விருத்தாசலம்:திருச்சி ரயில்வே கோட்டத்தில், 72 ரயில் நிலையங்களில், 'டிக்கெட் புக்கிங்' மையங்கள், தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
ரயிலில், பாதுகாப்புடன்கூடிய விரைவான பயணம் மற்றும் துாய்மை போன்ற சேவைகளை துரிதப்படுத்த, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன்படி, பல ரயில்நிலையங்களில், துாய்மைப் பணியை, தனியார் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், முக்கிய விரைவு ரயில்களின் கழிப்பறைகள் மற்றும் ரயில் பெட்டிகளின் பராமரிப்பும், தனியாரிடம் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்தில், நகரங்கள், மாநகரங்களில், 72 டிக்கெட் புக்கிங் மையங்களை, தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, விருத்தாசலம், விழுப்புரம், புதுச்சேரி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட, ரயில் டிக்கெட் புக்கிங் மையங்களை, தனியார் வசம் ஒப்படைப்பதற்கான டெண்டர், 19ல் துவங்கி, 23ம் தேதியுடன் முடிந்தது.தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள ரயில் டிக்கெட் புக்கிங் மையங்கள் மற்றும் டெண்டர் விபரங்கள், www.indianrailways.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.