வேலூர்: மேம்பாலத்திலிருந்து, கயிறு கட்டி தொழிலாளியின் சடலத்தை கீழே இறங்கி, மயானத்துக்கு உறவினர்கள் எடுத்துச்சென்ற அவலம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, அலசந்தாபுரத்தை சேர்ந்தவர் குப்பன், 55. கூலித்தொழிலாளி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அவர், கடந்த, 16ல் புத்தூர்கோவிலில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதி இறந்தார். பிரேத பரிசோதனக்கு பின்னர், அவரது உடல் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சொந்த ஊரான நாராயணபுரம் அலசந்தாபுரத்துக்கு உடலை எடுத்துச்சென்ற உறவினர்கள், அங்குள்ள அலசந்தாபுரம் ஆற்றின் அருகே உள்ள மயானத்தில், இறுதி சடங்கு செய்ய மாலை, 5:00 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். வழியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், அதே பகுதியை சேர்ந்த வேடியப்பன், 55, என்பவர் முள்வேலி அமைத்திருந்தார். மயானம் செல்ல வழியின்றி, அவரிடம் கேட்டபோது, வழி ஏற்படுத்தி தர மறுத்துள்ளார். இதனால், குப்பனின் உடலை உறவினர்கள் தூளியில் வைத்து, கயிறு கட்டி, 20 அடி உயர ஆற்று மேம்பாலத்திலிருந்து, கீழே இறங்கினர். பின், ஆற்றின் வழியாக மயானத்துக்கு எடுத்துச்சென்று தகனம் செய்தனர். தகவலின்படி, இது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE