காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி உறவு முறிந்தது?பரஸ்பர குற்றச்சாட்டுகளால் பரபரப்பு

Added : ஆக 23, 2019
Advertisement

பெங்களூரு:கூட்டணி ஆட்சி கவிழ யார் காரணம் என்பது தொடர்பாக, இரு கட்சி தலைவர்களும் பகிரங்க கருத்து மோதலில் ஈடுபட்டு வருவதால், ம.ஜ.த., காங்கிரஸ் கூட்டணி முறிந்து விட்டதாக கருதப்படுகிறது.
இதற்கு முத்தாய்ப்பாக, ''கூட்டணி அரசு கவிழ, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடாவும், அவரது மகன்களும் தான் காரணம்,'' என, காங்கிரசின் முன்னாள் முதல்வர் சித்தராமையா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது, கர்நாடக அரசியலில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் குமார சாமி தலைமையில், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, 2018 மே 23ம் தேதி அமைந்தது. 14 மாதங்களுக்குள் ஜூலை 23ம் தேதி கவிழ்ந்தது.'இதற்கு, காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் காரணம்' என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா மற்றும் ம.ஜ.த., தலைவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டியிருந்தனர்.
பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்து, பெங்களூரு குமாரகிருபா சாலையிலுள்ள தன் இல்லத்தில், சித்தராமையா, நேற்று அளித்த பேட்டி:கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு நான் காரணம் என, தேவகவுடா குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு பதிலளிக்காமல் இருந்தால், தவறாகிவிடும். நான் மவுனமாக இருப்பதும் சரியில்லை. ஆதாரமின்றி அரசியல் காரணங்களுக்காக, என் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு, குமாரசாமியும், அவரது சகோதரர் ரேவண்ணா, தேவகவுடா ஆகியோர் தான் காரணம் என, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்; நான் காரணமல்ல.எந்த காரணத்துக்காகவும் பா.ஜ., ஆட்சிக்கு வரக் கூடாது என்று நினைத்தவன் நான். காங்கிரசுக்கு, 80 எம்.எல்.ஏ.,க்கள் பலம் இருந்தும், மேலிட உத்தரவின் படி, மறு பேச்சு பேசாமல் ம.ஜ.த.,வுக்கு ஆதரவளித்தோம்.
14 மாத ஆட்சி
குமாரசாமியின் 14 மாத ஆட்சியில் நான் தலையிடவில்லை. அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு சரியாக நிதி ஒதுக்கி, அபிவிருத்தி பணிகள் செய்திருந்தால், இந்த நிலை எழுந்திருக்காது.அவர்கள் செய்த தவறை மறைப்பதற்கு, என் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். நான் ஐந்தாண்டுகள் முதல்வராக இருந்தபோது, எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி தெரிவித்தனரா?கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த தீர்மானத்தையும், குமாரசாமி அமல்படுத்தவில்லை.
அவரது ஒரு தலைபட்ச செயல்பாட்டால், எம்.எல்.ஏ.,க்கள் வருத்தமடைந்தனர்; இதுவும் அதிருப்திக்கு காரணம்.அரசியலில் வளர, தேவகவுடா விட மாட்டார்; யாரையும் வளர்க்கவில்லை. அவர் குடும்பத்தினரை மட்டுமே அரசியலில் வளர்ப்பார். ஒக்கலிகர், லிங்காயத்துக்கு நான் எதிரி போன்று தேவகவுடா குற்றஞ்சாட்டினார்.
ஆனால், அதே ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த பச்சேகவுடா, சந்திரேகவுடா, ராமேகவுடா ஆகியோரை வளர்த்தாரா?நான் மனித ஜாதி. அனைத்து ஜாதியினருக்கும் நல திட்டங்கள் அமல்படுத்தினேன். மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவன்; அதன்படி தான் நடப்பேன்.லோக்சபா தேர்தலில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி வேண்டாம் என, காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் கூறியது உண்மை. ஆனால், மேலிட முடிவுக்கு கட்டுப்பட்டு, நானும், தேவகவுடாவும் பல தொகுதிகளுக்கு, ஒரே ஹெலிகாப்டரில் பயணித்து பிரசாரம் செய்தோம்.
ஆனாலும், மாண்டியா, துமகூருவில் ம.ஜ.த., தோற்பதற்கு நான் தான் காரணம் என்றார். அப்படி பார்த்தால், கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு வடக்கு, மைசூரு, சாம்ராஜ்நகரில் காங்கிரஸ் தோற்பதற்கு யார் காரணம்? குடும்ப அரசியல் காரணமாக ம.ஜ.த.,வுக்கு மக்கள் ஓட்டுபோடவில்லை.
நானும் ம.ஜ.த.,வில் இருந்தவன் தான். எனவே தேவகவுடா செய்யும் சூழ்ச்சி, தந்திரம் அனைத்து தெரியும். எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சி காலத்துக்கு பின், 2004ல் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.நாடகம்அப்போது, மூத்த காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டில், தேவகவுடா, சிந்தியா, நான், எஸ்.எம்.கிருஷ்ணா உட்பட முக்கியமானோர் ஒன்று கூடினோம். ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து, முதல்வர் பதவி வழங்குவதாக சரத் பவார் கூறினார்.
