இடி தாங்கி ஓட்டலுக்கு மீண்டும் அடி - கோடி ரூபாய் வசூலிக்க மாநகராட்சி அதிரடி| Dinamalar

'இடி தாங்கி' ஓட்டலுக்கு மீண்டும் 'அடி' - கோடி ரூபாய் வசூலிக்க மாநகராட்சி அதிரடி

Updated : ஆக 27, 2019 | Added : ஆக 27, 2019
Share
கோவை 'கொடிசியா'வில் நடந்த, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். பேசிக்கொண்டே, ஒவ்வொரு ஸ்டாலையும் பார்த்தவாறு நகர்ந்தனர். கார்ப்பரேஷன் அதிகாரி ஒருத்தர், குடும்பத்தோடு கடந்து சென்றார். அவரை பார்த்த மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன்ல செயல்படுற ஒரு சொசைட்டியில லோன் தர்றதா சொல்லி, ஆயிரக்கணக்குல பணம் பறிக்கிறாங்களாமே...''''ஆமா
 'இடி தாங்கி' ஓட்டலுக்கு மீண்டும் 'அடி' - கோடி ரூபாய் வசூலிக்க மாநகராட்சி அதிரடி

கோவை 'கொடிசியா'வில் நடந்த, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். பேசிக்கொண்டே, ஒவ்வொரு ஸ்டாலையும் பார்த்தவாறு நகர்ந்தனர். கார்ப்பரேஷன் அதிகாரி ஒருத்தர், குடும்பத்தோடு கடந்து சென்றார்.
அவரை பார்த்த மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன்ல செயல்படுற ஒரு சொசைட்டியில லோன் தர்றதா சொல்லி, ஆயிரக்கணக்குல பணம் பறிக்கிறாங்களாமே...''''ஆமா மித்து, நானும் கேள்விப்பட்டேன். அந்த சொசைட்டி, ஆளுங்கட்சி கட்டுப்பாட்டுல இருக்குதாம். அஞ்சு லட்சம் ரூபா வரைக்கும் லோன் கொடுக்குறாங்க.''ரூ.40 ஆயிரம் வரைக்கும் லஞ்சம் வாங்கிட்டுதான், கடன் கொடுக்குறாங்களாம். வேற வழியில்லாம, தொழிலாளர்களும் லஞ்சம் கொடுத்து, கடன் வாங்குறாங்க. இது மாதிரியான விஷயத்துல, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுத்தா, நல்லாயிருக்கும்,''''அதெல்லாம் சரி, வீட்டை காலி செய்யச் சொல்லி, கூலிப்படை அனுப்பி, ஹவுசிங் போர்டுக்காரங்க மிரட்டுறாங்களாமே... உண்மையா,'' என, கேட்டாள் மித்ரா.
''உண்மைதாம்ப்பா, கவுண்டம்பாளையம் அம்பேத்கர் நகர்ல, 20 குடும்பத்துக்காரங்க, 45 வருஷமா வசிக்கிறாங்க. 'அந்த இடம், எங்களுக்கு சொந்தமானது; வீட்டை காலி பண்ணிட்டு கெளம்புங்கன்னு' ஹவுசிங் போர்டுக்காரங்க சொல்றாங்க.''காலி பண்ண மாட்டோம்னு வசிக்கிறவங்க சொன்னதால, வட மாநில கூலியாட்களை அனுப்பி மிரட்டுறாங்களாம். கலெக்டர் ஆபீசுல, அந்த பகுதி மக்கள் மனு கொடுத்திருக்கிறாங்க. ஹவுசிங் போர்டுக்காரங்க இப்படியும் செய்வாங்களான்னு அதிகாரிங்க திகைச்சுப் போயிட்டாங்களாம்,'' என்றபடி, பர்னிச்சர் அரங்கிற்குள் சென்று, சோபாவில் உட்கார்ந்து பார்த்தாள் சித்ரா.விலையை கேட்டு, விசிட்டிங் கார்டு வாங்கிக்கொண்ட மித்ரா, ''பொதுவா, அரசு அதிகாரியை சொந்த மாவட்டத்துல நியமிக்க மாட்டாங்க.
