கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் எங்கே? : தமிழகம் முழுவதும் உஷார்! | Tamil Nadu on high alert following terror threat Read | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் எங்கே? : தமிழகம் முழுவதும் உஷார்!

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (38)
Share
கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் எங்கே? :  தமிழகம் முழுவதும் உஷார்!

கோவையில், பாக்., பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின்படி, 2,000த்துக்கும் மேற்பட்ட போலீசார், தமிழகம் முழுவதும், தீவிர தேடுதல் மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பஸ், ரயில் நிலையங்களில், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil newsஇலங்கையில், ஏப்., 21ல், ஈஸ்டர் தினத்தன்று, சர்ச் உட்பட பல்வேறு இடங்களில், யங்கரவாதிகள் நடத்திய, தொடர் குண்டுவெடிப்பில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இலங்கை சென்று விசாரித்ததில், குண்டுவெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகளுடன், தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக, தகவல் கிடைத்தது.தொடர்ந்து, தமிழகத்தில் கோவை, சென்னை உட்பட பல்வேறு இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, பலரை கைது செய்தனர்.


எச்சரிக்கை


இந்நிலையில், நாடு முழுவதும், செப்., 2ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.'இவ்விழாவின் போது, கோவையில் தாக்குதல் நடத்த, லஷ்கர் - இ - தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பாகிஸ்தானி ஒருவர், இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள், ஐந்து பேர் என, ஆறு பயங்கரவாதிகள், கோவைக்குள் ஊடுருவி உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்' என, தமிழக போலீசாருக்கு, மத்திய உளவுத் துறை, நேற்று முன்தினம் இரவு எச்சரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news
latest tamil news
latest tamil newsஇதைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையம், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட, மக்கள் கூடும் இடங்களில், தீவிர சோதனை நடக்கிறது.வெளி மாநிலத்தில் இருந்து, கோவை வழியாக வரும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு பெட்டியாக, போலீசார் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் சோதனை நடத்தினர்.


2,000 போலீசார்


கோவை மாவட்டத்தில் உள்ள, 14 சோதனை சாவடிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கோவை நகரில், தற்காலிகமாக, 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,000த்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஏ.டி.ஜி.பி., வருகைதமிழக, சட்டம் - ஒழுங்கு, ஏ.டி.ஜி.பி., ஜெயந்த் முரளி, நேற்று காலை, கோவை வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சென்று, பவானி ஆற்று பாலம் அருகே நடந்த, வாகன சோதனையை ஆய்வு செய்தார்.நிருபர்களிடம், அவர் கூறுகையில், ''மத்திய உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடக்கிறது. வாகனங்கள் மட்டுமல்லாது, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், போலீசார் சோதனை செய்து, பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.


நெற்றியில் திலகம்கோவையில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பஸ் நடத்துனர்கள், ஓட்டல் நிர்வாகத்திற்கு, போலீசார் முக்கிய அறிவுரை வழங்கி வருகின்றனர். இதன்படி, 'இலங்கை தமிழ் பேசியபடி, சந்தேக நபர்கள் வந்தால், அவர்கள் பெயர் விபரத்தை கேட்டு, போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் பயங்கரவாதிகள், பொதுமக்களுக்கு சந்தேகம் வராதபடி இருக்க, நெற்றியில் திலகமிட்டு சுற்றுவதாகவும், தகவல் கிடைத்துள்ளது.எனவே, சந்தேப்படும் படியாக, ஹிந்து மத அடையாளங்களுடன் சுற்றி வருவோர் குறித்து, உடனடியாக, போலீசுக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சூலுாரில் உள்ள விமானப்படை தளத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும், சுழற்சி முறையில், படைத்தள பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூரில் பதுங்கலா?


தொழில் நகரான திருப்பூர், பல்வேறு மாநிலத்தவரின் வசிப்பிடமாக மாறி வருகிறது. கடந்த காலங்களில், நக்சல் அமைப்பினர், இங்கு பிடிபட்டுள்ளனர். தற்போது, ஊடுருவியுள்ள பயங்கரவாத கும்பல், திருப்பூரில் பதுங்கி, மேட்டுப்பாளையம் வழியாக, கோவைக்குள் ஊடுருவியிருக்க வாய்ப்புள்ளதாகவும், தகவல் பரவியுள்ளது. இரு நாட்களாக, திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


1 லட்சம் போலீசார்


தமிழகம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும், போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து, 'கியூ' பிரிவு, உளவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் கண்காணிக்கின்றனர்.கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையங்களுக்கு, ஆறு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாநில எல்லைகளில், தீவிர சோதனைக்கு பின், வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வேளாங்கண்ணி மாதா ஆலயம் போன்ற வழிபாடு மற்றும் சுற்றுலா தலங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில், உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும், 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில், 'மெட்டல் டிடெக்டர்' வாயிலாக சோதனை செய்த பின், பயணியர் அனுமதிக்கப் படுகின்றனர்.தலைமைச் செயலகம், அமெரிக்க துணை துாதரகம், நட்சத்திர ஓட்டல்கள், சினிமா தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து, எச்சரிக்கை வந்த அடுத்த நிமிடமே, சென்னை முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கூடுதல் கமிஷனர்கள், இணை, துணை கமிஷனர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, 'ஸ்ட்ராமிங் ஆப்பரேஷன்' என, சென்னையில், அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


அச்சம் வேண்டாம்!


தமிழக காவல் துறை, பயங்கரவாதிகளின் படங்கள் மற்றும் அவர்களின் வாகன எண்களை வெளியிட்டுள்ளது என, தகவல் பரவி வருகிறது; இதில் உண்மை அல்ல. தற்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் சோதனை நடக்கிறது; பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்.திரிபாதிடி.ஜி.பி.,


புதுச்சேரி முதல்வர் கார் சோதனைபுதுச்சேரி முதல்வர், நாராயணசாமி, நேற்று காலை, 10:15 மணிக்கு, டில்லியிலிருந்து விமானத்தில், சென்னை வந்தார். இவரது காரை, போலீசார் தீவிரமாக சோதனையிட்ட பின்னரே, நாராயணசாமியை காரில் ஏறிச் செல்ல அனுமதித்தனர்.- நமது நிருபர் குழு -


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X