எந்த நேரத்திலும் தேர்தல் :கட்சிகளும்,கமிஷனும் தயார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எந்த நேரத்திலும் தேர்தல் :கட்சிகளும்,கமிஷனும் தயார்

Updated : ஆக 26, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (4)
Share
தேர்தல், கட்சி,கமிஷன், தயார், நாங்குநேரி, விக்கிரவாண்டி, தி.மு.க.,அ.தி.மு.க.,

தமிழகத்தில், காலியாக உள்ள, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளதால், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., சார்பில், ஆயத்தப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி தேர்தலும், விரைவில் வர வாய்ப்பு உள்ளதால், அதற்கும் கட்சிகள் தயாராகி வருகின்றன. லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில், காங்கிரஸ், எம்.எல்.ஏ., வசந்தகுமார், வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, மே, 29ம் தேதி, தன், நாங்குநேரி தொகுதி, எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்தார்.


அதிகரிப்பு


சட்டசபையில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, ஏழாக குறைந்தது. நாங்குநேரி சட்டசபை தொகுதி காலியானது.ஜூன், 14ல், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராதாமணி, உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார். இதனால், காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, இரண்டாக அதிகரித்தது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 101ல் இருந்து, 100 ஆக குறைந்தது.விதிமுறைகளின்படி, நாங்குநேரி தொகுதிக்கு, நவம்பருக்குள்ளும்; விக்கிரவாண்டிக்கு, டிசம்பருக்குள்ளும், இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.எனவே, இவ்விரு தொகுதிகளுக்கும், அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், தேர்தல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பா.ம.க., விக்கிரவாண்டி தொகுதியை கேட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க., இரு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது.தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சி, நாங்குநேரியை கேட்டுள்ளது. தி.மு.க., இரண்டிலும் போட்டியிட விரும்புகிறது.இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்கள் நியமனம், நிர்வாகிகள் கூட்டம் என, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.அதேபோல், தி.மு.க.,வும் பணிகளை துவக்கி உள்ளது.

இந்நிலையில், 'விரைவில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். ஆனால், புதிய மாவட்டங்கள் அறிவிப்பினால், சற்று தாமதமாகலாம் என, கூறப்படுகிறது.தேர்தல் நடத்தினால் மட்டுமே, மத்திய அரசிடமிருந்து, உள்ளாட்சிகளுக்கு நிதி பெற முடியும். எனவே, உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு அதிகம் உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அந்த தேர்தலுக்கும், அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.


ஆயத்தப் பணி


அரசியல் கட்சிகளை போலவே, தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தேர்தல் ஆணையமும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ளன.''தலைமை தேர்தல் கமிஷன், எப்போது இடைத்தேர்தல் தேதியை அறிவித்தாலும், தேர்தலை நடத்த, தயாராக உள்ளோம்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.மாநில தேர்தல் ஆணையம் சார்பில், உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான, பணியாளர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X