ஆனால், எனக்கு முதல்வர் பதவி கிடைக்க கூடாது என்பதற்காக, காங்கிரஸ்காரர்களே முதல்வர் பதவி வகிக்கும்படியும், ம.ஜ.த.,வுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.'ஏன் முதல்வர் பதவி வேண்டாமென கூறுகிறீர்கள்?' என, தேவகவுடாவிடம் கேட்டேன்.
இதற்கு, 'எஸ்.எம்.கிருஷ்ணா மீது வழக்கு தொடர்ந்துள்ளோம், நாம் முதல்வர் பதவியேற்றால், அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டியதிருக்கும். சோனியாவிடம் பேசியுள்ளேன்' என்றார்.பின், தரம்சிங் முதல்வராகவும், நான் துணை முதல்வராகவும் பதவி வகித்தோம். ஆனால், திடீரென காங்கிரசுடன் கூட்டணி முறித்துக் கொண்டார். அப்போது, தான் இறந்தாலும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என, தேவகவுடா கூறியிருந்தார். ஆனால், தன்னை ஆலோசிக்காமலேயே பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது போன்று நாடகமாடினர்.
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, குமாரசாமி முதல்வராகவும், எடியூரப்பா துணை முதல்வராகவும் பதவியேற்றனர். தலா 20 மாதம் ஆட்சி நடத்த தீர்மானித்தனர். ஆனால், 20 மாதங்கள் முதல்வர் பதவியை குமாரசாமி அனுபவித்து விட்டு, எடியூரப்பாவை முதல்வராக்காமல், கொடுத்த வாக்குறுதியை தவறினர்.அன்று எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி கொடுத்திருந்தால், 20 மாதம் கழித்து அவர் வீட்டு சென்றிருப்பார். ஆனால், 110 இடங்கள் வரை பா.ஜ., வளர தேவகவுடாவும், குமாரசாமியும் காரணமாகினர்.
பா.ஜ.,வும் தன் பலத்தை அதிகரித்துக் கொண்டது. எனக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் செய்தேன் என, குமாரசாமியும், சட்டசபை கூட்டத்தொடரில் ஒப்புக்கொண்டார். குமாரசாமி சிறந்த முதல்வராக இருந்திருந்தால், 2004ல் 59 இடங்களில் வென்ற ம.ஜ.த., 2008ல் 27 ஆக குறைந்தது ஏன்?சூழ்ச்சி அரசியல்ஜாதி பெயரை பயன்படுத்தி கண்ணீர் விட்டு அழுவதே தேவகவுடாவின் நாடகம்.
நான் ஒரு போதும் சூழ்ச்சி அரசியல் செய்ததில்லை.எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அமர, கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, நான் சதி செய்ததாக தேவகவுடா கூறியுள்ளார். முதல்வர் பதவிக்காக ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதை பார்த்துள்ளோம்.ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக, கவிழ்த்துள்ளதாக கூறுவது சரியில்லை. ராமகிருஷ்ண ஹெக்டே, பொம்மை, தரம்சிங் ஆகியோரின் ஆட்சியை கவிழ்த்தது தேவகவுடா. ஆட்சியை கவிழ்ப்பது தந்தை மற்றும் மகன்களின் பிறப்பு குணம். பழையதை பேசி பயனில்லை; ஆனாலும் உண்மை கூற வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
தேவகவுடா - சித்தராமையா ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதை பார்க்கும் போது காங்கிரஸ் - ம.ஜ.த., இடையே ஒட்டி கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச கூட்டணியும் முறிந்தது தெளிவாகிறது.இந்த லாபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பா.ஜ., முயற்சித்து வருகிறது. சித்தராமையாவின் பேட்டி, கர்நாடக அரசியலில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.சித்தராமையா குற்றச்சாட்டின் பின்னணியில், காங்கிரஸ் மேலிடம் இருப்பது உறுதியாகியுள்ளது. காங்கிரசுடனான கூட்டணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. சட்டசபை இடைத்தேர்தலில், 17 தொகுதி களிலும் ம.ஜ.த., தன் வேட்பாளர்களை நிறுத்தும். கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் தலைவர்கள் கடைப்பிடிக்கவில்லை
.எச்.கே.குமாரசாமி, மாநில தலைவர், ம.ஜ.த.,காலம் கூடி வரட்டும்சித்தராமையா பேட்டி பற்றி தன் 'டுவிட்டர்' பக்கத்தில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிடுகையில், ''சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் நேரம் இதுவல்ல. நாட்டின் அரசியல் சூழ்நிலை மாறி வருகிறது. எனவே மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டிய வேளையில், குற்றச்சாட்டும் பணிகள் நல்லதல்ல. காலம் கூடி வரும்போது கண்டிப்பாக அனைத்துக்கும் பதிலளிப்பேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X