ஆனா, நம்மூர்ல வசிக்கிற ஒருத்தருக்கு, வீட்டுக்கு பக்கத்துலேயே 'போஸ்டிங்' கொடுத்திருக்காங்க. அவுங்க 'ஆட்டம்' தாங்க முடியலையாம்,'' என்றாள்.''யாருப்பா, அது?,'' என, சித்ரா கேட்க, ''சாயிபாபா காலனியில் வசிக்கிற இன்ஸ்., அதே ஏரியா ஸ்டேஷன்ல வேலை பார்க்குறாரு. இவர் பெயரை சொல்லி, ரத்த உறவுக்காரரு போலீஸ்காரங்கள மிரட்டுறாராம்.''வாரத்துக்கு ரெண்டு தடவை, ஏதாச்சும் ஒரு ஓட்டலுக்கு குடும்பத்தோடு போயி, ஒரு பிடிபிடிக்கிறாங்களாம். 'பில்' பல ஆயிரத்தை தாண்டுமாம்.
'பில்'லை கையில கூட வாங்க மாட்டாங்களாம். சிரிச்சுட்டு வெளியே போயிடுவாங்களாம். ஜீப் வந்து நின்றாலே, ஓட்டல்காரங்க புலம்புறாங்களாம்,'' என, புட்டு புட்டு வைத்தாள் மித்ரா.''போலீஸ் டிபார்ட்மென்ட்டுல, சில பேரு அப்படித்தான் இருப்பாங்க. நம்மூர் ஸ்டேஷன்ல கட்டப்பஞ்சாயத்தும் அமோகமா நடக்குதாமே...''
''ஆமாக்கா, ஸ்டேஷன்ல, 'சிவில் கேஸ்' விசாரிக்க கூடாது; கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாதுன்னு, டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்பி இருக்காரு. அதை கண்டுக்காம, கட்டப்பஞ்சாயத்து செஞ்சு, 'கரன்சி' பார்க்குறாங்களாம்,''''ஓ... அப்படியா, எனக்கு தெரிஞ்ச இன்ஸ்., ஒருத்தர், ஒவ்வொரு மாசமும், 10 பவுன் நகை வாங்குறாரு. இப்படி சம்பாதிக்கிற பணம்தானா,''''இருக்கலாம்'' என்றவாறு, 'கேம் ஜோன்' பக்கம் நுழைந்தாள் மித்ரா.''மார்க்கெட்டுல, ஒரு பவுன், ரூ.30 ஆயிரத்துக்கு விக்குது. 10 பவுன் வாங்குற அளவுக்கு 'சம்திங்' கெடைக்குமா, என்ன?'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.
''அக்கா, இன்னமும் உலகம் புரியாம இருக்கீங்க. பாரதியார் யுனிவர்சிட்டியில மாணவர் விடுதிக்கு பக்கத்துல, ஐந்து பவுன் நகை கீழே கிடந்திருக்கு. அதை எடுத்த செக்யூரிட்டி ஒருத்தரு, பி.ஆர்.ஓ., அலுவலகத்துல ஒப்படைச்சிருக்காரு,''''இது சம்பந்தமா, அறிவிப்பு பலகையிலும் வெளியிடலை.
யார்கிட்டயும் நகையை ஒப்படைக்கலையாம். சந்தேகப்பட்ட செக்யூரிட்டிகளில் சிலபேரு, பதிவாளருக்கு 'மொட்டை கடுதாசி' எழுதியிருக்காங்க. இதை தெரிஞ்சுக்கிட்ட பி.ஆர்.ஓ., அலுவலக அதிகாரி ஒருத்தரு, 'வேலையில இருந்து துாக்கிடுவேன்'ன்னு செக்யூரிட்டிகளை மிரட்டியிருக்காரு...''''அச்சச்சோ... அப்புறம்''''அஞ்சு பவுனையும் அமுக்கிட்டாங்க போலிருக்கு. இதே யுனிவர்சிட்டியில ஸ்டூடன்ஸ்க்கு ஒதுக்குன பஸ்களை, ஊழியர்களை அழைச்சிட்டு வர்றதுக்கு பயன்படுத்துறாங்களாம்.
சில பேரு, வசிக்கிற இடத்துக்கே வந்து, 'பிக்கப்' பண்ணச் சொல்றாங்களாம். ஒருத்தரு காரமடையை தாண்டி, பெட்ரோல் பங்க் வரை வரச் சொல்றாராம்,'' என்றபடி, 'புட் கோர்ட்'டுக்குள் நுழைந்த சித்ரா, ரெண்டு பிரட் ஆம்லேட் ஆர்டர் கொடுத்தாள்.டைனிங் டேபிளில் அமர்ந்த மித்ரா, ''நம்மூர்ல இருக்கிற பிரபல ஓட்டல் நிர்வாகம், ரூ.1. 07 கோடி வாடகை செலுத்தாம இருந்ததை, கார்ப்பரேஷன் உயரதிகாரிங்க கண்டுபிடிச்சிட்டாங்க.

