மிஸ்டு கால் கொடுத்தோமே என்னாச்சு?

Added : ஆக 26, 2019 | கருத்துகள் (2) | |
Advertisement
'நதிகளை மீட்க மிஸ்டு கால் கொடுங்க', என்ற வேண்டுகோள் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. 'நதிகளை மீட்போம் இயக்கம்' இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது? பத்தோடு பதினொன்றாக போய்விட்டதா? அல்லது ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா?நிதி ஆயோக் அறிக்கையின் படி சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி
மிஸ்டு கால் கொடுத்தோமே என்னாச்சு?

'நதிகளை மீட்க மிஸ்டு கால் கொடுங்க', என்ற வேண்டுகோள் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. 'நதிகளை மீட்போம் இயக்கம்' இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது? பத்தோடு பதினொன்றாக போய்விட்டதா? அல்லது ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா?

நிதி ஆயோக் அறிக்கையின் படி சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி குறையும் ஆபத்து உள்ளது. இந்த ஆண்டே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தண்ணீர் தட்டுபட்டால் மக்கள் எவ்வளவு இடர்களை சந்தித்தார்கள் என்று பார்க்க முடிகிறது. இன்று தண்ணீர் பிரச்சனை என்பது உலகளவில் உருவெடுத்து வருகிறது, உலகளவில் ஐநா-வின் ஒரு அறிக்கையின் படி 2050 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் மக்களில் நான்கில் ஒருவருக்கு நன்னீர் கிடைக்காமல் போகும் என நீர் தட்டுபாட்டைப் பற்றி எச்சரிகிறது.

இது இப்படியே சென்றால் அடுத்து போர் வருமானால் அது நீருக்காகதான் இருக்குமென்று பலரும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய அரசாங்கமும் நீர் பிரச்சனைகளை தீர்க்க தனியாக ஜல்சக்தி எனும் அமைச்சரவையை உருவாக்கி உள்ளது, பல்வேறு தனியார் அமைப்புகளும் அவர்களால் இயன்றே ஏதோ ஒரு செயலில் இறங்குகிறார்கள்.


16 கோடி மிஸ்டு கால்


இதனிடையில்தான் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நதிகள் மீட்பு இயக்கம் ஒன்றை தொடங்கி, நதிகள் வற்றிவருவதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு பிரசார பயணமும் மேற்கொண்டார். 16.2 கோடி மக்கள் இந்த இயக்கத்திற்காக தங்களின் ஆதரவை மிஸ்டு கால் மூலம் தந்தனர். இந்தியாவில் வேறெந்த இயக்கத்திற்கும் இந்த அளவுக்கு மக்கள் தங்களின் ஆதரவை வழங்கியதில்லை. நதிகள் மீட்பு என்பது நீண்டகால திட்டம், இது போன்ற நீண்ட கால திட்டங்களை அரசு மேற்கொள்ள மக்களின் ஆதரவு இருக்கும் என்பதை காட்டவே மிஸ்டு கால்கள் கோரப்பட்டன, இத்தனை கோடி மக்களின் ஆதரவோடு நம் பிரதமரிடம் நதிகளின் புத்துணர்விற்கான கொள்கை வரைவு திட்ட அறிக்கையை சத்குரு அவர்கள் அக்டோபர் 3 ஆம் தேதி 2௦17 அன்று சமர்பித்தார்.

அந்த வரைவு திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய நிதி ஆயோக்கின் கீழ் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது, ஆறு மாதங்களுக்குப் பிறகு, அக்குழு, நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான பரிந்துரைகளை எப்படி களத்தில் செயல்படுத்துவது என விளக்கும் செயலுக்கான திட்டமொன்றை தயார் செய்திருந்தது. செயலுக்கான இத்திட்டத்தை ஊரக மேம்பாட்டுத் துறை தயார் செய்தது.


நதிகளுக்கான தேசிய கொள்கையாக அங்கீகரிப்பு


நிதி ஆயோக் தலைவர் திரு.அமிதாப் காந்த் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும், ஜூன் 6, 2௦18 அன்று எழுதிய கடிதத்தில், “கலந்தாய்வுகளின் அடிப்படையில், நதிகளுக்கு புத்துயிரூட்ட அரசு திட்டங்களுடன் சமூக முனைப்புகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று ஈஷா அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு சத்குரு அவர்கள் சமர்பித்திருந்த வரைவு அறிக்கையை பரிந்துரை செய்திருந்தார். இந்தியாவில் தன்னார்வ தொண்டு அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு கொள்கை அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


ஆறு மாநிலங்களுடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம்


இதையடுத்து, நதிகள் மீட்பு இயக்கத்துடன் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், சட்டிஸ்கர், அசாம் போன்ற ஆறு மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஆறு மாநிலங்களிலும் அந்தந்த அரசுகளுடன் ஈஷாவின் நதிகள் மீட்பு இயக்கம் சேர்ந்து களத்தில் வேலை செய்யும்.

இதில் மகாராஷ்டிராவில் வேகமாக பணிகள் நடந்துவருகின்றன. மிக முக்கியமாக அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நிதித்துறை மற்றும் வனத்துறை அமைச்சர் சுதீர் மகந்திவர் ஆகியோர், யவத்மாலில் உள்ள வகாரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்கான நதிகள் மீட்பு இயக்கத்தின் விரிவான திட்ட வரைவறிக்கைக்கு ஆளுநர் வித்யாசாகர் முன்பு நடந்த கூடத்தில் ஒப்புதல் கொடுத்தனர், அதன் பிறகு மார்ச் 5, 2௦19 அன்று யத்வாமலில் மாவட்டத்தில் வஹாரி நதி சீரமைப்பிற்காக ரூ.415/- கோடியை அந்த அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 முதல் ஈஷா அமைப்புடன் மகாராஷ்டிர அரசு இணைந்து வாஹரி நதி சீரமைப்பு திட்டத்தை தொடங்கி தற்போது வேலை நடந்து வருகிறது.

