தர்மபுரி: ''தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு, அரசு முன்னுரிமை அளித்து செயல்படுத்துகிறது,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நடந்த, முதல்வரின் மக்கள் குறைதீர் திட்ட சிறப்பு முகாமிற்கு, கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார்.
முகாமை பார்வையிட்ட அமைச்சர் அன்பழகன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர், ஒவ்வொரு வருவாய் கிராம அளவிலும், அரசு அலுவலர்கள் சென்று மக்களிடம் குறைகளை கேட்கும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். கடந்த, 23ல் துவங்கிய முகாமில், மாவட்டத்தில், 4,997 மனுக்கள் பெறப்பட்டன. அதில், வீட்டுமனை பட்டா கோரிக்கை மனுக்கள் அதிகம் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு அதிகளவில் வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளது. சிறப்பு குறைதீர் திட்டத்தை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாலக்கோடு டவுன் பஞ்.,ல் குடிநீர் திட்ட பணிகளுக்கு, 3.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நான்கு மாதத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் உண்மையாக இருந்தால், அவர்கள் மனம் திருந்தி அவர்களாகவே வெளியேற வேண்டும். இல்லையென்றால், அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும். தற்போது, தமிழகத்தில், கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE