தி.மு.க., போராட்டம்; பாக்.,கிற்கு கொண்டாட்டம்!
காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் இதுவரை எடுத்த முயற்சிகள், உலக அரங்கில் தோல்வியையே சந்தித்துள்ளன. சீனாவை தவிர, மற்ற நாடுகள், பாகிஸ்தானின் அலறலுக்கு செவி சாய்க்கவில்லை. இந்திய பொருட்கள் மீது, பாகிஸ்தான் விதித்துள்ள வர்த்தக தடையால், இந்தியாவிற்கு பாதிப்பில்லை;
பாகிஸ்தானுக்கே பாதிப்பு!அந்த பகுதி மக்களை, திசை திருப்பி, வன்முறையில் இறக்கி விட்டு, வேடிக்கை பார்ப்பர் என்பதற்காகத் தான், காஷ்மீர் பிரிவினைவாதிகளையும், அரசியல் தலைவர்களையும், வீட்டுச் சிறையில், மத்திய அரசு வைத்துள்ளது. இணையதள தொடர்புகளை துண்டித்துள்ளது.அமைதியை விரும்பும் மக்களுக்கு, எந்த தொந்தரவும் இல்லை; பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையே, அவர்கள் இயல்பாக செயல்படுகின்றனர்.பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்போரும், வதந்திகளை கிளப்பி விட்டு, குளிர் காய்வோரும் தான், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, குய்யோ முறையோ என, கூக்குரல் எழுப்புகின்றனர்.மத்திய அரசு, எந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும், கண்ணை மூடி, அதை எதிர்க்கும், தி.மு.க., இதுவரை, தமிழகத்தில் தான், 'அரசியல்' செய்து வந்தது; இப்போது, டில்லியிலும் போய், 'காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்; இணையதள இணைப்பு கொடு' என, கோஷம் போட்டுள்ளது.அந்த கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காங்., கம்யூனிஸ்டுகள் போன்ற, அவர்களின் வழக்கமான கூட்டணி கட்சிகளின் தலைவர்களே கலந்து கொண்டனர். பொதுமக்களோ அல்லது பொதுநல அமைப்புகளோ, நாட்டின் நலன் விரும்பும் கட்சிகளின் பிரதிநிதிகளோபங்கேற்கவில்லை.பாக்., பார்லிமென்ட்டில், இந்தியாவிற்கு எதிராக அந்நாடு அறிமுகப்படுத்தும் எந்த தீர்மானத்தையும், அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில்லை.
அப்படி இருக்கும் போது, காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து, போராட்டம் நடத்திய இக்கட்சிகளுக்கு, நாட்டின் நலன் பெரியதில்லை என்பது, வெட்ட வெளிச்ச மாகியுள்ளது; அவர்களின் தேசப்பற்றும் வெளிப்பட்டுள்ளது.டில்லியில், தி.மு.க., ஏற்பாடு செய்த, காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய பத்திரிகைகள் அக்கறை காட்டவில்லை. மறுநாள் வெளியான நாளிதழ்களில், எங்கோ ஒரு மூலையில், அந்த செய்திகளை பிரசுரித்தன. ஆனால், பாகிஸ்தானில், அந்நாட்டின் பத்திரிகைகளில், 'டிவி'க்களில், தலைப்பு செய்தியே, டில்லியில், தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டம் தான்!'காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன - இந்திய தலைவர்கள் கண்டனம்' என்ற பெயரில், 'டிவி'க்களில் தலைப்பு செய்திகளாகவும், பத்திரிகைகளில் முதல் பக்க செய்திகளாகவும் வெளிவந்தன. தி.மு.க., போராட்டம், பாக்.,கிற்கு கொண்டாட்டமாக போயிற்று!
இந்தியாவில் பிற மாநில மக்களின் வரிப்பணம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு தாராளமாக அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியை ஜம்முவிற்கும், அதிலும் கொஞ்சத்தை, லடாக்கிற்கும் கொடுத்தது போக, அனைத்தையும், காஷ்மீர் மக்களே அனுபவித்து வருகின்றனர்.புத்த மதத்தினர் அதிகமாக வாழ்கின்றனர் என்பதால், லடாக்கை ஒரு பொருட்டாகவே, காஷ்மீர் முஸ்லிம்கள் மதிப்பதில்லை. லடாக் பகுதி மக்களின் மொழிக்கு அங்கீகாரம் கிடையாது. அவர்களது உணர்வுகளையும், வளர்ச்சியையும், காஷ்மீர் மாநிலத்தில், ஆட்சியில் இருந்தோர் உதாசீனப்படுத்தினர்.இனிமேல் அவ்வாறு நடக்காது... ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளதால், அனைத்து சமுதாயத்தினரும், அங்கு சமமாக நடத்தப்படுவர். அதற்கான வாய்ப்பு தான், ௩௭௦வது பிரிவு ரத்து!
