மும்பை: டிஸ்கவரி சேனலில் பிரபலமான, 'மேன் வெர்சஸ் வைல்டு' என்ற நிகழ்ச்சிக்காக, தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் இணைந்து, பிரதமர் மோடி, அடர்ந்த காடுகளில் மேற்கொண்ட சாகச பயண நிகழ்ச்சி ஒளிபரப்பு, உலகின் மிகவும் பிரபலமான டி.வி. டிரெண்டிங் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, 'டிஸ்கவரி சேனல்' நிறுவனம், வனம் மற்றும் மிருகங்களை பற்றிய தகவல்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் புகழ் பெற்றது. இதில், மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சியை பியர்ஸ் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார்.

இதில் கேமரோ மேனுடன் யாருமே இல்லாத, அடர்ந்த வனப் பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள ஆபத்து, சவால்களை சமாளித்து, உயிர் பிழைப்பது தான், இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். இந்த சாகச நிகழ்ச்சிகளை வீடியோவாக தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. பல்வேறு மொழிகளில் 'டப்பிங்' செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.
இந்நிலையில், கடந்த ஆக். 12ம் தேதி மேன் வெர்சஸ் வைல்டு சிறப்பு நிகழ்ச்சி, 180 நாடுகளில் ஒளிபரப்பானது. இதில், பியர் கிரில்சுடன், பிரதமர் மோடியும் உத்தர்கண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா வனப்பகுதிகளில் பங்கேற்று சாகச பயணம் செய்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில், காட்டிற்குள், பியர்ஸ் கிரில்சுடன், பிரதமர் மோடி செல்லும் புகைபடம் மற்றும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
மோடியின் சாகச பயண புகைப்படம், வீடியோ பதிவுகள் உலகின் மிகவும் பிரபலமான டி.வி. நிகழ்ச்சி டிரெண்டிங்கில் முதலிடம் பெற்றுள்ளன. இது குறித்து பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளதாவது: பிரதமர் மோடியுடான எனது சாகச பயணம் ஒளிபரப்பு செய்யப்பட்டது முதல் இதுவரை 340 கோடிக்கும் (3.4 பில்லியன்) அதிகமான டி.வி. பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சமூக ஊடங்களை கண்காணிக்கும் மெல்ட் வாட்டர் என்ற உளவு நிறுவனம் வாயிலாகவும் தெரியவந்துள்ளது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE