கோல்கட்டா : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ ஆற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடற்கரை கிராமமான திகா பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். துட்டாபுர் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றிற்கு சென்ற மம்தா, குழந்தை ஒன்றை தாயிடம் இருந்து வாங்கி கொஞ்சுகிறார். பின்பு அந்த குழந்தைக்கு கடையில் இருந்து கேக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து டீக்கடைக்குள் சென்ற அவர், கடை உரிமையாளரிடம் டீ தயாரிக்க என்னென்ன பொருட்கள் சேர்த்தீர்கள் என கேட்டார்.

பின்பு மம்தாவே டீ தயாரித்து தன்னுடன் வந்த கட்சியினர், அதிகாரிகளுக்கு கொடுக்கிறார் இந்த காட்சியை அங்கிருந்த பலரும் தங்களின் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவை மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், " சில சமயங்களில் சின்னச் சின்ன உற்சாகங்கள் தான் வாழ்க்கையை ச்ந்தோஷமாக மாற்றும். இன்று துட்டாபுரில் அனைவருக்கும் டீ தயாரித்து கொடுத்தேன். எனக்கு சமையலறையில் வேலை செய்வதும், சமைப்பதும் மிகவும் பிடிக்கும். ஆனால் நேரமின்மை காரணமாக அதை மிகவும் தவற விடுகிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக.,21 ம் தேதி இரவு 7.12 மணிக்கு பதிவிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை சுமார் 5000 பேர் பார்த்துள்ளனர். டீக்கடையில் முதல்வர் டீ ஆற்றிய வீடியோவை மேற்குவங்க வாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE