ஸ்ரீநகர், காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுவாக அமைதி நிலவுகிறது; மிகவும் மெதுவாக இயல்பு நிலைக்கு மீண்டு வருகிறது.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் விலக்கி கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுப்பதற்காக, பெரும்பாலான பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; சில இடங்களில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், காஷ்மீரின் பெரும்பாலான பகுதி களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதையடுத்து, சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இந்த வார துவக்கத்தில், பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், மாணவர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில் நேற்று, மாணவர் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.மாவட்டங்கள் இடையே வாடகை கார்கள் இயக்கப்படுகின்றன. தொலைபேசி சேவை மேம்பட்டுள்ளது. அதே நேரத்தில், செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.மாநிலத்தில், விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வரும் நிலையில், இயல்பு நிலை அங்கு திரும்பி வருகிறது. எவ்வித போராட்டங்களோ, வன்முறைகளே, நேற்று நடக்கவில்லை.