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும், நம் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது.மதம் மட்டுமே, நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடாது என்பதை, அப்பகுதி பிரிவினைவாதிகளும், அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். தரமான கல்வியும், நேர்மையான உழைப்பும் தான், முன்னேற்றத்தை தீர்மானிக்கின்றன. இதை, இனி மேலாவது அந்த பகுதி, மக்கள் உணர வேண்டும்; அப்போது தான், அங்கு அமைதி திரும்பும்!இதுவரை, சொல் புத்தியுடன் செயல்பட்டு வந்த காஷ்மீர் மக்களை, சுயமாக சிந்திக்க வைக்க வேண்டும். நமக்காக உழைக்கும் அரசால், நாம் ஆளப்படுகிறோம் என, நம்பும் படியான சூழலை, புதிதாக அங்கு அமையவிருக்கும் அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.அதுவரை, பிரிவினைவாதிகளையும், மக்களின் மூளையை சலவை செய்யும் அரசியல்வாதிகளையும், வீட்டுச் சிறையில் வைத்திருப்பதே நல்லது!காஷ்மீரில் பட்டப்படிப்பு வரை, இலவச கல்வி தான். நக்சல் தீவிரவாதம் பாதித்த மாநிலங்களில் கூட, இச்சலுகை கிடையாது. எனினும், மாணவ பருவத்திலேயே, பிரிவினைவாதிகளின் பின்னால், இளைஞர்கள் அணிவகுக்கின்றனர்.இளைஞர்கள் படித்து, வேலைக்கு சென்று விட்டால், தங்களின் பிழைப்பு, கேள்விக்குறியாகி விடும் என்பதால், மதத்தின் பெயரால் அவர்களை, பிரிவினைவாதிகள் மயக்கி வைத்துள்ளனர்.அதே நேரம், அந்த பகுதியின் பிரபலமான அரசியல் தலைவர்களும், பிரிவினைவாதிகளும், தங்கள் வாரிசுகளை, வெளிநாடுகளில் உயர் கல்வி பயிலவும், வேலைக்கு அனுப்பி வைத்துள்ளதையும், அப்பாவி இளைஞர்கள் உணர வேண்டும்.
காஷ்மீரை, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும், இந்திய அரசின் முயற்சிக்கு,பெருந்தடையாக இருக்கும், பிரிவினைவாத சக்திகளின் பின்னணியில், பாகிஸ்தான் செயலாற்றுகிறது. இவர்களின் பின்னால், எப்போதும் தயார் நிலையில், பயங்கரவாத கும்பல் இருக்கிறது. ஏதாவது ஒரு காரணம் கிடைத்து விட்டால் போதும்... பந்த், பேரணி, வீரர்கள் மீது கல்வீச்சு என, வன்முறையில் இறங்கி விடுகின்றனர், காஷ்மீர் இளைஞர்கள்!மதக்கடமை என்ற போர்வையில் செயல்படும் வன்முறையாளர்களை, அம்மக்கள், 'ஜிஹாதி' என, புனித போராளிகளாக அழைக்கின்றனர்.ஆனால், நாட்டின் பிற பகுதி மக்களைப் பார்த்து, காஷ்மீர் மக்கள், 'நீங்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளீர்களா...' என, கேட்கும் அளவிற்கு, அந்த மக்களை, பிரிவினைவாதிகள் வேறுபடுத்தி வைத்துள்ளனர்.முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லாவுக்கும், அவரது மகன், ஓமர் அப்துல்லாவுக்கும், பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மதவாதமும், பிரிவினை வாதமும் தான், முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.கடந்த, ௨௦௧௬ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஒமரை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற, மக்கள் ஜனநாயக கட்சியின், மெஹபூபா முப்தி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, முதல்வரானார்.உடனே, 'காஷ்மீரை ஹிந்துத்துவா சக்திகளிடம், மெஹபூபா அடகு வைத்து விட்டார்' என, பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்து, ஒமர், குடைச்சல் கொடுத்தார். கடந்த, ௨௦௧௬, ஜூலையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின், காஷ்மீர் தளபதியாக செயல்பட்ட, புர்ஹான் வானி என்பவனை, நம் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அந்த நாளை, துக்க நாளாக, பாகிஸ்தான் அனுசரித்தது.'காஷ்மீர் முஸ்லிம்களின் உயிர் தியாகம், வீண் போகாது; போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, இந்த ஆண்டு, 'பக்ரீத்' பண்டிகையை அர்ப்பணிக்கிறோம். பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். அவர்கள் வெற்றி பெறும் நாள், வெகு துாரத்தில் இல்லை' என, வெளிப்படையாக, பாக்., பிரதமர் அறிக்கை வெளியிட்டார்.இதனால், காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவையும் மீறி, இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட கலவரங்களில், ௯௦ பேருக்கு மேல் உயிரிழந்தனர்.'உயிருடன் இருந்த, புர்ஹான் வானியை விட, கல்லறையில் இருக்கும் புர்ஹான் வானி, ஆயிரக்கணக்கான இளைஞர்களை, இந்திய ராணுவத்திற்கு எதிராக போராட வைக்கும் சக்தியாக மாறி விட்டார்' என, முன்னாள் முதல்வரான, ஒமர் அப்துல்லா, பாகிஸ்தான் பிரதமருக்கு, இணையாக அறிக்கை வெளியிட்டார்.இத்தகைய, 'அப்துல்லா'க்களை, வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தான், தி.மு.க., டில்லியில், 22ல் ஆர்ப்பாட்டம் நடத்தியது!
ஒரு பக்கம், பயங்கரவாதிகளை இறக்கி விடும் பாகிஸ்தான்; மறுபக்கம், தனிநாடு என்ற பிரிவினையை துாண்டி, வன்முறைகளை நடத்தி வரும் பிரிவினைவாதிகள்; ஓட்டுகளுக்காக மக்களை துாண்டி விடும் அரசியல்வாதிகள்; இவர்களின் பிடியில் சிக்கிய, அந்த பகுதி மக்களை, குற்றவாளிகளாக பார்க்கும் ராணுவத்தினர்... இப்படித் தான், காஷ்மீர் நிலைமைஉள்ளது.இதை சரி செய்யவே மத்திய அரசு, ௩௭௦வது பிரிவை ரத்து செய்தது; இரு, யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது.இந்த நடவடிக்கைகளை, பார்லிமென்டிலும், வெளியிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க., தவிர்த்து, அநேகமாக அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன.மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகள், வரலாற்று பிழை என்கின்றன. மிகப்பெரிய பிழையாக போய்க் கொண்டிருந்த வரலாற்றை சரி செய்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது, மத்திய அரசு. இந்த முடிவு, காஷ்மீர் மாநிலத்தை, மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.பாக்., பிரதமர், இம்ரான் கான், 'இந்தியாவின் இந்த நடவடிக்கையால், அங்கு அதிகமாக, பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும்' என, 'பூச்சாண்டி' காட்டியுள்ளார்.மேலும், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சரை விட்டு, 'காஷ்மீரில், இந்திய ராணுவம், மனித உரிமைகளை மீறி வருகிறது; அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட, அவர்களுக்கு தேவையான, எந்த உதவிகளையும் செய்யத் தயார்' என, அறிக்கை விடவைக்கிறார்.
அவர்கள் போலவே, நம் நாட்டின், சில கட்சியினர் பேசுவது தான், பொறுக்க முடியவில்லை.நம் தமிழகத்தின், பல கிராமங்களைச் சேர்ந்த, நுாற்றுக்கணக்கான இளைஞர்கள், காஷ்மீரில் ரத்தம் சிந்தி, தங்கள்
இன்னுயிரை ஈந்துள்ளனர். துணை ராணுவப்படைகளில் பணியாற்றிய அவர்களின் உறவுகள், இப்போதும், காஷ்மீர் பயங்கரவாத குழுக்களை, தங்கள் எதிரிகளாக பார்க்கின்றனர்.ஆனால், நம் மாநில அரசியல் கட்சியான, தி.மு.க., பயங்கரவாதிகளுக்கு ஆதரவான காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கு, வக்காலத்து வாங்குகிறது!
தொழில் வளர்ச்சி இல்லாததால், அந்த மாநில மக்கள் பலர், டில்லி, மும்பை நகர வீதிகளில் பனிக்குல்லா விற்கின்றனர். சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள அந்த பகுதியில், எத்தனை காலம் தான், மதம் என்ற சரக்குவிற்பனையாகும்?உலகமே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதில், நாட்டின் தலை போல இருக்கும் காஷ்மீர், முன்னேறவில்லை என்றால், நாடே முன்னேறாமல் போய் விடும். இந்த கவலையில், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை, அனைவரும் ஆதரிக்க வேண்டும்.ஆதரிக்காமல் போனாலும் பரவாயில்லை; எதிர்ப்பு குரல் கொடுத்து, பிரச்னையை திசை திருப்ப வேண்டாம்!தொடர்புக்குlings.1143@gmail.com எஸ்.லிங்கேஸ்வரன்சமூக ஆர்வலர்