சண்டிகர் : இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் 51 ஆண்டுகளுக்கு முன் விழுந்து நொறுங்கியதை ராணுவத்தின் தேடுதல் குழுவினர் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர். பனி மலையில் சிதறி கிடக்கும் விமானத்தின் பாகங்கள் மற்றும் வீரர்களின் உடல்களை மீட்கும் பணியில் ராணுவமும் விமானப்படையும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்திய ராணுவம் சந்தித்திராத பயங்கர விபத்து 1968 பிப்ரவரி 7ல் நிகழ்ந்தது. அந்த சோகமயமான நாளில் பஞ்சாபின் சண்டிகர் நகரிலிருந்து ஜம்மு - காஷ்மீரின் லே பகுதிக்கு102 வீரர்களுடன் விமானப்படையின் 'ஏ.என். - 12' விமானம் புறப்பட்டுச் சென்றது. பாதி வழி சென்று கொண்டிருக்கும் போது காலநிலை மிகவும் மோசமாக இருந்ததால் தொடர்ந்து பறக்க முடியாது என்பதை உணர்ந்த விமானி சண்டிகர் நோக்கி விமானத்தை திரும்பியுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. ஹிமாச்சல பிரதேசத்தின் டாக்கா பனிமலை பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. எனினும் அதற்கான எவ்வித ஆதாரங்களும் சிக்னல்களும் கிடைக்கவில்லை;
இத்தனை ஆண்டுகளாக வீரர்கள் கதி என்னவென்றே தெரியவில்லை. 'மோசமான கால நிலையால் விமானம் திசை மாறிச் சென்று பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்து விட்டது; அதில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்; அந்த தகவலை பாக். மறைக்கிறது' என்ற யூகச் செய்திகள் ராணுவ வட்டாரத்தில் வலம் வந்தன. எனினும் ஏ.என். 12 விமானத்தை தேடும் பணி அவ்வப்போது நடந்து வந்தது. அந்த விமானம் பயணித்த பாதையில் வீரர்கள் குழு சென்று அணுக முடியாத பனி மலையில் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டனர்; எனினும் வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில் 'டோக்ரா ஸ்கவுட்' எனப்படும் டோக்ரா படைப் பிரிவின் இளம் வீரர்கள் குழு கடந்த மாதம் 26ல் ஹிமாச்சல பிரதேசத்தின் இமயமலை பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அதில் விமானத்தின் இன்ஜின்கள் இருக்கைகள் உயிரிழந்த வீரர்கள் 90 பேரின் உடைகள் மற்றும் உடைமைகள் சிக்கின.
அந்த விபரங்கள் டில்லி ராணுவ தலைமையக கோப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டதில் நொறுங்கி கிடந்தது 51 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இருந்தனர். அவர்களும் இந்த விபத்தில் இறந்திருக்கக் கூடும் என நம்பப் படுகிறது.

விபத்து நடந்த இடத்திலிருந்து விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் இறந்த வீரர்களின் உடைமைகளை மீட்கும் பணியில் விமானப்படை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவை முழுமையாக மீட்கப்பட்டதும் 51 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சோக விபத்தின் பல காரணங்களும் கதைகளும் தெரிய வரும்.