புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபிஸ் சயீதின், பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில், பெயர் இடம்பெறாமல் இருக்க, தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்ட தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
மும்பை தொடர்வெடிகுண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது நடத்தும் பலாக் ஐ இன்சனியாட் அமைப்புக்கு (எப்ஐஎப் )சட்டவிரோதமாக பணம் கொண்டு வரப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஹபீஸ் சயீது, எப்ஐஎப் துணை தலைவர் ஷாகித் மெக்முத், உதவியாளர் முகமது கம்ரான், துபாயை சேர்ந்த பாகிஸ்தானியர் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள், பாகிஸ்தானிலிருந்து துபாய் வழியாக, இந்தியாவுக்கு சட்ட விரோதமாக பணம் கொண்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக டில்லியில் வடக்குப்பகுதியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
புகார்
அப்போது, இந்த வழக்கில், தொழிலதிபரின் பெயர் இடம் பெறாமல் இருக்க என்ஐஏ அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டனர். இதனையடுத்து அந்த தொழிலதிபர், என்ஐஏ உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

விசாரணை
இந்நிலையில், என்ஐஏ செய்தி தொடர்பாளர் கூறுகையில், அதிகாரிகள் தவறான நடவடிக்கை குறித்து புகார் வந்தது. இதன் அடிப்படையில், டிஐஜி பதவியில் உள்ள அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை சுமூகமாக நடக்க அந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி ஒருவர் எஸ்பி ரேங்கில் உள்ளவர் எனவும், அவர், 2007 ல் நடந்த சம்ஜவுதா வெடிகுண்டு தாக்குதல் வழக்கை விசாரித்தவர் எனவும், மற்ற இரண்டு பேர், இளநிலை அதிகாரிகள் எனவும் கூறப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement