சென்னை:''தமிழகத்தில், துார் வாரப்படாத ஏரி, குளங்கள், இளைஞர் அணி சார்பில் துார் வாரப்படும். இந்தப்பணி விரைவில், திருக்குவளையில் துவக்கப்படும்,'' என, தி.மு.க., இளைஞரணி செயலர்,உதயநிதி கூறினார்.
தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம், சென்னை கிண்டியில் உள்ள, தனியார் சொகுசு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற, இளைஞரணி செயலர்,உதயநிதி அளித்த பேட்டி:தி.மு.க., இளைஞர் அணியில், செப்., 15 முதல், நவம்பர், 15 வரை, 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தொகுதிக்கு, 10 ஆயிரம் இளைஞர்களை சேர்க்க, நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்காக, தமிழகம் முழுவதும், செப்., 14 முதல், நவம்பர், 14 வரை முகாம்கள் நடத்த உள்ளோம். முகாம்களின் போது, நான் சுற்றுப்பயணம் செல்வேன்.காஷ்மீர் விவகாரத்தில், கட்சி தலைமையின் கருத்தே, என் கருத்து.
இடைத்தேர்தல் நடக்க உள்ள, இரு சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுவது குறித்து, தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவெடுக்கப்படும். முதல்வர் வெளிநாடு சென்று வந்த பின் தான், முதலீடுகள் வருகிறதா என்பது தெரியும்.இளைஞர் அணி சார்பில், மாநிலம் முழுவதும், துார் வாரப்படாத குளங்கள், ஏரிகள் துார் வாரப்படும். துார் வாரும் பணியை, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் துவக்க உள்ளோம். அதற்கான தேதி, விரைவில் அறிவிக்கப்படும். பிரதமர் மோடி ஆட்சி, வாயில் வடை சுடும் ஆட்சியாக உள்ளது.இவ்வாறு, உதயநிதி கூறினார்.
30 லட்சம் இளைஞர்களை சேர்க்க திட்டம்தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அண்ணாதுரை, கருணாநிதி, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இளைஞர்களை ஊக்குவிக்க, மாவட்ட, மாநில அளவில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
செப்., 14 முதல், இரண்டு மாதங்களுக்குள், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 10 ஆயிரம் பேருக்கு குறையாமல், மொத்தம், 30 லட்சம் இளைஞர்களை, உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
இதுவரை, 15 முதல், 30 வயதுள்ளோர், இளைஞர் அணியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். இவ்விதியை மாற்றி, 18 முதல், 35 வயதுள்ள இளைஞர்கள், உறுப்பினராக சேர்க்கப்படுவர்.
தமிழகத்தில், அரசு வேலைவாய்ப்பில், தமிழர்களுக்குமுன்னுரிமை வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை வரைவை, திரும்பப் பெறவேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.