வாடகை வசூலிக்க போனப்ப, 20 தவணையில செலுத்துறதா சொல்லியிருக்காங்க. முதல் தவணையா, 30 லட்சத்துக்கு செக் கொடுத்துருக்காங்களாம். மீதி பணத்தை இன்னும் மூணு தவணையில செலுத்தணும்னு கறாரா உத்தரவு போட்டிருக்காங்க,''''கட்டலைன்னா, ராத்திரியோட ராத்திரியா பொக்லைன் அனுப்பி, இடிக்கிற அளவுக்கு கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு துணிச்சல் இருக்கா என்ன?,'' என்றவாறு, பிரட் ஆம்லெட்டை சுவைக்க ஆரம்பித்தாள் சித்ரா.
''அக்கா, பிளாஸ்டிக் கேரி பேக் வச்சிருந்ததால, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிச்சாங்களாமே...'' என, இழுத்தாள் மித்ரா.''ஆமா, மித்து, கணபதியில இருக்கிற ஒரு ஓட்டல்ல, கார்ப்பரேஷன் சுகாதார ஆய்வாளர்கள் சாப்பிட்டுட்டு, பணம் கொடுக்காம வெளியே வந்துருக்காங்க. அவுங்களை வழிமறிச்சு, 60 ரூபாய் வாங்கியிருக்காங்க. ஓட்டலுக்குள் மறுபடியும் நுழைந்த சுகாதார ஆய்வாளர், அங்கிருந்த ஒன் யூஸ் பிளாஸ்டிக் கேரி பேக்கை பார்த்து, ஆயிரம் ரூபாய் 'பைன்' தீட்டிட்டாராம்,''''அப்படியா,'' என, வாயை பிளந்த மித்ராவை அழைத்துக் கொண்டு, கண்காட்சி அரங்கை விட்டு வெளியேறினாள் சித்ரா.
ஸ்கூட்டரில் வீடு நோக்கி புறப்பட்டனர்.மசக்காளிபாளையம் ரோட்டில் இருந்த, 'டாஸ்மாக்' மதுக்கடையை பார்த்த மித்ரா, ''பார் ஒதுக்குற பிரச்னையில சிக்குன மேலாளரை துாக்கிட்டாங்களாமே...'' என, நோண்டினாள்.''அவரு, திரும்பி வந்துட்டாரே...''''அப்படியா, என்னாச்சு, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்...''''பார் ஒதுக்குறதுல, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ரெண்டு பேருக்குள்ள வாய்க்கால் தகராறு. ஆலாந்துறை கடையை ஒதுக்குறதிலும், ஆளுங்கட்சி பெரிய புள்ளிகளுக்கு இடையே பிரச்னை வந்திருக்கு. இவுங்க பஞ்சாயத்துல, அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பிட்டு.
கடலுாரை சேர்ந்த ஒருத்தரை நியமிச்சிருக்காங்க.''கோயமுத்துாருக்கு 'டாஸ்மாக்' அதிகாரியா வரணும்னா, 20ல் இருந்து, 30 'ல'கரம் வரை கொடுக்கணுமாம்; ஒரு வருஷம் வேறெங்கும் மாத்த மாட்டோம்னு 'கியாரண்டி' இருக்காம். 'ல'கரம் கொடுத்துட்டு வந்ததால, 'பார்' பிரச்னையில சிக்குன அதிகாரி, கொந்தளிச்சிட்டாராம். மூணு நாள் கழிச்சு, மறுபடியும் அவருக்கே 'போஸ்டிங்' கொடுத்துட்டாங்க.
புதுசா நியமிச்சவரை, கடலுாருக்கே போகச் சொல்லிட்டாங்களாம்,''''இதனாலதான், டெண்டரை ஒரு மாசத்துக்கு தள்ளி வச்சாங்களா...''''வழக்கமா, பார் விஷயத்துல, ஆளுங்கட்சியினரும், தி.மு.க.,வினரும் சமரசமா போயிடுவாங்க. ரெண்டு தரப்புக்கும் பேச்சு நடந்துக்கிட்டு இருக்காம். 60:40 ஒதுக்கணும்னு சொல்றதுனால, இழுபறி நீடிக்குதாம்...'' என்றவாறு, வீட்டுக்கு முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X