நிம்மதியிழந்த நீலகிரி பெருமழையால் பேரழிவு பீதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிம்மதியிழந்த நீலகிரி பெருமழையால் பேரழிவு பீதி

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (5)
Share
நிம்மதியிழந்த,நீலகிரி,பெருமழையால்,பேரழிவு,பீதி

சுற்றுலாவுக்கும், தேன்நிலவுக்கும், தன்னை தேடி வருவோரை ஈரக்காற்றால் ஈர்த்து குளிர்போர்த்தி குதுாகலிக்கச் செய்யும் நீலகிரி மலையரசியின் பேரழகை, அவ்வப்போது உரசிப்பார்த்து உருக்குலைக்க முயற்சிக்கிறது பெருமழை!

வானிலை முன்னறிவிப்புகள், நீலகிரி மக்களின் நிம்மதியை குலைக்கும் அளவிற்கு நிலச்சரிவும், மண்சரிவும் மரணபீதியை ஏற்படுத்துகின்றன. எப்போது பெருமழை கொட்டினாலும், 2009ல் ஏற்பட்ட பேரழிவை நினைத்தே கதிகலங்கிப் போகின்றனர், மலை மாவட்ட மக்கள்.

சமீபத்திய மழையும், கடந்த கால கசப்பான நினைவுகளை, கண்முன் நிறுத்திச் சென்றிருக்கிறது. ஏறத்தாழ, 1,000 வீடுகள் சேதமடைந்து, 5,000 மக்கள் முகாமிற்கு மாறி, மீண்டும் இருப்பிடத்துக்கு திரும்பிய நிலையிலும், சகஜ வாழ்க்கையில் இன்னமும் அவர்களால் சங்கமிக்க முடியவில்லை.
காரணம், மழை புரட்டிப்போட்ட வீடுகளும், விவசாய நிலங்களும், மரங்களும், சாலைகளும் போர்க்கள பூமியாய் இன்னமும் அப்படியேதான் உள்ளன. இதை, நமது குழுவினரின் நேரடி ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.


பேரிடர் அபாயம்: விழிக்காத அரசுபேரிடர் சமயங்களில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், உயிர், உடமைக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க, பேரிடர் மேலாண்மை திட்டம், நீலகிரியில் உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த, 2009ல், மழையின் போது ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுக்கு பின் தனியார் ஏஜன்சி மூலம், கிராமம் கிராமமாக மக்களுக்கு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட்டது. மழையின்போது நிலச்சரிவு, மண் சரிவு ஏற்படக்கூடிய இடங்கள், புவியியல் துறையினரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டன.

கடந்த, 2009ல், 110 இடங்கள் அத்தகைய நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டது; தற்போது, இது, இரட்டிப்பாகி உள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் பிராங்க்ளின் கூறியதாவது:நீலகிரியில் மழையின் போது மண் சரிவு, நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். மழையின் போது பேரிடர் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்போரை, அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற்றி மாற்றிடத்தில் இடமளிப்பது மிகப்பெரிய சவாலான காரியம். நீர்நிலை ஆக்கிரமிப்புகள்தான், பேரிடர் பாதிப்புக்கு முக்கிய காரணம் என தெரிந்தும் ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.

கிராமந்தோறும் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற குழுக்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு தொடர் பயிற்சி இல்லாததால், பெயரளவில் மட்டுமே செயல்படுகின்றன. மழை வருவதற்கு முன்பே, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை, மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், கிராமங்கள்தோறும் ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்த வேண்டும். இதை, மொபைல் போன்களில் இருந்து இயக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை கையாளும் போது பேரிடர் பாதிப்பில் இருந்து, மக்களை பாதுகாப்பது எளிதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


மறுவடிவமைப்பு குறித்து ஆராய்ச்சிவனம், விவசாய நிலங்களுக்கு செக்டேம், பண்ணைக்குட்டை, குளம், மழைநீர் வடிகால் போன்ற நீர் தேக்க வடிவமைப்பை தயாரித்து, பரிந்துரை செய்யும் பணியை இந்திய மண், நீர் வள பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் செய்து வருகிறது.இம்மையத்தின், ஊட்டி நிலைய தலைவர் (பொ) கண்ணன் கூறியதாவது:

மாதக்கணக்கில் பெய்ய வேண்டிய மழை, புவி வெப்பமயமாதல் காரணமாக ஒரே நாளில் கொட்டி தீர்க்கிறது. ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் அதிகபட்ச மழையளவை பொறுத்துதான், செக்டேம், பண்ணைக்குட்டை போன்ற நீர்நிலை ஆதார அமைப்பு வடிவமைத்து, வனத்துறை, வேளாண்,
விவசாயம் உட்பட நீர்நிலை பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் துறையினருக்கு பரிந்துரை செய்கிறோம்.

தற்போதைய நிலையில், 60 ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட வடிவமைப்பு தான் பரிந்துரை செய்யப்படுகிறது. கடந்த, 7,8, தேதிகளில் ஊட்டி அவலாஞ்சியில் ஒரே நாளில், 900 மி.மீ., அளவுக்கு மழை கொட்டி தீர்த்ததால் நில அமைப்பில் மாறுதல் ஏற்பட்டிருக்கும். அதன் அடிப்படையில், செக்டேம், பண்ணைக்குட்டை போன்றவற்றின் ஆழம், நீளம், அகலம், அவற்றை தேர்வு செய்வதற்கான இடம் போன்ற வடிவமைப்புகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்; இந்த வடிவமைப்பு மாற்றம் குறித்த ஆராய்ச்சி விரைவில் துவங்கும்.இவ்வாறு, கண்ணன் தெரிவித்தார்.


வெளியுலகு அறியாத பழங்குடிகள்நீலகிரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும், பனியர் இன பழங்குடிகள் வசிக்கும் இடங்களில் கூடலுார், இருவயல் மொளப்பள்ளி பகுதியும் ஒன்று. மூங்கில் குச்சியால் வேயப்பட்டு, மண்பூச்சு மூலம் கட்டப்பட்ட ஐந்து வீடுகள் உள்ளன. சமீபத்தில் அங்கு பெய்த கனமழையில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேறு சகதியானது; சிலரது வீடுகளும் சேதமடைந்தன. மூங்கில் குச்சி வைத்து வீடுகட்டும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்மணி என்பவர் கூறுகையில்,''மாற்றிடம் மட்டுமே எங்கள் பிரச்னைக்கு ஒரே தீர்வு,'' என்றார். 'நகர்புறத்துக்கு இடம் பெயர்ந்து, குழந்தைகளை படிக்க வைத்து, அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் ஆசை உங்களுக்கு இல்லையா?' என்ற கேள்விக்கு, மவுனத்தையே பதிலாக தருகின்றனர். வெளியுலகம் அறியாத தங்களது பூர்வீக வாழ்விடங்களை விட்டுவிட்டு, வெளியேற அந்த மக்கள் தயாரில்லை; காரணம், அதையே அவர்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X