அரசு துறைகளில், குறிப்பாக, வருவாய்த்துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளில், 'நத்தம்' என்பதும் ஒன்று. நிலத்தின் வகைப்பாட்டை குறிக்கும் இந்த வார்த்தையை, அதன் பொருள் புரியாமலேயே, பலரும் பயன்படுத்துகின்றனர்.நத்தம் என்ற வார்த்தைக்கு, குடியிருப்பு பகுதி என பொருள். கிராம நத்தம் என்றால், கிராமத்தில் இருக்கும் குடியிருப்பு. நத்தம் புறம்போக்கு என்றால், குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு என்பர்.நிலங்களை, நஞ்சை, புஞ்சை, மானாவாரி, தரிசு என வகைப்படுத்திய பிரிட்டீஷார், குடியிருப்புகளை, 'நத்தம்' என்ற பெயரில் வகைப்படுத்தினர்.குடியிருப்புகளை சுற்றிலும் இருக்கும் காலியிடங்களும், எதிர்கால தேவைக்காக 'நத்தம்' என்றே வகைப்படுத்தப்பட்டன. இதனால், பேச்சு வழக்கில் பயன்பாட்டில் இல்லாதபோதும், தமிழர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை, 'நத்தம்' அடைந்து விட்டது. அதை, குடியிருப்பு என்று அனைவருக்கும் புரியும் வகையில் மாற்றி விட்டால், யாருக்கும் எந்த குழப்பமும் வராது.வருவாய்த்துறையில், 35 ஆண்டு பணியாற்றி, துணை கலெக்டராக ஓய்வு பெற்ற சுப்பிரமணியம் கூறியதாவது:நம் நாட்டில், 1920ல் தான் டவுன் பிளானிங் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1860ம் ஆண்டு முதலே, நத்தம் குடியிருப்பு என்ற வார்த்தைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. குறிப்பாக, 1863 மற்றும், 1912ம் ஆண்டு கிராம ஆவணங்களில் இந்த வார்த்தை பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் இருந்தே, இந்த வார்த்தை பிரயோகங்கள் தொடர்வது தெளிவாகிறது. அறிஞர்கள் உதவியுடன், தகுந்த வார்த்தையை பரிசீலித்து தேர்வு செய்து, நத்தம் என்ற வார்த்தையை அரசு மாற்றலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE