சட்டசபை சொத்து மாயம்மாஜி சபாநாயகர் மீது வழக்கு| Dinamalar

சட்டசபை சொத்து மாயம்'மாஜி' சபாநாயகர் மீது வழக்கு

Added : ஆக 25, 2019
Share

அமராவதி: ஆந்திர முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான, சிவபிரசாத் ராவுக்கு எதிராக, சட்டசபை செயலகம் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில், 'சட்டசபையில் இருந்த, நாற்காலிகள், 'ஏசி' உள்ளிட்ட சில அரசு சொத்துக்களை, சிவபிரசாத், சட்டவிரோதமாக தன் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமராவதி போலீசார், சிவபிரசாத்துக்கு எதிராக, வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
காஷ்மீரில் விபத்து7 பேர் பலி
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின், ரஜோரி மாவட்டத்தில், மலைப்பாதையில் சென்ற வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்தது. இதில், ஏழு பேர், சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 25 பேர் படுகாயம் அடைந்தனர். அளவுக்கு அதிகமானோர், வாகனத்தில் சென்றதால், விபத்து ஏற்பட்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆஸி., அமைச்சர்அதானியுடன் சந்திப்பு?
கோல்கட்டா: நம் நாட்டின், அதானி தொழில் குழுமம் சார்பில், ஆஸ்திரேலிய நாட்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, நிலக்கரி சுரங்கம் தொடர்பான தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக, தொழில் அதிபர், கவுதம் அதானியுடன் பேச்சு நடத்துவதற்காக, ஆஸ்திரேலிய அமைச்சர் மாத்யூ கேன்வென், இந்தியா வந்துள்ளார். இன்று, அவர், அதானியுடன்பேச்சு நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை எதிர்த்து, ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடந்து வருவது குறிப்பபிடத்தக்கது.
மாணவி கர்ப்பம்ஆசிரியர் ஓட்டம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும், 12 வயது மாணவி, திடீரென கர்ப்பமானார். விசாரணையில், அந்த பள்ளியில் பணியாற்றும், 30 வயது ஆசிரியர் ஒருவர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. போலீசார் தேடுவதை அறிந்து, ஆசிரியர் தலைமறைவாகி விட்டார்.
குஜராத்தில் மோதல்இருவர் பலி
ஆமதாபாத்: குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில், இரு பிரிவினருக்கு இடையே நேற்று மோதல் வெடித்தது. இந்த வன்முறையில், இரண்டு பேர் பலியாகினர்; நான்கு பேர் காயமடைந்தனர். மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரம் பாய்ந்து20 பசுக்கள் பலி
சாகர்: மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில், பலத்த காற்று வீசியதால், மின் கம்பி கீழே விழுந்து கிடந்தது. இதை மிதித்த பசுக்கள் மீது, மின்சாரம் பாய்ந்தது. இதில், 20 பசுக்கள் பரிதாபமாக பலியாகின.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X