கோவை:'வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை சரி பார்ப்பதை, ஏ.டி.எம்., இலவச பயன்பாடாக கருதி கணக்கில் சேர்க்கக்கூடாது' என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும், இந்த உத்தரவை, வங்கி ஊழியர் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.
வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர், தன் டெபிட் கார்டை பயன்படுத்தி, அதே வங்கி ஏ.டி.எம்.,ல், மாதம் 5 முறை பணம் எடுக்கலாம். பிற வங்கி ஏ.டி.எம்.,களில், மாதம் 3 முறை பணம் எடுக்கலாம். இந்த எண்ணிக்கைகளுக்கு மேல் கூடுதல் முறை பணம் எடுத்தால், 20 ரூபாய் கட்டணமும், அதற்குரிய வரியும் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.இந்த 5 முறை இலவச பயன்பாட்டில்தான், வாடிக்கையாளர்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. ஏ.டி.எம்.,ல் இருந்து பணம் வந்தாலும், வராவிட்டாலும், ஐந்தில் ஒரு முறை கழித்துக் கொள்ளப்பட்டு விடுகிறது. தொழில்நுட்ப காரணங்களால், பணம் வராமல் நொந்து போய் நிற்கும் வாடிக்கையாளர்களுக்கு, இலவச பயன்பாடுகளில் ஒன்றும் பறிபோவது வேதனையானது.
இத்தகைய வாடிக்கையாளர்களின் குறையை போக்கும் வகையில், ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்து வங்கிகளின் தலைமை அலுவலகங்களுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஏ.டி.எம்., இயந்திரங்களில் ஒருவர் பணம் எடுக்க முயற்சிக்கும்போது, தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் பணம் இல்லாதது போன்ற காரணங்களால், பணம் எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இத்தகைய பயன்பாடுகளும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் இலவச ஏ.டி.எம்., பயன்பாடு எண்ணிக்கையில் சேர்க்கப்படுவது, ரிசர்வ் வங்கி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.தொழில்நுட்ப காரணங்கள், ஏ.டி.எம்.,ல் பணம் இல்லாதது, வங்கி அல்லது சேவை அளிப்பவர் தரப்பில் ஏற்பட்ட தவறுகள், தவறான ரகசிய எண் பயன்படுத்தியது போன்றவற்றை, இலவச ஏ.டி.எம்., பயன்பாடு எண்ணிக்கையில் சேர்க்கப்படக்கூடாது. அதையும் சேர்த்து கணக்கிட்டு, அடுத்தடுத்த பயன்பாடுகளுக்கு, கட்டணம் வசூலிக்க கூடாது.வங்கி இருப்பு சரிபார்த்தல், காசோலை புத்தகம் கோருதல், வரி செலுத்துதல், வேறு ஒரு கணக்குக்கு பணம் டிரான்ஸ்பர் செய்தல் போன்ற, பணம் எடுக்காத பயன்பாடுகள் அனைத்தும், இலவச ஏ.டி.எம்., பயன்பாடு கணக்கில் சேர்க்கப்படக்கூடாது.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம், சாதாரண மக்களுடைய பணம், பறிபோவது தவிர்க்கப்படும். ரிசர்வ் வங்கியானது, இது போன்ற உத்தரவுகளை அமல்படுத்தும்போது, புதிய தனியார் வங்கிகளுக்கு சலுகை என்ற பெயரில், பாகுபாடு காட்டாமல், முறையாக அமல்படுத்த வேண்டும்.-ராஜன்துணைத்தலைவர், மாவட்ட வங்கி ஊழியர் சங்கம்.ஏ.டி.எம்.,ல் இருந்து பணம் வந்தாலும், வராவிட்டாலும், ஐந்தில் ஒரு முறை கழித்துக் கொள்ளப்பட்டு விடுகிறது. தொழில்நுட்ப காரணங்களால், பணம் வராமல் நொந்து போய் நிற்கும் வாடிக்கையாளர்களுக்கு, இலவச பயன்பாடுகளில் ஒன்றும் பறிபோவது வேதனையானது.