நாகர்கோவில்: மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மாண்டாவியா நேற்று கன்னியாகுமரி வந்தார்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மாண்டாவியா, நேற்று முன் தினம் நள்ளிரவு டில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் குமரி வந்த அவர், கேரளா அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
நேற்று காலை அங்கிருந்து பகவதியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட அவர், கன்னியாகுமரி துறைமுக நிறுவன அலுவலகத்தில், வ.உ.சி., துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமசந்திரன், துணை தலைவர் வையாபுரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
குமரி வந்த இணை அமைச்சருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் பிரசாந்த மு வடநேரே, மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத் ஆகியோர் வரவேற்றனர்.
துறைக நிறுவன அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கு பின்பு, முட்டம் கலங்கரை விளக்கம் உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டார். பின்னர், மாலையில் கால் மூலம் தூத்துக்குடி சென்றார்.
மத்திய இணை அமைச்சர் வருகையை முன்னிட்டு, அவர் தங்கியிருந்த விருந்தினர் பா.ஜ., குமரி மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் கூடியிருந்து வரவேற்றனர்.
கடந்த பா.ஜ., ஆட்சியில் குமரியில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய திட்டம் அமைக்க ரூ.28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்துறைமுகம் அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, மீனவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதையடுத்து துறைமுக திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சரின் குமரி வருகை ரகசியமாக வைக்கப்பட்டது. துறைமுக அதிகாரிகளுடனான கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.