சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் சிக்கிய மூவர் விடுவிப்பு!

Added : ஆக 26, 2019
Advertisement

கோவை:கோவையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் சிக்கிய மூவர், தீவிர விசாரணைக்கு பின், விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையில், ஏப்ரலில்,ஈஸ்டர் தினத்தன்று, பயங்கரவாதிகள் நடத்தியதொடர் வெடிகுண்டுதாக்குதலில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.அதேபோன்று, விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் ஆறு பேர், தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக, மத்திய உளவுப்பிரிவு உஷார்படுத்தியது.ஊடுருவிய பயங்கரவாதிகள், கோவையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மாவட்டம் முழுக்க, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.கோவில்கள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையம், ரயில் நிலையங்களில், தீவிர சோதனை நடத்தப்பட்டது. தமிழக கமாண்டோ படை வீரர்களும், நவீன துப்பாக்கிகளுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நான்காவது நாளாக நேற்றும், கோவையில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால், தேவாலயங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

சிறப்பு நுண்ணறிவு போலீசார் சோதனையில், சந்தேகத்தின் அடிப்படையில், கோவை, உக்கடத்தைச் சேர்ந்த சித்திக், சென்னையைச் சேர்ந்த ஜாகிர், கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த ஷெரிப் முகமது ஆகியோர், நேற்று முன்தினம் சிக்கினர். அவர்களை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று, போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.கொச்சியில், என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, திருச்சூரைச் சேர்ந்த அப்துல் காதர், பயங்கரவாத அமைப்புடன்தொடர்பில் இருந்ததாகவும், அவருடன், கோவையில் சிக்கிய மூன்று பேர், மொபைல் போனில் பேசியதாகவும், கிடைத்த தகவலின் அடிப்படையில், மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. எட்டு மணி நேர விசாரணைக்கு பின், நேற்று முன்தினம் இரவு, மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
குமுளியில் சோதனை
கேரள போலீசார், தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு, வாளையார், ஆரியங்காவு, அச்சன் கோவில், பாறசாலை உள்ளிட்ட, 14 முக்கிய, 'செக்போஸ்ட்'களில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.குமுளியில், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வரும் அனைத்து வாகனங்களும், 'மெட்டல் டிடெக்டர்' உதவியுடன் கடும் சோதனைக்கு பின், கேரளாவிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
என்.எல்.சி.,யில் உஷார்
கடலுார் மாவட்டம், நெய்வேலியில் உள்ள, என்.எல்.சி., நிறுவனத்தில், பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின், சீனியர் கமாண்டன்ட் ஷேக் அப்துல்லா அறிவுறுத்தலின்படி, என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, இரண்டாம் நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையங்கள் மற்றும் என்.எல்.சி., தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தீவிர ரோந்து பணி மூலம், சந்தேக நபர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X