மூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண் கைது | Dinamalar

மூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண் கைது

Added : ஆக 23, 2019
Share
 மூதாட்டிகளை கத்தியால் குத்தி நகை பறித்த பெண் கைது

புதுச்சேரி:வயதான சகோதரிகளை கத்தியால் குத்தி, 3 சவரன் நகையை பறித்துச் சென்ற பெண்ணை, 24 மணி நேரத்தில் கைது செய்த பெரியக்கடை போலீசாரை சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் பாராட்டினார்.
புதுச்சேரி கோவிந்தசாலை பகத்சிங் வீதியில், சகோதரிகளான லாரன்ட் கிளாரா,70; தேவி,65, ஆகிய இருவர் மட்டும் வசிக்கின்றனர்.நேற்று முன் தினம் காலை 11.௦௦ மணியளவில், இவர்களின் வீட்டுக்குள் புகுந்த, பர்தா அணிந்த பெண், கத்தியால் குத்தி 3 சவரன் நகையை பறித்துச் சென்றார்.பெரியக்கடை போலீசார் நடத்திய விசாரணையில், பர்தா அணிந்த பெண் ஆட்டோவில் ஏறி, புது பஸ் நிலையம் சென்றது தெரிந்தது. உடனடியாக போலீசார் பஸ்நிலையம் சென்றபோது, அப்பெண், பர்தாவை கழற்றிவிட்டு, வேறு ஆட்டோவில் கோவிந்தசாலைக்கு செல்வது தெரிந்தது. அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று, அந்தப்பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர், கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி மங்கலேஸ்வரி (60) என்பதும், மூதாட்டிகளை தாக்கி, நகை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். மங்கலேஸ்வரி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:புதுச்சேரி சின்ன சுப்பராயப் பிள்ளை வீதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறேன். குடும்பச் செலவை சமாளிக்க முடியாத அளவிற்கு பண கஷ்டம் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். யாரிடமாவது நகை திருடி கடனை அடைக்க திட்டமிட்டேன். அப்போது, கோவிந்தசாலையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தேவியும், கிளாராவும் மட்டுமே வசிப்பதை தெரிந்து, அவர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டேன்.அந்த வீட்டை நோட்டமிட்டதில், இருவரும் பூஜைக்காக காலை 10 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருப்பர். மற்ற நேரங்களில் கதவை உட்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிடுவர் என தெரிந்தது.பூஜைக்காக கதவை திறக்கும்போது கொள்ளையடிக்க முடிவு செய்தேன். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை புதிதாக வாங்கினேன். முன் எச்சரிக்கையாக கத்தி ஒன்றையும் வாங்கி வைத்துக் கொண்டேன்.சம்பவத்தன்று காலை 11 மணிக்கு பூஜைக்காக கதவை திறந்தபோது, பர்தா அணிந்து உள்ளே புகுந்தேன். தேவி, நீ யார், எங்கிருந்து வருகிறாய் என கேட்டார். அவரது கழுத்திலிருந்த 3 சவரன் நகையை பறித்து, முயன்றேன். அவர் தடுக்கவே, கத்தியால் குத்தி நகை பறித்தேன். இதனை கண்ட கிளாரா வந்து என்னை பிடிக்க முயன்றார். அவரையும் கத்தியால் குத்தினேன். அங்கிருந்து ஆட்டோவில் பஸ் நிலையத்திற்கு சென்றேன். ஆட்டோ பதிவெண் மூலம் சிக்கிக் கொண்டேன்.இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார் .கைது செய்யப்பட்ட மங்கேலேஸ்வரியை, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்ததற்காக, எஸ்.பி. மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், முருகன், புனிதராஜ் ஆகியோரை சீனியர் எஸ்.பி.ராகுல் அல்வால் பாராட்டினார்.'முதியோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் கூறியதாவது:போலீசார் சிறப்பாக செயல்பட்டு, மூதாட்டிகளை தாக்கி நகை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை கைது செய்துள்ளனர். இப்பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு டி.ஜி.பி., மூலம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எப்போதும் கதவை பூட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் யாரேனும் வந்தால் கதவை திறக்காமலேயே பதில் கூறி அனுப்பிவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X