புதுடில்லி: பாகிஸ்தானுக்கு நண்பனாக நடித்துக்கொண்டு இருக்கும் சீனா, உண்மையில் காஷ்மீர் மீது ஒரு கண் வைத்துள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஏதாவது பங்கு கிடைத்தால் அதை அமுக்கலாம் என சீனா காத்திருக்கிறது.
கடந்த 1950களில் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இந்த கோபத்தில் 1962ல் போர் தொடுது்து இந்திய பகுதிகளை சீனா கடுமையாக தாக்க துவங்கியது. இதன் பின் காஷ்மீரின் அக்சய் சன் பகுதியை சீனா கைப்பற்றியது. இதன் மூலம் காஷ்மீரில் சீனா காலடி பதித்ததுடன், மத்திய ஆசியாவை கண்காணிக்கும் இடமாகவும் மாற்றியது.தொடர்ந்து ஒரிரு ஆண்டுகளில், சியாச்சின் வடமேற்கு பகுதியில் உள்ள 5 ஆயிரம் சதுரகி.மீ., பரப்பளவு கொண்ட கரகோரம் பகுதியை தன்னிடம் வழங்க பாகிஸ்தானை சீனா வலியுறுத்தியது. இப்படி செய்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சீனா நுழையாது என்ற நம்பிக்கையில், அப்பகுதியை பாகிஸ்தான், ஒப்படைத்தது. இதற்காக சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டது. 1959களுக்கு முன்னர், அப்பகுதியின் சில இடங்களை தனக்கு சொந்தமானது எனக்கூறிய சீனா, அதனை தனது வரைபடத்திலும் சேர்த்திருந்தது.

1963ல் பாகிஸ்தானுடன் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு, அப்பகுதியில் தனது இருப்பை அதிகரிக்க பொருளாதார ரீதியாக முதலீடுகளை செய்ய துவங்கியது. தொடர்ந்து சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் பைபர் பக்துன்க்வாவில் (முன்பு இது வடமேற்கு மாகாணம்) உள்ள அபோதாபாத் வரை காரகோரம் நெடுஞ்சாலையை அமைக்க துவங்கியது.ஆனால், 1963ல் சீனா பாகிஸ்தான் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்த இந்தியா, இது சட்ட விரோதமானது எனக் கூறியதுடன் கரகோரம் நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சாலைக்கு எதிராக, 2009 ல் தான் ஐநாவில் புகார் கொடுத்தது. இதற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் , சீனா தனது முதலீட்டை அதிகரித்தது.1963 ஒப்பந்தம் மற்றும் தைவான் விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ஓட்டு போட்டது. இதனால், 1962 வரை காஷ்மீர் விவகாரத்தில் நடுநிலையாக செயல்பட்ட சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாறியது. இந்த விவகாரத்தை ஐ.நா., உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் எழுப்பியது. 1963 ஒப்பந்தப்படி, இந்தியா, பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் முடிந்த பின்னர், காஷ்மீரில் அதிக நிலங்களை சீனா கையகப்படுத்த முடியும்.
1960, 70, 80களில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக தீர்வு ஏற்பட்டால், அங்கு அதிக நிலங்கள் கிடக்கும். அந்த பகுதியில் தனது எல்லை அதிகரிக்கலாம் என நினைத்தது சீனா. ஆனால், இந்த எண்ணத்தை 1980க்கு பிறகு, பொருளாதாரம் மற்றும் நிதிநிலை சார்ந்து மாற்றிக் கொண்ட சீனா காஷ்மீர் விவகாரத்திலும் தனது நிலைப்பாட்டை மாற்றியது. அப்போது முதல், இந்த விவகாரத்தில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான 1972 சிம்லா ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி, இரு நாடுகளும் பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும் எனக்கூறியது. இந்தியா சீனா இடையிலான பொருளாதார உறவு 1990 மற்றும் 2000ம் ஆண்டுகளில் அதிகரிக்க துவங்கியது. 2019ம் ஆண்டு நிலவரப்படி இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியது.
ஆனால், சீனா பாகிஸ்தான் நாடுகளுக்குஇடையிலான வர்த்தகம் 15 பில்லியன் டாலர் மட்டுமே. பொருளாதார நலனுக்காக இந்தியாவும், பிராந்திய நலனுக்கு பாகிஸ்தானும் சீனாவுக்கு தேவைப்பட்டது. இதனால், தான், காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்ட சீனா நடுநிலைக்கு மாறியது. அதே நேரத்தில் பாகிஸ்தானில், அதிகளவு முதலீடு செய்த சீனா, குவாடர் துறைமுகம் மூலம், இந்திய கடல் பகுதியில் தனக்கான பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் லட்தியத்தை நிறைவேற்ற துடித்தது. இதற்காக அந்த துறைமுகத்தை 1990களில் புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டியது. இதற்கான பணி 2002ல் துவங்கியது.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் பகுதியை அடைய, ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாதை அமைத்தது.
இதற்காக சீன - பாகிஸ்தான் பொருளாதார பாதை (சிபிஇசி) உருவாக்கியதுடன், 2015ல், 45 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தது. தற்போது, இந்த முதலீடு 60 பில்லியன் டாலராக அதிகரித்தது.இந்த பாதையின் ஒருபகுதி கில்ஜித் வழியாக செல்கிறது. இந்த பாதையில் அமையும் திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்க தனது ராணுவத்தை இறக்கியது. தொடர்ந்து சீனா, சிபிஇசி திட்டத்தை, தனது பெல்ட் மற்றும் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, இது, இந்தியாவின் இறையாண்மையை மீறுவதாக குற்றம்சாட்டியது.
சிபிஇசியின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, இதற்காக 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சீன ராணுவ வீரர்களை களம் இறக்கியது. இவர்களுடன் பாகிஸ்தான் ராணுவத்தின் 5 ஆயிரம் வீரர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். இருப்பினும், பாதுகாப்பில் சந்தேகமாக உள்ள சீனா, கில்ஜித் மற்றும் பலுசிஸ்தான் பகுதியிலும் ராணுவ வீரர்களை இறக்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை இந்திய வீரர்கள் கண்காணிக்க துவங்கினர்.
பாகிஸ்தானில், நிரந்தராக ராணுவ தளத்தை அமைக்க சீனா முயற்சி செய்வதாக, அமெரிக்க பாதுகாப்பு துறை எச்சரித்தது. இங்கு எவ்வளவு வீரர்கள் இருப்பார்கள் என கணக்கு தெரியாவிட்டாலும், 11 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை சீன ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.சிபிஇசி கட்டுமானம் காரணமாக, காஷ்மீர், சீனாவுக்கு முக்கியமாக இருந்தாலும், காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்தியா தெளிவாக கூறிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானின் ஆதரவால், காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா கால் பதித்துள்ளது. இது வெறும் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட அக்சய் சின் பகுதியுடன் நிற்காது. மேலும் தொடரும் அபாயம் உள்ளது.