புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் டில்லியில் நேற்று (ஆக.,21) இரவு 10 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து இரவு முழுவதும் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று (ஆக.,22) பிற்பகல் 2 அல்லது மாலை 4 மணிக்கு டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஆஜர்படுத்தப்பட்டாலும் அவரை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தவே சிபிஐ தரப்பில் கேட்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சிதம்பரம் தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுவார் என தெரிகிறது.சுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நாளை (ஆக.,23) தான் விசாரணைக்கு வர உள்ளதாக காங்., கட்சியை சேர்ந்தவரும், சிதம்பரத்திற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் என்ன செய்ய விரும்புகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும், நடந்த அனைத்தும் வேதனை தருவதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒத்துழைக்கவில்லை?
இதனிடையே, அதிகாரிகள் விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. 3 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்வதாகவும் கூறப்படுகிறது. இதனை முன்வைத்து காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE