புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ், 1984 ம் ஆண்டு அவசர நிலையின் போது கூட மக்களை அச்சுறுத்தவோ அல்லது சட்டதிட்டங்களை தகர்க்கவோ இல்லை என காங்., இடைக்கால தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த விழாவில் சோனியா கலந்த கொண்டு பேசினார். தலைவரை தேர்வு செய்வதில் காங்.,க்குள் இருந்த பிரச்னைகள் தீர்ந்த பிறகு சோனியா கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். விழாவில் பேசிய சோனியா, ராஜின் ஆட்சி காலத்துடன் மோடி அரசை ஒப்பிட்டு கடுமையாக தாக்கி பேசினார்.அவர் பேசுகையில், "1984 ல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் என்ற அதிகாரம் பெற்றிருந்தும், மக்களை அச்சுறுத்தும் அல்லது பயத்தில் வைத்திருக்கும் சூழலை உருவாக்கும் எந்த உத்தரவையும் ராஜிவ் பிறப்பிக்கவில்லை. 1989 ல் முழு பெரும்பான்மையை பெற முடியாதால் காங்., ஆல் வெற்றி பெற முடியவில்லை. இருந்தும் மக்களின் அந்த தீர்ப்பை ராஜிவ் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். ராஜிவ் செய்ததை இன்று செய்வது கடினம்.

அரசு இயந்திரங்களை, மத்திய அரசு பழிவாங்குவதற்காக பயன்படுத்துகிறது. ராஜிவ் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொண்டு, எந்த பாரபட்சமான முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இன்று கடந்த காலங்களை பற்றி புதிதாக கண்டுபிடிப்பதில் சிலர் பிஸியாக உள்ளனர். ராஜிவ் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். பிரிவினை சக்திகளுக்கு எதிராக கொள்கை பிடிப்புடன் காங்., தொடர்ந்து போராடும் என்றார். தொடர்ந்து காங்., தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுலின் துணிச்சலான முடிவையும் சோனியா பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE