புதுடில்லி: காஷ்மீரில் மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை எனக்கூறியுள்ள அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக், தொலைதொடர்பு முடக்கத்தால், பலரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டில்லி வந்த காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்; காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை. தட்டுப்பாடும் இல்லை. அனைத்து பொருட்களும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசமாக பிரித்த பின்னர் கடந்த 10 நாட்களில் எந்தவிதமான வன்முறையும் இல்லை. உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

தொலைதொடர்பு சேவை இன்னும் எத்தனை நாட்களுக்கு முடக்கப்பட்டிருக்கும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கவர்னர் கூறுகையில், தகவல் தொடர்பை தடுத்து வைத்திருப்பதால், உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது என்றால், இதனால், என்ன தீங்கு வந்துவிட்டது. இதற்கு முன் காஷ்மீரில் ஏதேனும் பிரச்னை, கலவரம் என்றால், முதல்வாரத்திலேயே 50 பேர் இறந்திருப்பார்கள். இப்போது, எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. எங்களின் நோக்கம் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படக்கூடாது என்பது தான்.
10 நாட்களுக்கு தொலைபேசி இணைப்பு இல்லாவிட்டால் இருக்கட்டும். விரைவில் அனைத்தையும் சரி செய்வோம். பக்ரீத் அன்று, மக்களுக்கு தேவையான இறைச்சி, காய்கறிகள், முட்டை, பால் போன்றவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.
" காஷ்மீர் கவர்னர் பொறுப்பை ஏற்கும்படி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தான் கூறினார். இது வரலாற்று சிறப்பு மிக்க பணியாக இருக்கும் என்றும் என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு கவர்னர் சத்யபால் மாலிக் கூறினார்.