமற்றதைச் சாத்தியமாக்குவது கடும்உழைப்பால் மட்டுமே! இறைவன் அளித்த வரங்கள் உழைத்து நம்மை மேலேற்றும் நம் கரங்கள், அவை நம்மோடிருக்கும் வரை நமக்கென்ன கவலை? விழிப்பதற்கே உறக்கம், வெற்றிக்கே தோல்விகள். கவலைகளின் கலவையா நாம்? காயங்களைக் காலங்களே ஆற்றும். என்றும் அஞ்சியஞ்சிச் சாவதைவிட ஒருநாள் வருவதை எதிர்கொள்வது சாலச்சிறந்தது. ஆதலால் வெற்றியால் நாளை தொடங்குங்கள், வெற்று நாளன்று இந்த நாள் வெற்றி நாள் என்று உரக்கச் சொல்லுங்கள்.மகிழ்ச்சி எனும் பேரூற்றுஅன்பு என்பது நீரூற்று, வாழ்வில் மகிழ்ச்சி என்பது பேரூற்று. நினைவுகளின் நெடுவனம் மனம், இருப்பதை வெறுத்துவிட்டு இல்லாததைப் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறது இந்த விந்தை மனம். முடிவே இல்லாத முயற்சி இல்லை, பிரிவே இல்லாத உறவுமில்லை. நெளிந்த நதியில் தெளிந்த நீர்போல் உங்கள் மனம் உங்களை மாற்றும். நீங்கள் மகிழ்ச்சியாயிருந்த நிமிடங்களை அவ்வப்போது நினைத்துக்கொள்ளுங்கள், மேலும் மேலும் உற்சாகமாவீர்கள். வருத்தம் வசந்தமாகும்! காயம் மாயமாகும். வீணாக்கிய நிமிடங்கள் நம் வாழ்வில் நாம் இழந்தசொர்க்கங்கள். சலனமற்று இருத்தல் சாதனைக்கு வழி. அடுத்தவரைக் கெடுத்து வாழ்வதா வாழ்வு! பிறருக்குக் கொடுத்து வாழ்வதே வாழ்வு. அள்ளிக்கொடுக்க ஏதும் இல்லை என்று வருந்தவேண்டாம், நம் முகம் சிந்தும் புன்னகையும் உற்சாகமான சொற்களும் நம்மையும் நம் சுற்றித்தையும் உற்சாகமாய் மாற்றும்.மண்ணைத் துளைத்து முளைக்கும் சிறுசெடி மாதிரி விண்ணைத் துளைத்துப் பொழியும் சிறுமழை மாதிரி நம்மைத் துளைத்து நம்மில் நாம் முளைப்போம். கோடை கண்டு புலம்பியதில்லை மரங்கள்! வாடை கண்டும் வருந்தியதில்லை அதன் கரங்கள். எது இன்று நம்மைவிட்டுப் போகிறதோ அது நமக்கு ஏதாவது ஒருவிதத்தில் நம்மிடம் மீண்டும் வந்துசேரும் என்பதைப் புரிந்தவர்கள் எதற்கும் புலம்புவதில்லை, எதைக்கண்டும் அஞ்சுவதில்லை.- பேராசிரியர் சவுந்தர மகாதேவன்தமிழ்த்துறை தலைவர்சதக்கத்துல்லா அப்பா கல்லுாரிதிருநெல்வேலி,99521 40275

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X