மதுரை : 'ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக தனியார் பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயரும்,' என, மதுரையில் பால் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
நான்கு ரக ஆவின் பாலில் 45 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் எப்.சி.எம்., (புல் கிரீம் மில்க்) பால் 51 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இந்த ரக பால் தான் டீக்கடைகள், திருமணம் என வணிக ரீதியாக அதிகம் விற்பனை ஆகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் விலை உயர்த்திய ஆவின் தற்போது தான் மீண்டும் உயர்த்தியுள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் 18 மாதங்களில் மூன்று முறையும், இறுதியாக ஜூலை 1 அன்றும் லிட்டருக்கு 2 ரூபாய் விலை உயர்த்தியதால் தற்போது ஒரு லிட்டர் 56 ரூபாய்க்கு விற்கிறது.
பால் விற்பனையாளர் முகமது முகைதீன் கூறியதாவது: கோடையில் மாட்டுத்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் பால் மாடு வளர்ப்போர் கூடுதல் விலைக்கு தீவனம் வாங்குவர். இதனால் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி, பால் விலையையும் உயர்த்தும். ஆவின் நிர்வாகம் கொள்முதல் விலையை உயர்த்தியதால் பால் விலை உயர்ந்துள்ளது. ஆவின் பால் விலை உயர்வின் எதிரொலியாக தனியார் பால் விலை 2 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
விலை உயர்வால் 8 ரூபாய்க்கு டீ விற்றவர்கள் 10 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். 10 ரூபாய்க்கு காபி விற்றவர்கள் அதே விலையை தொடர்கிறார்கள் என்றார்.