ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் சிதம்பரம் கைது! | Dinamalar

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் சிதம்பரம் கைது!

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (55)

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், 24 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த, சடுகுடு ஆட்டத்தின் முடிவில், காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாயமான அவர், காங்., தலைமையகத்திற்கு நேற்று இரவு திடீரென வந்தார். 'தலைமறைவாகவில்லை' என நீண்ட விளக்கம் அளித்தார். தன்னுடைய வீட்டுக்கு சென்ற சிதம்பரத்தை பின் தொடர்ந்து சென்ற, சி.பி.ஐ., அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர். சி.பி.ஐ., தலைமையகத்தில், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2004 முதல், 2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்தது. அப்போது, மத்திய நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக பணியாற்றினார், காங்., மூத்த தலைவரான, சிதம்பரம்.


CBI again lands at Chidambaram's residence

CBI again lands at Chidambaram's residence


அனுமதிகடந்த, 2007ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனம், 305 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை பெறுவதற்கு, நிதி அமைச்சகத்தின் கீழுள்ள, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது.


Chidambaram press conference

Chidambaram press conferenceAdvertisementசிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீட்டில், இந்த அனுமதி அளிக்கப்பட்டதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, கடந்தாண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.இதைத் தவிர, 3,500 கோடி ரூபாய், 'ஏர்செல் - மேக்சிஸ்' மோசடி வழக்கிலும், சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமான போக்கு வரத்து துறையில் நடந்த ஊழல்கள் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு, நாளை ஆஜராக, அமலாக்கத் துறை, அவருக்கு ஏற்கனவே, 'சம்மன்' அனுப்பி உள்ளது.


Chidambaram press conference

Chidambaram press conference


முன்ஜாமின் மனுஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்ஜாமின் கேட்டு, சிதம்பரம், கடந்தாண்டு, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரைக் கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அது பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருடைய முன்ஜாமின் மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து, சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலையே மனு தாக்கல் செய்யப்பட்டது.


P. Chidambaram

P. Chidambaram

ஆனால், 'அவசர வழக்காக விசாரிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் கைவிரித்தது. நேற்றும் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், நாளை அதை விசாரிப்பதாக கூறியுள்ளது.நேற்று முன்தினம் மாலை, உச்ச நீதிமன்றத்தில் இருந்து சென்ற, சிதம்பரம் திடீரென மாயமானார்; அதையடுத்து, அவர் தலைமறைவாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. உடன், அவரை தேடப்படும் நபராக அறிவித்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தேடி வந்தன. இந்நிலையில், நேற்று இரவு, 8:15 மணிக்கு காங்., தலைமையகத்தில் திடீரென ஆஜரான, சிதம்பரம், தான் தலைமறைவாக இல்லை என, நீண்ட விளக்கத்தை வாசித்தார்.


CBI officials outside the residence of Chidambaram

CBI officials outside the residence of Chidambaram


தடுத்தனர்நேற்று முன் தினத்தில் இருந்து, சிதம்பரத்தை தேடி வந்த, சி.பி.ஐ., அதிகாரிகள், காங்., அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால், அவர்களை உள்ளே விடாமல், கட்சித் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்.காங்., தலைமையகத்தில் இருந்து, ஜோர்பாக்கில் உள்ள தன் வீட்டுக்கு சிதம்பரம் சென்றார். சி.பி.ஐ., அதிகாரிகளும் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆனால், வீட்டின் வெளிப்புற வாயில் கதவு, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதையடுத்து, சுவரேறி குதித்துஅதிகாரிகள் உள்ளே சென்றனர். அவருடைய வீட்டை, சி.பி.ஐ., அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.


நீண்ட நேரம் நடந்த விவாதங்களுக்குப் பிறகு, சிதம்பரத்தை கைது செய்து, சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்பதால், அவருடைய வீட்டுக்கு முன், காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள், சி.பி.ஐ., வாகனத்தை, அங்கிருந்த செல்லவிடாமல் தடுக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு, அவர்களை அப்புறப்படுத்தினர்.சி.பி.ஐ., தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிதம்பரத்திடம், இந்த வழக்கு தொடர்பாக, அதிகாரிகள், இரவு முழுவதும் விசாரணை நடத்தினர்.


நாளை விசாரணை!'டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, முன்ஜாமின் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என, சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. 'மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என, காங்.,கைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள், கபில் சிபல், சல்மான் குர்ஷித், விகேக் தங்கா, இந்திரா ஜெய்சிங் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை மனு கொடுத்தனர்.

ஆனால், நீதிபதிகள், என்.வி.ரமணா, எம். சந்தனகவுடா, அஜய் ரஸ்தோகி அமர்வு, இதை நிராகரித்தது. அவசரமாக விசாரிக்க அனுமதி கேட்டு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோயை அணுகும்படி கூறியது.அதைத் தொடர்ந்து, இந்த நீதிமன்ற அறையில் இருந்து, தலைமை நீதிபதி அமர்வு அறைக்கு, வழக்கறிஞர்கள் விரைந்தனர். மனுவில், சில தவறுகள் உள்ளதால், அவற்றை திருத்தி வரும்படி, தலைமை நீதிபதி அமர்வு கூறியது.

தவறை திருத்திக் கொண்டு, வழக்கறிஞர்கள் மீண்டும் சென்றபோது, அயோத்தி தொடர்பான வழக்கை விசாரிக்கும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி இருந்தார்.மீண்டும், நீதிபதி ரமணா அமர்வு முன் சென்று, அவசரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், விசாரணைப் பட்டியலில் இடம்பெறாததால், அதை விசாரிக்க முடியாது என, அமர்வு கூறியது. அயோத்தி வழக்கு விசாரணையை முடித்து வந்த, தலைமை நீதிபதியுடன், பதிவாளர் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


'தலைமறைவாகவில்லை'காங்., தலைமையகத்துக்கு நேற்று இரவு திடீரென வந்த சிதம்பரம், ஒரு அறிக்கையை படித்தார். அவர் கூறியதாவது:நானோ, என்னுடைய குடும்பத்தாரோ, எந்த ஒரு வழக்கிலும், எந்த விசாரணை அமைப்பாலும், குற்றவாளிகளாக சேர்க்கப்படவில்லை. நான் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. சட்டத்தில் இருந்து மறைந்திருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அடுத்தக்கட்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு, தேவையான ஆவணங்களை, வழக்கறிஞர்களுடன் தயார் செய்து கொண்டிருந்தேன்.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. நான் சட்டத்தை மதிப்பவன். அதுபோலவே, விசாரணை அமைப்புகளும், சட்டத்தை மதிக்கும் என, எதிர்பார்க்கிறேன். என்னுடைய மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் வரை, இந்த நாட்டில், சுதந்திர தீபம் சுடர்விட்டு ஒளிரும் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு வழக்குமஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, '63 மூன்ஸ் டெக்னாலஜி' என்ற நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:எங்களுடைய துணை நிறுவனமான 'நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்' பண மோசடி செய்ததாக கூறி, அப்போது நிதி அமைச்சராக இருந்த, சிதம்பரம், மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கே.பி. கிருஷ்ணன், ரமேஷ் அபிஷேக் ஆகியோர் எங்களை மிரட்டி வந்தனர்.

பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தியும், எங்களுடைய நிறுவனம் மோசடி செய்ததாக நிரூபிக்கப்படவில்லை. எங்களுடைய நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சதி திட்டம் தீட்டியதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த, மும்பை உயர்நீதின்றம், 'அக்., 15ல் சிதம்பரம் உட்பட மூவரும் நேரில் ஆஜராக வேண்டும்' என, சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில்,'மனுதாரரின் புகார் மனு மற்றும் அது தொடர்பாக தாக்கல் செய்துள்ள ஆவணங்களை தர வேண்டும்' என, சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ராகுல், பிரியங்கா ஆவேசம்சிதம்பரத்திற்கு எதிராக, சி.பி.ஐ., தரப்பு வேகம் காட்டுவதாக, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், காங்கிரசில் உள்ள சில மூத்த தலைவர்கள், இவ்விஷயத்தில் மவுனம் காக்கின்றனர்.காங்., பொதுச் செயலர், பிரியங்கா, தனது, 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், சிதம்பரத்தை, சி.பி.ஐ., வேட்டையாடுவதாக வர்ணித்துள்ளார். அதில் பிரியங்கா கூறியிருப்பதாவது:

மரியாதைக்குரியவரான சிதம்பரம், பார்லிமென்ட் உறுப்பினரும்கூட. உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளில், பொறுப்புணர்வுடன், பல ஆண்டுகள் பணியாற்றியவர். இப்படிப்பட்டவரை, கோழைகள் வேட்டையாடுகின்றனர். நாங்கள், சிதம்பரத்துக்கு பக்கபலமாக, துணை நிற்கிறோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
காங்., முன்னாள் தலைவர் ராகுல், ''சிதம்பரத்தின் மீதான மரியாதையையும் அவரது கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையுடன், முதுகெலும்பு இல்லாத சில ஊடகங்களும், மோடி அரசால் ஏவப்படுகின்றன. அதிகாரத்தை மிகவும் மோசமான முறையில், பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்," என, குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர், சல்மான் குர்ஷித், ராஜ்யசபா காங்கிரஸ் துணைத் தலைவர், ஆனந்த் சர்மா உள்ளிட்ட வெகு சிலரைத் தவிர, காங்., கட்சியை சேர்ந்தவர்கள், இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகின்றனர். காங்., தலைவர் சோனியா, மூத்த தலைவர்களான மன்மோகன்சிங், அகமது படேல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர், எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.


தேடப்படும் நபராக அறிவிப்புஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று முன்தினமும், நேற்றும் முயற்சிகள் மேற்கொண்டனர். டில்லியின் ஜோர்பாக் பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு பலமுறை சென்று காத்திருந்தனர். ஆனால், வீட்டில் சிதம்பரம் இல்லை. இந்நிலையில், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலும் இல்லை. அவருடைய செல்போனும், 'ஆப்' செய்யப்பட்டுள்ளது.பல இடங்களில் தேடியும், சிதம்பரம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

அதையடுத்து, அவரை தேடப்படும் நபராக அறிவித்து, அமலாக்கத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. சி.பி.ஐ.,யும் நேற்று மாலை, இது போன்ற அறிவிப்பை வெளியிட்டது.நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டு உள்ளது. 'எங்களுடைய அனுமதி இல்லாமல், நாட்டின் எல்லையைத் தாண்டுவதற்கு, சிதம்பரத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது' என, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


எங்கே சென்றார்?'சிதம்பரம் எங்கும் தப்பியோடவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவிலும், நீதிபதிகள் முன்னிலையிலும், அவருடைய சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால், நேற்று முன்தினம் மாலை வரை, உச்ச நீதிமன்றத்தில் இருந்த சிதம்பரம், எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டில்லி உயர் நீதிமன்றம், முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தபோது, சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில், தன் ஜூனியர் வழக்கறிஞர்களுடன் இருந்தார்.அப்போது, தனது அலுவலக உதவியாளருடன், காரில் ஏறிச் சென்றார். அதன்பிறகு எங்கே சென்றார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், அவருடைய கார் டிரைவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.'உச்ச நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும், அவருடைய உதவியாளரையும், என்னையும் நடுவழியில் இறக்கிவிட்டு, அவர் சென்றார். ஆனால், எங்கே செல்கிறார் என்பதை தெரிவிக்கவில்லை' என, டிரைவர் கூறியுள்ளார்.முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் இருந்து புறப்படும்போதே, தனது செல்போனை, சிதம்பரம் அணைத்து வைத்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X