பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்து, 25 நாட்களுக்கு பின், இன்று(ஆக.,20) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

பதவியேற்பு:
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையிலான, மதசார்பற்ற ஜனதா தளம், காங்., கூட்டணி அரசு, நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து, ஆட்சியமைக்க, பா.ஜ.,வின் எடியூரப்பா உரிமை கோரினார்; ஜூலை, 26ல், முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். ஆனால், அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

இந்நிலையில், முதல்வர், எடியூரப்பா டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான அமித் ஷாவிடம், அமைச்சரவை விரிவாக்கத்துக்கு, 17ல் ஒப்புதல் பெற்றார். அதன்படி, இன்று, புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். பா.ஜ.,வில், 105 எம்.எல்.ஏ.,க்கள், 18 எம்.எல்.சி.,க்கள் உள்ளனர். இவர்களில், 15 முதல், 20 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்:
முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, பெங்களூரு விதான் சவுதாவில் நடக்கிறது. பின், 10:30 மணிக்கு, ராஜ்பவனில், அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கும் என, முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை, ராஜ்பவன் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.