தற்கொலைகளின் தலைநகரம் என்று சொல்லப்படும் யவத்மால் மாவட்டத்தில் முழுமையாக வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை, மண்வளம் குன்றுதல், பயிர் பொய்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளால் பல விவசாயிகள் பெருமளவில் இப்பகுதியில் தற்கொலை செய்துள்ளனர்.

ஆதலால் இங்கிருக்கும் சூழ்நிலையை மாற்றினால் அது மற்ற பகுதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்குமென்பதால் நதி வீரர்கள் எனும் ஈஷா தன்னார்வலர்கள் அங்குள்ள விவசாயிகளுடனும், மகளிர் சுய உதவி குழுக்களுடனும், அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தொடர்புள்ள அரசாங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டங்களில் கலந்து கொண்டு தேவையான வேலைகளை செய்து வருகின்றனர்.


சத்குரு தலைமையில் ஒரு சிறப்பு குழு


மேலும் சத்குருவின் தலைமையில் நதிகள் மீட்பு இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல, அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்து இயங்க ஒரு பிரத்தேக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. அரிஜித்பசாயத், முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு. கிரண்குமார், நீரியல் வல்லுநர், வன உயிரின நிதியத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி திரு.ரவிசிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலர் திரு.சசிசேகர், பையோகான் நிறுவனத் தலைவர் திருமதி கிரண் மஜும்தார்ஷா, விவசாய உற்பத்தியாளர் சங்கங்களின் தந்தை என அழைக்கப்படும் ஓய்வு பெற்ற IAS அதிகாரி திரு. பர்வேஷ் ஷர்மா, ஓய்வு பெற்ற டாடா குழுமத் தலைவர் திரு.முத்துராமன் என பல்துறை வல்லுனர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒரு சிலரும் இந்தக் குழுவில் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.


நதிகள் மீட்பு இயக்கத்திற்கு உலக அங்கீகாரம்


விவசாய உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இதற்கு முன்பு 3௦ சதவிகிதம் வரை வரி இருந்து வந்தது. நதிகள் மீட்பு இயக்கம் அதனை நீக்க வலியுறுத்தியதன் பேரில் அந்த வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையில் மரங்கள் வளர்ப்போர் சில குறிப்பிட்ட மர வகைகளை வெட்டவும், வணிக நோக்கத்தில் பயன்படுத்தவும் இருந்து வந்த தடை நீக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வேளாண் காடுகள் வளர்ப்போர் சதவிகிதம் கூட வாய்ப்பிருக்கிறது.

'நதிகளை மீட்போம்' இயக்கத்தின் செயல்பாடுகளை அங்கீகரித்து 2018ஆம் ஆண்டிற்கான 'தேசிய தண்ணீர் விருது' வழங்கப்பட்டுள்ளது. மாபெரும் விழிப்புணர்வு முயற்சிக்கான பிரிவில் முதலாவதாக 'நதிகளை மீட்போம்' இயக்கம் இவ்விருதிற்குத் தேர்வாகியுள்ளது.

ஐநா தலைமையகம், ஐநா ஜெனிவா மற்றும் GLF (Global Landscape Forum) போன்ற உலக அரங்குகளில் நதிகள் மீட்பு இயக்கம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது, இந்த நிகழ்வுகளில் சத்குரு அவர்கள் சிறப்பு அழைப்பாளராய் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

ஒட்டுமொத்தமாக, பார்க்கும் போது கோடிக்கணக்கான மக்கள் கொடுத்த மிஸ்டு கால் வீண் போகவில்லை என்பது தெள்ள தெளிவாக புரிகிறது.


பெட்டிச் செய்தி:


சத்குரு சமர்பித்த பரிந்துரை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
அந்த அறிக்கையில் பரிந்துரைகளாக நதிகளின் இரு கரைகளிலும் 1 கி.மீ. பரப்பளவிற்கு மரங்கள் நட வேண்டும். கிளை நதிகளின் இரு கரைகளிலும் அரை கி.மீ. பரப்பளவிற்கு மரங்கள் நட வேண்டும். நதிக்கரைகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் நிலையான காடுகள் அமைக்க வேண்டும்.

பயிர் விவசாயத்திலிருந்து மர விவசாயத்திற்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் 4 வருட காலகட்டத்தில் இழப்புகள் நேரலாம். அதனால், பொறுத்தமான ஒரு வழிமுறையின் மூலம் அரசு, இழப்பினை விவசாயிகளுக்கு நிறைவாய் ஈடுகட்ட வேண்டும்.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் மற்றும் இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைள் எடுக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்வதுடன், தொழிற்சாலைக் கழிவுகளை முறைபடுத்த தனித் துறைகளை உருவாக்கி அதன் மூலம் நதி மாசுபாட்டினை தடுக்க வேண்டும்.

நகர்புற கட்டமைப்பு, விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு, விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டபட்ட தொழிற்சாலைகள் அமைத்தல் என பல்வேறு துறைகளுக்கான பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
praba - madurai,இந்தியா
27-ஆக-201916:06:14 IST Report Abuse
praba வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X