ஜெட்லியின் இறுதிச்சடங்கு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜெட்லியின் இறுதிச்சடங்கு

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (2)

புதுடில்லி : டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 66, நேற்று பிற்பகல் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று( ஆக.,25) டில்லியில் நடக்கிறது.






பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. கடந்த பிப். 1ல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை கூட ஜெட்லிக்கு பதில் அமைச்சர் பியூஸ் கோயல் தான் தாக்கல் செய்தார். உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஏப்ரல் - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில் 9-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உட்பட பலரும் மருத்துவமனைக்கு சென்று ஜெட்லியின் உடல் நிலை குறித்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று பகல் 12:07 மணிக்கு அருண் ஜெட்லி இறந்துவிட்டதாக எய்ம்ஸ் டாக்டர்கள் அறிவித்தனர். அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ரோஹன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.





அருண் ஜெட்லி இறந்த தகவல் வெளியானவுடன் பா.ஜ. தலைவர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இதன்பின் அருண் ஜெட்லியின் உடல் மருத்துவமனையிலிருந்து தெற்கு டில்லியில் கைலாஷ் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அருண் ஜெட்லியின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பா.ஜ. தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பா.ஜ. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ஜிதேந்திர சிங், பா.ஜ. எம்.பி. கவுதம் கம்பீர் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அருண் ஜெட்லியின் உடல் இன்று காலை பா.ஜ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பா.ஜ. உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். பின் அங்கிருந்து இறுதி சடங்குக்காக நிகாபோத் காட் பகுதிக்கு அருண் ஜெட்லி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.






ஜெட்லி குடும்பத்தினருக்கு மோடி ஆறுதல்


பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அவர் நாளை நாடு திரும்புகிறார். இந்நிலையில் அருண் ஜெட்லி மறைந்த செய்தியை கேட்ட பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து தொலை பேசி மூலம் அருண் ஜெட்லி மனைவி சங்கீதா மகன் ரோஹன் ஆகியோரிடம் பேசி ஆறுதல் கூறினர். தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்புவதாக அவர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். அதற்கு ஜெட்லியின் மனைவியும், மகனும் 'தங்கள் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய வேண்டாம்' என தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X